Last Updated : 02 Sep, 2018 04:57 PM

 

Published : 02 Sep 2018 04:57 PM
Last Updated : 02 Sep 2018 04:57 PM

உச்ச நீதிமன்றம் என்ன ‘பிக்னிக் ஸ்பாட்டா’; எங்களை என்ன நினைத்தீர்கள்?- வருமான வரித்துறையை எச்சரித்த நீதிபதிகள்

 உச்ச நீதிமன்றத்தில் தவறான அறிக்கையைத் தாக்கல் செய்த வருமான வரித் துறையை கடுமையாகச் சாடிய நீதிபதிகள், உச்ச நீதிமன்றமா அல்லது பிக்னிக் வந்து செல்லும் இடம் என்று நினைத்தீர்களா. நீதிமன்றத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தெரிந்து கொள்ளுங்கள் கடுமையாக எச்சரித்து அனுப்பினார்கள்.

மேலும், தவறான தகவல்களை அளித்தமைக்காக ரூ.10 லட்சம் அபராதத்தைச் செலுத்த நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஹப்பூர் பில்குவா மேம்பாட்டு ஆணையம் என்பது உத்தரப் பிரதேச நகரத் திட்டமிடல் மற்றும் மேம்பாட்டுச் சட்டத்தின் கீழ் உள்ள அமைப்பாகும்.

இந்த ஹப்பூர் பில்குவா மேம்பாட்டு ஆணையம், வருமானவரிச் சட்டத்தில் இருந்து விலக்கு கேட்டு வருமானவரித்துறையிடம் விண்ணப்பித்து இருந்தது. ஆனால், அதைக் கடந்த 2006-ம் ஆண்டு வருமான வரித்துறை ஆணையர் அந்த விண்ணப்பத்தை நிராகரித்து, தொண்டு நிறுவனத்தின் கீழ் வராது என்று உத்தரவிட்டார். இதை எதிர்த்து ஹப்பூர் பில்குவா மேம்பாட்டு ஆணையம், வருமான வரித்துறை தீர்ப்பாயத்தில் மனு செய்து வருமான வரி விலக்கு பெற்றது.

இதை எதிர்த்து வருமானவரித்துறையினர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ததில், வருமானவரித்துறை தீர்ப்பாயத்தின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது. இந்நிலையில், ஹப்பூர் பில்குவா மேம்பாட்டு ஆணையம், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கடந்த 2016,ம் ஆண்டு ஆகஸ்ட் 29-ம் தேதி மேல்முறையீடு செய்தது.

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த மனு மூத்த நீதிபதி மதன் பி.லோக்கூர் தலைமையில் நீதிபதிகள் எஸ்.அப்துல் நசீர், தீபக் குப்தா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, வருமான வரித்துறை சார்பில் ஆவணங்களையும், விளக்கங்களையும் தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் கேட்கப்பட்டது. மேலும், தாக்கல் செய்த ஆவணங்களிலும் தவறான விவரங்கள் கூறப்பட்டு இருந்தன.

இதைக் கேட்டவுடன் நீதிபதி மதன் பி.லோக்கூர் தலைமையிலான நீதிபதிகள் கடும் கோபமடைந்து, வருமான வரித்துறை சார்பில் ஆஜராகிய வழக்கறிஞரையும் ,மத்திய அரசின் வழக்கறிஞரையும் கடுமையாகச் சாடினார்கள்.

நீதிபதிகள் கூறுகையில், ''இந்த வழக்கு விசாரணைக்கு வந்து 596 நாட்கள் ஆகின்றன. ஒவ்வொரு முறை வாய்தாவுக்கு வரும் போதும் ஏதாவது காரணங்களைக் கூறி அவகாசம் கேட்கிறீர்கள். உங்களுக்கு ஆவணங்களைத் தாக்கல் செய்ய அவகாசம் போதவில்லையா, அல்லது விளக்கம் கொடுக்க முடியவில்லையா?

இதை உச்ச நீதிமன்றம் என்று நினைத்தீர்களா அல்லது சுற்று செல்லும் பிக்னிக் இடம் என்று கருதினீர்களா. நீதிமன்றம் என்ற நினைப்புடன் நடந்து கொள்ளுங்கள். இதுதான் நீதிமன்றத்தை நீங்கள் அணுகும் விதமா?. உச்ச நீதிமன்றத்தில் இப்படியெல்லாம் உங்கள் சவுகரியத்துக்கு அணுக முடியாது. இத்தனை நாட்களா ஆவணங்கள் அளிக்கவும், உரிய விளக்கம் அளிக்கவும் தாமதம் செய்த வருமானவரித்துறைக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கிறோம்.

இந்த விஷயத்தை மத்திய அரசும், வருமானவரித்துறை ஆணையரும் மிகவும் மேம்பாக அணுகியதை நினைத்து வேதனைப்படுகிறோம், அதிர்ச்சி அடைகிறோம்'' என்று தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x