Last Updated : 02 Sep, 2018 12:37 AM

 

Published : 02 Sep 2018 12:37 AM
Last Updated : 02 Sep 2018 12:37 AM

மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக மாநிலக் கட்சிகளை ஒன்று சேர்க்கும் குமாரசாமி: சந்திரபாபு நாயுடு, மாயாவதி உள்ளிட்டோருடன் ஆலோசனை

வருகிற மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக மாநிலக் கட்சிகளை ஒன்று சேர்க்கும் முயற்சியில் கர்நாடக முதல்வர் குமாரசாமி இறங்கியுள்ளார்.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் மஜத மாநில தலைவர் குமாரசாமி காங்கிரஸுடன் இணைந்து ஆட்சி அமைத்துள்ளார். தனது பதவியேற்பு விழாவில் நாடு முழுவதும் உள்ளபாஜகவுக்கு எதிரான கட்சிகளின் தலைவர்களை பங்கேற்க செய்து,வலுவான கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் இறங்கினார்.

கடந்த மாதம் டெல்லி சென்ற குமாரசாமி அம்மாநில முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். இதனிடையே தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் பெங்களூரு வந்து முன்னாள் பிரதமர் தேவகவுடாவை சந்தித்து ஆலோசித்தார். இதேபோல கர்நாடகாவில் மஜதவுடன் கூட்டணிஅமைத்துள்ள பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதியையும் கடந்த இரு மாதங்களாக தொடர்ந்து சந்தித்து பேசி வருகிறார். இந்த சந்திப்புகளின்போது மத்திய அரசுக்கு எதிரான மாநில கட்சிகள் மக்களவைத் தேர்தலில் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

இந்நிலையில் நேற்று முன் தினம்ஆந்திர மாநிலம் விஜயவாடாவுக்கு சென்ற குமாரசாமி அங்குள்ள கனகதுர்கா அம்மன் கோயிலில் சிறப்பு பூஜை செய்து, வழிபாடு நடத்தினார். பின்னர் விஜயவாடாவுக்கு வந்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை, குமாரசாமி சந்தித்து 40 நிமிடங்கள் பேசினார்.

இதுகுறித்து குமாரசாமி நேற்று பெங்களூருவில் கூறியதாவது: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன்,  மக்களவைத் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினேன். தேசிய அளவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு எதிராக செயல்பட வேண்டும் என முடிவெடுத்தோம்.

எனவே மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக மாநிலக் கட்சிகளை ஒன்று சேர்க்க வேண்டியது அவசியமாகும். அப்போதுதான் நாட்டில் ஜனநாயகத்தையும், ஏழை எளிய மக்களின் வாழ்வையும் காப்பாற்ற முடியும்.

எங்கள் கூட்டணியின் பிரதமர் யார் என்பது குறித்து ஆலோசிக்கவில்லை. அது மக்களவைத் தேர்தல் முடிந்த பிறகு முடிவு செய்துக் கொள்ளலாம். ஆனால் மோடியை மீண்டும் பிரதமராக தொடர அனுமதிக்கக் கூடாது. இவ்வாறு குமாரசாமி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x