Published : 11 Sep 2018 07:44 AM
Last Updated : 11 Sep 2018 07:44 AM

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் சார்பில் நாடு தழுவிய அளவில் முழு அடைப்பு போராட்டம்: டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆவேசம்; வடமாநிலங்களில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நேற்று நாடு முழுவதும் நடந்த முழு அடைப்புப் போராட்டத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. டெல்லியில் நடந்த போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆவேசமாகப் பேசினார்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு கட்டுப்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதனால் நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. எனவே பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தன. விலையைக் குறைத்தால் அதிக அளவில் வருவாய் இழப்பு ஏற்படும் என்பதால், அந்தக் கோரிக்கையை ஏற்க மத்திய அரசு மறுத்துவிட்டது.

இந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும் அதை கட்டுப்படுத்த கோரி யும் நேற்று நாடு தழுவிய முழு அடைப்புப் போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்தது. இதற்கு நாடு முழுவதும் 21 கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.

எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் ஏராளமான வணிக, தொழில் அமைப்புகளும், வணிகர் சங்கங்களும் ஆதரவு தெரிவித்தன. தொழிற் சங்கங்களும் முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவை தெரிவித்தன. சமாஜ்வாதி, ராஷ்டிரிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ், மதச் சார்பற்ற ஜனதா தளம் உட்பட பல கட்சிகள் முழு அடைப்புக்கு ஆதரவைத் தெரிவித்தன.

முழு அடைப்பின் காரணமாக வடஇந்தியாவின் பல மாநிலங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. தென்னிந்தியாவில் கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் முழு அடைப்பால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. நாட்டின் பல நகரங்களில் எதிர்க்கட்சியினர் ரயில் மறியல், சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர். கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பல மாநிலங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தன. அதேநேரம் மேற்கு வங்கம், உத்தரபிரதேசம், மிசோரம் மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.

தலைநகர் டெல்லியில் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல செயல்பட்டன. ராம்லீலா மைதானத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஒடிசா மாநிலத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. அங்கு 10 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.

இதேபோல கர்நாடகா, கேரளாவில் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டது. அரசு, தனியார் வாகனங்கள் எதுவும் அந்த மாநிலங்களில் இயக்கப்படவில்லை. பள்ளி, கல்லூரிகள் இயங்கவில்லை. ஆந்திரா, தெலங்கானா மாவட்டத்தில் இயல்புவாழ்க்கை ஓரளவுக்குப் பாதிக்கப்பட்டது.

இந்தப் போராட்டத்தின்போது பிஹாரின் ஜெஹனாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த 3 வயது சிறுமி மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் உயிரிழந்தார். போராட்டம் காரணமாக மருத்துவமனைக்குச் செல்வதற்கு தாமதம் ஏற்பட்டதால் அவர் இறந்தார் என பாஜக குற்றம் சாட்டியது.

முழு அடைப்பையொட்டி டெல்லியின் பல இடங்களில் காங்கிரஸார் சாலை மறியலில் ஈடு பட்டனர். மகாராஷ்டிரா, குஜராத், பிஹார் மாநி லங்களில் பெரிய அளவில் ரயில், சாலை மறி யல் போராட்டங்கள் நடைபெற்றன. மும்பை நக ரில் பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்பட வில்லை. ஆட்டோ, டாக்ஸிகள் வழக்கம்போல் ஓடின. முழு அடைப்பையொட்டி ஜெய்ப்பூர், சூரத், லக்னோ, பாட்னா, புவனேஸ்வர், ஆக்ரா, சண்டிகர், கயா, குவாஹாட்டி உட்பட பல முக்கிய நகரங்களில் மிக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணித் தொண்டர்கள் நாட்டின் பல்வேறு நகரங்களில் பெட்ரோல் பங்குகள் மீது தாக்குதல் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

ராகுல் காந்தி ஆவேசம்

பெட்ரோல், டீசல் உயர்வைக் கண்டித்து டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்றார். அப்போதுதொண்டர்கள் மத்தியில் அவர் ஆவேசமாக பேசியதாவது: நாட்டில் தலைவிரித்தாடும் எந்தப் பிரச்சினைக்கும் பிரதமர் மோடி வாய் திறப்பதில்லை. பெட்ரோல், டீசல் விலை உயர்வு விவகாரம், ரபேல் போர் விமான விவகாரம், விவசாயிகள் தற்கொலை, பெண்கள் மீதான தாக்குதல், வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட எதற்கும் அவர் பேசாமல் மவுனம் காத்து வருகிறார்.

70 ஆண்டுகளாக நடைபெறாததை 4 ஆண்டுகளில் நடத்துவோம் என்றார் பிரதமர் மோடி. அவர் சொன்னது உண்மைதான். 70 ஆண்டு களில் நடைபெறாத சம்பவங்கள் தற்போது நடந்தேறி வருகின்றன. ஓர் இந்தியர் மற்றொரு இந்தியரைத் தாக்குகிறார். எந்த இடத்துக்குப் போனாலும் மக்கள் பிரிந்து கிடக்கின்றனர். சாதி, மதம், இன, நிற அடிப்படையில் மக்களைப் பிரித்தாள்கிறார் மோடி. மக்கள் பிரச்சினைகளை தீர்க்க அவர் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக மகாத்மா காந்தி நினைவிடமான ராஜ்காட்டில் ராகுல் காந்தி அஞ்சலி செலுத்தி னார். மானசரோவர் ஏரியில் இருந்து கொண்டு வந்த புனித நீரை ராஜ்காட்டில் அவர் தெளித் தார். பின்னர் அவர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார். இதில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் பங்கேற்ற னர். அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் கூட்டணி கட்சிகளின் தலைவர்களான முலாயம் சிங் யாதவ், சரத்பவார், சரத் யாதவ் உட்பட பல்வேறு கட்சித் தலைவர்களும் அமர்ந்திருந்தனர். அங்கு ஏராளமான தொண்டர்களும் திரண்டிருந்தனர். அவர்கள் பாஜக தலைமையிலான மத்திய அரசை கண்டித்து கோ‌ஷம் எழுப்பினர்.

டெல்லியில் மற்றொரு இடத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலை வர் டி. ராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மத்திய அரசு காரணம் அல்ல

மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் டெல்லி யில் நேற்று கூறியதாவது: பெட்ரோல், விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் முழு அடைப்பை நடத்தி வருகின்றன. ஆனால் அவர்கள் எதிர்பார்த்த அளவுக்கு மக் களிடம் இருந்து ஆதரவு கிடைக்கவில்லை. இதனால் அவர்கள் வன்முறையைக் கையில் எடுத்துள்ளனர். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை உயர்ந் துள்ளது. மேலும் நமக்கு விநியோகிக்கப்படும் எண்ணையின் அளவு குறிப்பிட்ட அளவுக்கு என்று குறைந்துள்ளது. பெட்ரோல் விலை உயர்வால் மக்கள் அவதிப்படுகிறார்கள் என்பது எங்களுக்குத் தெரிந்திருக்கிறது. ஆனால் இதற்கான தீர்வு எங் கள் கைகளில் இல்லை. விலை உயர்வுக்கு மத்திய அரசு காரணம் அல்ல. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x