Published : 10 Sep 2018 02:17 PM
Last Updated : 10 Sep 2018 02:17 PM

உலகிலேயே உயரமான சிலை எது? - போட்டிபோடும் பாஜக மாநில அரசுகள்- சர்தார் வல்லபாய் சிலை அக்டோபரில் திறப்பு

குஜராத்தில் 182 மீட்டர் உயரத்தில் உருவாக்கப்பட்டு வரும் முன்னாள் உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேல் சிலையை அக்டோபர் மாதம் 31-ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். இந்த சிலை உலகிலேயே உயரமானது என குஜராத் அரசு தெரிவித்துள்ளது.

குஜராத்தில் சுதந்திரப் போராட்ட வீரரும் இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சருமான சர்தார் வல்லபாய் படேலின் சிலை 182 மீட்டரில் உருவாக்கப்பட்டு வருகிறது. குஜராத் முதல்வராக மோடி பதவி வகித்தபோது, 2013-ம் ஆண்டு இந்த சிலை அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக 2 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்படுகிறது.

வடோதராவில் நர்மதா அணைக்கருகே, ஆற்றுத் தீவான சாதுபேட் என்ற இடத்தில் இந்தச் சிலை நிறுவப்பட ஏற்பாடு நடந்து வருகிறது. சிலை அமைக்கும் பணி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்தச் சிலையைச் சுற்றி 20,000 சதுரமீட்டர் பரப்பில் செயற்கை ஏரியும் அமைக்கப்படுகிறது.

இதுகுறித்து குஜராத் முதல்வர் விஜய் ரூபானி கூறுகையில் ‘‘நாட்டின் பல பகுதிகளில் இருந்து பெறப்பட்ட இரும்பு, மண், தண்ணீர் கொண்டு சர்தார் வல்லபாய் சிலை உருவாக்கப்பட்டு வருகிறது. 182 மீட்டர் உயரத்தில் உருவாகி வரும் இந்த சிலை நாட்டின் ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது. சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளான, அக்டோபர் 31-ம் தேதி இந்த சிலையை பிரதமர் மோடி திறந்து வைக்கவுள்ளார். சர்தார் வல்லபாய் சிலை நாட்டிலேயே மிக உயர்ந்த சிலையாக இருக்கும்’’ எனக் கூறினார்.

இதனிடையே, இதற்கு போட்டியாக மகாராஷ்டிர பாஜக அரசு சத்ரபதி சிவாஜியின் பிரமாண்ட சிலையை உருவாக்கி வருகிறது. தொடக்கத்தில் 98 மீட்டர் உயரம் கொண்டதாகத்தான் இது திட்டமிடப்பட்டது. அதாவது சுதந்திர தேவி சிலையைவிட உயரம்.

ஆனால், வல்லபாய் படேலின் சிலைவிடவும், தற்போது, 192 மீட்டர் உயரத்தில் சிவாஜியின் சிலையை அமைக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், சீனாவில் வசந்த ஆலயத்தில் உள்ள புத்தரின் சிலை 208 மீட்டர் கொண்டது என்பதால் அதை விடவும் உயரமாக சிவாஜி சிலையை உருவாக்க திட்டமிடப்பட்டது. வீர சிவாஜியின் சிலை தற்போது 212 மீட்டர் உயரத்தில் வடிவமைக்கப்படுகிறது. இதன் மூலம், உயரமான சிலைகள் உள்ள நாடுகளின் பட்டியலில் விரைவில் இந்தியா முதலிடம் வகிக்கப்போகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x