Last Updated : 02 Sep, 2018 12:30 AM

 

Published : 02 Sep 2018 12:30 AM
Last Updated : 02 Sep 2018 12:30 AM

தேசிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தை நிராகரித்த டெல்லி அரசு: தமிழக அரசின் நிலைப்பாடு என்ன?

மத்திய அரசின் தேசிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அமல்படுத்த டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான அரசு மறுத்துள்ளது. இதுபோன்ற திட்டத்தை தாம் அறிமுகப்படுத்த உள்ளதாகவும் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் சமர்ப்பிக்கப்பட்ட மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில், தேசிய மருத்துவக் காப்பீட்டு திட்டம் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், 10 கோடி குடும்பங்கள் தலா ரூ.5 லட்சம் வரையிலான காப்பீட்டை பெற முடியும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், இந்தக் காப்பீட்டுத் திட்டத்தை மேற்கு வங்கம், ஒடிசா மற்றும் பஞ்சாப் மாநில அரசுகள் ஏற்க முடியாது என அப்போதே அறிவித்தன. தங்கள் மாநிலங்களில் இதுபோன்ற காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் அந்த மாநிலங்கள் தெரிவித்தன.

இந்நிலையில், இந்தத் திட்டத்தை தற்போது டெல்லி அரசும் ஏற்க மறுத்துள்ளது. டெல்லி மக்களுக்காக தமது அரசே ஒரு புதிய மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்த இருப்பதாக அம்மாநில முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார். ‘முக்கிய மந்திரி ஆம் ஆத்மி ஸ்வஸ்திய பீமா யோஜ்னா’ எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த திட்டம் குறித்து ஆய்வு நடந்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து, ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் டெல்லி அரசு உயரதிகாரிகள் கூறியதாவது:

மத்திய அரசின் திட்டமானது, பொருளாதார அடிப்படையில் 2011-ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுக்கின்படி அமலாக

வுள்ளது. இதில், டெல்லியில் சுமார் 25 சதவீதம் மக்கள் மட்டுமே பயன் பெறுவார்கள். இவ்வாறு அல்லாமல், மேலும் 50 சதவீத மக்களுக்கு பலன் அளிக்கும்படி ஒரு காப்பீட்டுத் திட்டத்தை உருவாக்க முதல்வர் கேஜ்ரிவால் திட்டமிட்டு வருகிறார் என அவர்கள் தெரிவித்தனர்.

தமிழகத்தின் நிலைப்பாடு என்ன?

தேசிய மருத்துவ நலக் காப்பீட்டு திட்டத்துக்காக மத்திய அரசுடன் இதுவரை சுமார் 20 மாநிலங்கள் கையெழுத்திட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதில் பாஜக ஆளும் மாநிலங்கள் அனைத்தும் இடம்பெற்றுள்ளன. இந்து தமிழ் நாளிதழுக்கு கிடைத்த தகவலின் படி, மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தில் இத்திட்டத்துக்காக தமிழக அரசு இன்னும் கையெழுத்திடவில்லை எனத் தெரிகிறது.

அதேசமயத்தில், தமது முதலமைச்சர் மருத்துவக் காப்பீடு திட்டத்துடன் இணைத்து மத்திய அரசின் தேசிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தையும் செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில், மத்திய அரசு மற்றும் தமிழக அரசின் பங்களிப்புகள் குறித்த பேச்சுவார்த்தை முடிவடையும் தருவாயில் உள்ளது. எனவே, இந்த ஒப்பந்தத்தில் தமிழக அரசு விரைவில் கையெழுத்திடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x