Last Updated : 02 Sep, 2018 06:49 PM

 

Published : 02 Sep 2018 06:49 PM
Last Updated : 02 Sep 2018 06:49 PM

ஒருவர் ஒழுக்கமாக இருந்தால் சர்வாதிகாரியாக சித்தரிக்கப்படுகிறார்: எதிர்க்கட்சிகளை சாடிய மோடி

 இன்றைய சூழலில் அரசியலில் ஒருவர் ஒழுக்கமாக நடந்து கொண்டால், அவர் சர்வாதிகாரியாகச் சித்தரிக்கப்படுகிறார் என்று பிரதமர் மோடி எதிர்க்கட்சிகளை மறைமுகமாகச் சாடினார்.

குடியரசு துணைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான வெங்கய்ய நாயுடு, “ மூவிங் ஆன்..மூவிங் பார்வேர்ட்: ஏ இயர் இன் ஆபிஸ்” என்ற தலைப்பில் புத்தகம் எழுதியுள்ளார். அந்த நூல் வெளியிட்டு விழா இன்று டெல்லியில் நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், எச்.டி.தேவகவுடா, மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன், நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, மாநிலங்களவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆனந்த் சர்மா, மத்திய அமைச்சர்கள், எம்.பி.க்கள், மூத்த அதிகாரிகள், விஐபிக்கள் எனப் பலர் பங்கேற்றனர்.

நூல் அறிமுகம் செய்துவைத்த பிரதமர் மோடி பேசியதாவது:

''வெங்கய்ய நாயுடுவுக்குப் பொறுப்புகள் எப்போதெல்லாம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் தொலைநோக்கு சிந்தனை கொண்ட தலைவராகச் செயல்பட்டுள்ளார். அவர் மிக ஒழுக்கமான அரசியல் தலைவர்.

ஆனால், தற்போது நாட்டில் நிலவும் சூழலில் அரசியலில் ஒழுக்கமாக ஒருவர் இருந்தால், அதை ஜனநாயகத்துக்கு விரோதமானது என்றும், அவரை சர்வாதிகாரி என்றும் அழைக்கிறார்கள். ஒட்டுமொத்த அகராதியும் திறந்தே இருக்கிறது. ஒழுக்கம் என்பதை வெங்கய்ய நாயுடு பின்பற்றி வாழ்ந்து வருகிறார்.

வெங்கய்ய நாயுடுவின் நேரம் தவறாமை மற்றும் ஒழுக்கத்தைப் பற்றிக் கூற வேண்டுமானால், நான் அவருடன் இணைந்து வெளிநாடுகளுக்குப் பயணம் சென்றிருந்தேன். வெங்கய்ய நாயுடு  ஒருபோதும் கைகளில் கடிகாரம் அணிய மாட்டார், பேனா வைத்துக்கொள்ளமாட்டார், பர்ஸ் வைத்திருக்கமாட்டார். ஆனால், கையில் கடிகாரம் கட்டாமல்கூட, உரிய நேரத்துக்கு எங்கு செல்ல வேண்டுமோ அங்கு சென்றுவிடுவார். ஒருவேளை நிகழ்ச்சி குறித்தநேரத்தில் முடியவிட்டாலும்கூட, அவர் வருத்தப்படாமல் பொறுமையாக இருப்பார். ஒழுக்கம் என்பது அவருக்கு இயல்பாகவே இருக்கிறது.

தொலைநோக்குச் சிந்தனை கொண்டவராக விளங்கும் வெங்கய்யா நாயுடு, சாமானிய மக்களை முன்னேற்ற தீவிர ஆர்வமாக இருந்து வருகிறார். முன்னாள் பிரதமர் அடல்பிஹாரி வாஜ்பாய், மிக முக்கியமான துறையான, ஊரக மேம்பாட்டுத் துறையை வெங்கய்யாவுக்கு அளித்து கிராமங்கள் முன்னேற்றத்தை ஊக்குவிக்கக் கூறினார்.

கிராமங்களை நகரத்துடன் இணைக்கும் வகையில் சாலை அமைக்கும் கிராம சதக் திட்டத்தை வெங்கய்ய நாயுடு தொடங்கி வைத்தார். இது எம்.பி.க்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்து, கிராமப்புறச்சாலைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

50 ஆண்டுகால பொதுவாழ்வில் வெங்கய்ய நாயுடு மிகவும் ஒழுக்கமாக, நேர்மையாக, தான் ஏற்ற பதவிகளில் மிகவும் பொறுப்புடன் நடந்து கொண்டவர்.

மாநிலங்களவை எந்தவிதமான இடையூறின்றி நடந்துவிட்டால் யாரும் அதன் மீது கவனத்தைச் செலுத்தமாட்டார்கள். யார் அவைத் தலைவர் என்று கவனிக்கமாட்டார்கள். ஆனால், அவை சரியாக நடக்காதபோதுதான், அவைத்தலைவர் யார் என்று கவனமாகப் பார்ப்பார்கள். அவை முறையாக நடந்துவிட்டால், குடியரசு துணைத் தலைவரின் திறமையும், தகுதிகளும் வெளிப்படையாகத் தெரியாது.

வெங்கய்யா நாயுடு பன்முக மொழிகளைக் கையாண்டு பேசுவதில் வல்லவர், ஆங்கிலம், தெலுங்கு, இந்தியில் நன்றாகப் பேசக்கூடியவர். வெங்கய்ய நாயுடு நாடாளுமன்றத்துக்கு வெளியேயும், உள்ளேயும் சிறப்பாகப் பணியாற்றக்கூடியவர்''.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x