Published : 31 Aug 2018 05:20 PM
Last Updated : 31 Aug 2018 05:20 PM

இந்தியர்களுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.81; வெளிநாடுகளில் ரூ.34க்கு ஏற்றுமதி: ஆர்டிஐயில் அதிர்ச்சித் தகவல்

இந்தியாவில் உள்ள மக்களுக்கு ஒரு லிட்டர் பெட்ரோலை ரூ.81க்கு விற்பனை செய்யும் எண்ணெய் நிறுவனங்கள், வெளிநாடுகளுக்கு பெட்ரோல் ஒரு லிட்டரை 34 ரூபாய்க்கு ஏற்றுமதி செய்துள்ளது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது.

சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை உயர்வாலும், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்புக் குறைவாலும் எண்ணெய் நிறுவனங்கள் கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலையைக் கடுமையாக உயர்த்தி வருகின்றன.

இதனால், சென்னையில் பெட்ரோல் விலை லிட்டர் ரூ.81.58 காசுகளுக்கும், டீசல் விலை லிட்டர் ரூ.74.18 காசுகளுக்கும் விற்பனையாகி வருகிறது. இந்தக் கடுமையான விலை ஏற்றத்தால், அத்தியாவசியப் பொருட்கள், காய்கறிகள், பழங்கள், பால் பொருட்கள் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சாமானிய மக்கள், நடுத்தர மக்கள் பெட்ரோல் விலை உயர்வால் மாதாந்திர பட்ஜெட்டில் பெரிய பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் கடுமையாக மத்திய அரசை விமர்சித்துள்ளன. காங்கிரஸ் கட்சி வெளியிட்ட அறிவிப்பில் கூட, கடந்த 2014-ம் ஆண்டில் பாஜக ஆட்சிக்கு வந்த பின், பெட்ரோல் மீது உற்பத்தி வரி 211.7 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது, டீசல் மீது 433.06 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 12 முறை உற்பத்தி வரி ஏற்பட்டுள்ளது என சாடியுள்ளது.

இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ரோகித் சப்ரவால் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெட்ரோல், டீசல் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் விலையைக் கேட்டிருந்தார். கடந்த 3 மாதங்களுக்கு முன் தாக்கல் செய்த மனுவுக்கு தற்போதுதான் மத்திய அரசின் மங்களூரு பெட்ரோலிய சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் பதில் அளித்துள்ளது.

அதில் 2018, ஜனவரி 1-ம் தேதி முதல் 2018,ஜூன் 30-ம் தேதிவரை சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோல், டீசலை ஹாங்காங், மலேசியா, மொரிஷியஸ், சிங்கப்பூர், ஐக்கிய அரசு அமீரகம் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது.

இந்த நாடுகளுக்கு பெட்ரோல் ஒருலிட்டர் ரூ.32 முதல் ரூ.34 வரையிலும், டீசல் ஒரு லிட்டர் ரூ.34 முதல் ரூ.36 வரையிலும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலை விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்ந்து வரும் நிலையில், வெளிநாடுகளுக்கு மிக மிக மலிவாக, பாதிவிலைக்கு மத்திய அரசு விற்பனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து சமூக ஆர்வலர் ரோகித் சப்ரவால் கூறுகையில், ''இந்தியாவில் ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையிலான காலத்தில் பெட்ரோல் லிட்டர் ரூ.69 முதல் ரூ.75 விலையிலும், டீசல் லிட்டர் ரூ.59 முதல் ரூ.67 வரையிலும் விற்பனையானது. ஆனால், அந்த நேரத்தில் வெளிநாடுகளுக்கு பெட்ரோல் ஒருலிட்டர் ரூ.32 முதல் ரூ.34 வரையிலும், டீசல் ஒரு லிட்டர் ரூ.34 முதல் ரூ.36 வரையிலும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது கண்டு அதிர்ச்சி அடைந்தேன்.

பெட்ரோல், டீசல் விலையைத் தொடர்ந்து உயர்த்திக் கொண்டே செல்வது நாட்டின் பொருளாதாரத்தில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். இந்தியாவில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோல், டீசல் ஆகியவை அமெரிக்கா, ஈராக், இங்கிலாந்து, இஸ்ரேல், ஜோர்டான், ஆஸ்திரேலியா, ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதியாகி வருகிறது'' எனத் தெரிவித்தார்.

இந்தியாவைப் பொறுத்தவரை பெட்ரோலிய கச்சா எண்ணெயை அதிக அளவு இறக்குமதி செய்யும் நாடுகளில் முக்கிய நாடாகவும், அதேசமயம் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோல், டீசலை ஏற்றுமதி செய்யும் நாடுகளிலும் முன்னணியில் இருந்து வருகிறது என்று இந்தியா டுடே தெரிவித்துள்ளது.

உலகளவில் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடுகள் வரிசையில் இந்தியா 10-வது இடத்தில் உள்ளது. கடந்த 2017-ம் ஆண்டில் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியம் 24100 கோடி டாலருக்கு இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது. இது சர்வதேச சந்தையில் 3.9 சதவீதமாகும்.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு உயர்ந்த தரத்தில் பெட்ரோலியப் பொருட்களை சுத்திகரித்துக் கொடுத்தால், அதற்கு ஏற்றார்போல் விலை கிடைக்கும் என்பதால் இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது.

இது தொடர்பாக காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலாவும் இந்தியில்  ட்விட் செய்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x