Last Updated : 02 Sep, 2018 02:40 PM

 

Published : 02 Sep 2018 02:40 PM
Last Updated : 02 Sep 2018 02:40 PM

‘ஆர்டிஐ சட்டத்தில் தகவல் கேட்டால் ஜிஎஸ்டி வரி’: மனுத் தாக்கல் செய்த சமூக ஆர்வலர் அதிர்ச்சி

 தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு செய்து தகவல்கேட்ட மனுதாரருக்கு, தகவல் அளிக்க ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டும் என்று கூறியதால் மனுதாரர் அதிர்ச்சி அடைந்தார்.

மத்தியப் பிரதேசம் வீட்டுவசதி மற்றும் கட்டுமானக் மேம்பாட்டு வாரியத்திடம் இருந்து பல்வேறு தகவல்களைக் மனுதாரர் கேட்டிருந்தார். அப்போது அவருக்கு ஜிஎஸ்டி வரி செலுத்தினால் மட்டுமே தகவல் அளிக்கப்படும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

மக்களுக்கு வெளிப்படைத் தன்மையை தெரிவிக்கும் வகையில் கொண்டுவரப்பட்டதுதான் தகவல் அறியும் உரிமைச்சட்டம், ஆனால், அதில் மனுத் தாக்கல் செய்பவர்களைச் சிக்கலுக்கு உள்ளாக்கும் வகையில் தற்போது அவர்களுக்கு ஜிஎஸ்டி வரி செலுத்த நெருக்கடி கொடுக்கப்படுகிறது.

ஊழலுக்கு எதிரான அமைப்பு நடத்தும் சமூக ஆர்வலர் அஜய் துபே என்பவர் மத்தியப் பிரதேசத்தில் உள்ள ரியல் எஸ்டேட் ஒழுங்கு முறை ஆணையத்தின் அலுவலகத்தைப் புனரமைத்தது, புதிய கட்டிடங்கள் கட்டியது ஆகியவற்றுக்கான செலவு எவ்வளவு எனக் கேட்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இதற்கு மத்தியப் பிரதேசம் வீட்டுவசதி மற்றும் கட்டுமானக் மேம்பாட்டு வாரியம் மனுதாரரிடம் தங்களுக்கு தேவையான சேவையைப் பெறுவதற்கும், ஆவணங்கள் பெறுவதற்கும் 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டும் எனத் தெரிவித்தது.

இதன்படி ஆவணங்கள் 18 பக்கங்களை நகலெடுக்க ரூ.36 கட்டணமும், மாநில, மத்திய ஜிஎஸ்டி வரி ரூ.7 என மொத்தம் ரூ.43 கட்டணமாகச் செலுத்தியுள்ளார்.

இது குறித்து சமூக ஆர்வலர் அஜெய் துபே நிருபர்களிடம் கூறுகையில், ''தகவல் அறியும் உரிமைச் சட்டமே வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வருவதற்குத்தான். ஆனால், அதில் மனுதாரருக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் அரசை ஜிஎஸ்டி வரி வசூலிப்பது நியாயமில்லை சட்டவிரோதம். என்னிடம் ஜிஎஸ்டி வரி வசூலித்தது குறித்து மேல்முறையீடு செய்யப்போகிறேன்'' எனத் தெரிவித்தார்.

கடந்த ஜனவரி மாதம் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், 2005, ஆர்டிஐ சட்டத்தின்படி, ஆர்டிஐ மனுவில் கேட்கப்படும் கேள்விகளுக்கு அளிக்கப்படும் தகவல்கள் சேவையில் வந்தாலும், அதற்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், கடந்த பிப்ரவரி மாதம் மத்திய தகவல் ஆணையம் ஒரு வழக்கு விசாரணையின் போது, பிறப்பித்த உத்தரவில் ஆர்டிஐ மனுவின் கீழ் தகவல்களை அளிக்கும் பொதுத்துறை நிறுவனங்கள், அரசுகள் மனுதாரருக்குத் தகவல்களை அளிக்கக் கட்டணம் வசூலிக்கக்கூடாது. தகவல்கள் விற்பனை செய்யக்கூடாது. இதைச் சேவை என்ற ரீதியில்கூட எடுக்கக்கூடாது. மக்களுக்கு வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரும் சட்டமாகும். இதற்குச் சேவைக்கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x