Published : 02 Sep 2018 07:27 PM
Last Updated : 02 Sep 2018 07:27 PM

5-ம் வகுப்பு தகுதியுடைய 62 ‘பியூன்’ வேலைக்கு 82,000 பட்டதாரிகள் விண்ணப்பம்

 5-ம்வகுப்பு படித்தால் போதுமானதாகக் கருதப்படும் பியூன் வேலைக்கான 62 காலியிடங்களுக்கு 82 ஆயிரம் பட்டதாரி இளைஞர்கள் விண்ணப்பம் செய்துள்ளது வேலையின்மையின் உச்சத்தைக் காட்டுகிறது

உத்தரப் பிரதேச காவல் துறையில், தொலைத்தொடர்பு துறையில் காலியாக இருக்கும் 62 பியூன் இடங்கள் நிரப்ப விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. இதற்காக 81 ஆயிரத்து 700 பட்டதாரி இளைஞர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர். இதன் ஊதியம் ரூ.20 ஆயிரமாகும்.

நாட்டில் வேலையின்மை குறைந்துவிட்டதாகவும், ஆண்டுக்கு ஆண்டு வேலைவாய்ப்பு பெறுபவர்கள் அதிகரித்து வருவதாக மத்திய அரசு கூறி வருகிறது. ஆனால், வேலையின்மையின் உச்சத்தால் டாக்டர் (முனைவர்) பட்டம் பெற்றவர்கள்கூட பியூன் வேலைக்கு விண்ணப்பிக்கும் சூழல் வந்துவிட்டது.

இது குறித்து உத்தரப்பிரதேச காவல் துறையின் தொலைத்தொடர்பு துறையின் ஐஜி பிரமோத் குமார் கூறுகையில், ''எங்கள் துறையில் கடைநிலையில் உள்ள செய்தி அனுப்பும், பெறும் பொறுப்பு, அலுவலக உதவியாளர் ஆகியவற்றில் 64 காலியிடங்கள் இருப்பது குறித்து விளம்பரம் செய்திருந்தோம்.

இந்த வேலைக்காக 50 ஆயிரம் பட்டதாரிகள், 28 ஆயிரம் முதுகலைப் பட்டதாரிகள், டாக்டர் பட்டம் பெற்ற 3,700 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். தகுதிக்கும் அதிகமான விண்ணப்பங்கள் வந்துள்ளதால், தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஏறக்குறைய மொத்தமுள்ள 62 காலியிடங்களுக்கு 93,500 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.

இதில் எம்.சி.ஏ, எம்.பி.ஐ, டாக்டர் பட்டம் பெற்றவர்கள் வரை அடங்கும்.

முதலில் இந்த பியூன் பணிக்கு வருபவர்களுக்கு சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். இப்போது எழுத்துத் தேர்வும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

62 காலியிடங்களுக்கு மிக அதிகமான விண்ணப்பங்கள் வந்துள்ளதால், இத்தனை பேருக்கும் தேர்வு நடத்த எங்களுக்கு வசதியில்லை, நிதியில்லை. ஆதலால், நிதி கேட்டு அரசுக்குக் கடிதம் எழுதியிருக்கிறோம். தற்போதுள்ள நிலையில், வேலைக்கான தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது'' எனத் தெரிவித்தார்.

இளைஞர்களிடையே வேலையின்மை அதிகரித்துள்ளது குறித்து சமாஜ்வாதி கட்சியின் செய்தித்தொடர்பாளர் அப்துல் ஹபிஸ் காந்தி கூறுகையில், ''வேலைக்குத் தகுதியான இளைஞர்கள் இல்லை என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசிய கருத்து கண்டிக்கத்தக்கது. தகுதியான இளைஞர்களுக்கு வேலை கொடுக்கத்தான் அரசுக்குத் தகுதியில்லை'' எனத் தெரிவித்தார்.

இதற்குப் பதிலடிகொடுக்கும் விதமாக உ.பி. பாஜக தலைவர் ராகேஷ் திரிபாதி கூறுகையில், ''கடந்த சமாஜ்வாதி ஆட்சியில், இளைஞர்களுக்கு வேலை என்பது சாதி, பணத்தின் அடிப்படையிலும் தரப்பட்டது. இப்போது பாஜக ஆட்சிக்கு வந்தபின்தான் வெளிப்படைத்தன்மையுடன் நடக்கிறது'' எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x