Published : 02 Sep 2018 12:34 AM
Last Updated : 02 Sep 2018 12:34 AM

அமீரகத்தின் ரூ.700 கோடி நிதியுதவி கிடைக்கும்: கேரள முதல்வர் பினராயி விஜயன் நம்பிக்கை

கேரள வெள்ள நிவாரணத்துக்காக ஐக்கிய அரபு அமீரகம் வழங்குவதாக கூறிய ரூ.700 கோடி விரைவில் கிடைக்கப் பெறும் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கேரளாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் பணியாற்றிய ஐஏஎஸ் அதிகாரிகளுக்கான பாராட்டு விழா திருவனந்தபுரத்தில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பினராயி விஜயன் கூறியதாவது:

கேரளாவில் அண்மையில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டபோது, தன்னலம் கருதாமல் களத்தில் இறங்கி நிவாரணப் பணிகளை செய்த ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களின் இந்த சேவை, கேரள மக்களால் என்றென்றும் நினைவுகூரப்படும். கேரளாவின் வெள்ள நிவாரணத்துக்காக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து நிதியுதவிகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. அதேபோல், வெளிநாடுகளில் இருந்தும் நிதியுதவிக்கான அறிவிப்புகள் வருகின்றன. குறிப்பாக, ஐக்கிய அரபு அமீரகம் ரூ.700 கோடியை வழங்க முன்வந்துள்ளது. ஆனால், அந்த நிதியுதவியைப் பெற மத்திய அரசு மறுத்து வருகிறது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு, தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளும் என நம்புகிறேன். எனவே, ஐக்கிய அரபு அமீரகத்தின் நிதியுதவி கேரளாவுக்கு விரைவில் கிடைக்கும் என பினராயி விஜயன் தெரிவித்தார்.

முன்னதாக, கேரள வெள்ள நிவாரணத்துக்காக ரூ.700 கோடியை ஐக்கிய அரபு அமீரகம் வழங்கவுள்ளதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்திருந்தார். எனினும், வெளியுறவுக் கொள்கையின்படி, அயல்நாடுகளின் நிதியுதவியை இந்தியா ஏற்காது என மத்திய அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x