Published : 30 Aug 2018 08:44 AM
Last Updated : 30 Aug 2018 08:44 AM

நலிந்த பிரிவினருக்காக தொடர்ந்து போராடி வரும் 5 இடதுசாரி ஆதரவாளர்கள்

மகாராஷ்டிர மாநிலம் பீமா கோரேகானில் நடந்த கலவர வழக்கில் கைதான 5 இடதுசாரி ஆதரவாளர்கள், சமூகத்தில் நலிந்த பிரிவினரின் முன்னேற்றத் துக்காகவும், அவர்களது வாழ்க்கைத் தரம் உயரவும் தொடர்ந்து பாடுபட்டு வருபவர்கள் என்று தெரியவந்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் பீமா கோரேகானில் நடந்த கலவர வழக்கு, பிரதமர் மோடியைக் கொல்ல சதித்திட்டம் தீட்டியது தொடர்பாக நேற்று முன்தினம் இடதுசாரி ஆதரவாளர்கள் 5 பேர் வீடுகளில் புனே போலீஸார் திடீர் சோதனை நடத்தினர். பின்னர் இடதுசாரி ஆதரவாளர்களான கவிஞர் வரவர ராவ், வெர்னான் கோன்சால்வ்ஸ், அருண் பெரைரா, சுதா பரத்வாஜ், கவுதம் நவ்லகா 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் குறித்த விவரம்.

கவிஞர் வரவர ராவ்: ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த புரட்சிக் கவிஞரும், எழுத்தாளருமான வரவர ராவ், நக்சல் இயக்கத்தை தீவிரமாக ஆதரிப்பவர். விரசம்(புரட்சி எழுத்தாளர்கள் சங்கம்) என்ற அமைப்பைத் தொடங்கி நடத்தி வருகிறார். பழங்குடியின மக்களுக்காகவும் குரல் கொடுத்து வருகிறார். நக்சல் அமைப்பினரின் கொள்கை களை ஆதரித்து கவிதைகள், பாடல்கள் புனைந்துள்ளார். ஆந்திர மாநில அரசுகள் மாறினாலும், இவர் கைது செய்யப்படுவது தொடர்கதையாக இருக்கிறது. ஆந்திர மாநில போலீஸாரால் பலமுறை இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெர்னான் கோன்சால்வ்ஸ்: மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த வெர்னான் கோன்சால்வஸ் தீவிர எழுத்தாளர். சமூக ஆர்வலர், தொழிற்சங்கவாதி என பல முகங்கள் இவருக்கு உண்டு. நக்சல் இயக்கத்தை ஆதரித்தார் என காரணம் காட்டி 2007-ல் இவர் கைது செய்யப்பட்டார். இது வரை இவர் மீது 20 வழக்குகள் பதிவாகியுள்ளன. 17 வழக்கு களில் இருந்து இவர் விடுவிக் கப்பட்டுள்ளார்.

மும்பையிலுள்ள ஒரு கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்தார். பின்னர் அந்த வேலையை அவர் ராஜினாமா செய்துவிட்டு நலிந்த பிரிவினரின் உரிமைகளுக்காகப் போராடி வருகிறார்.

சுதா பரத்வாஜ்: டெல்லியிலுள்ள தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் கவுரவ பேராசிரியராக பணியாற்றி வருகிறார் சுதா பரத்வாஜ். தொழிற் சங்கவாதி, வழக்கறிஞர் என பல பணிகளை இவர் செய்து வரு கிறார். மேலும் குடியுரிமை சுதந்திரத் துக்கான மக்கள் அமைப்புக்கு தேசியச் செயலராகப் பணியாற்றி வருகிறார். கான்பூர் ஐஐடி-யில் பட்டப்படிப்பு படித்தவர். பெண் என்றும் பாராமல் தைரியமாக களத்தில் இறங்கிப் போராடும் ஆற்றல் கொண்டவர் சுதா.

அருண் பெரைரா: மும்பையைச் சேர்ந்த அருண் பெரைரா வழக்கறிஞர் ஆவார். மனித உரிமைகளுக்காகப் போராடி வருகிறார். இவர் 2007-ல் இதேபோன்ற வழக்கில் கைது செய்யப்பட்டார். ஆனால் 2012-ல் அவர் அந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார். மக்கள் நலன் ஒன்றே குறிக்கோள் என போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.

கவுதம் நவ்லகா: ஹரியாணாவில் வசிக்கும் மனித உரிமைப் போராளியான கவுதம் நவ்லகா, மக்கள் ஜனநாயக உரிமை யூனியன் அமைப்பின் உறுப்பினர் ஆவார். பத்திரிகையாளராக சில காலம் பணியாற்றினார். 2011-ல் இவர் ஜம்மு-காஷ்மீர் சென்றபோது நகர் விமான நிலையத்தில் இவர் தடுத்து நிறுத்தப்பட்டார். பின்னர் டெல்லிக்கு அதே விமானத்தில் திருப்பி அனுப்பப்பட்டார். ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்கான இவரது போராட்டம் தொடர்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x