Last Updated : 24 Aug, 2018 09:34 PM

 

Published : 24 Aug 2018 09:34 PM
Last Updated : 24 Aug 2018 09:34 PM

கேரளாவில் மழைக்குப் பலியானோர் 417 ஆக அதிகரிப்பு: வீடு திரும்புவோருக்கு ரூ.10 ஆயிரம்: பினராயி விஜயன் அறிவிப்பு

கேரளாவில் மழை மற்றும் வெள்ளத்துக்குப் பலியானோர் எண்ணிக்கை 417 ஆக அதிகரித்துள்து. வீடு திரும்புவோருக்கு ரூ. 10 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் ஊடகங்களுக்கு இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

கேரளாவில் தென் மேற்கு  பருவ மழை தொடங்கிய மே 29-ம் தேதியில் இருந்து ஆகஸ்ட் 8-ம் தேதி வரை பலியானோர் எண்ணிக்கை 265 ஆக இருந்தது. ஆனால், அதன்பின் பெய்த பெருமழை, ஏற்பட்ட வெள்ளத்தால், பலி எண்ணிக்கை அதிகரித்தது. ஒட்டுமொத்தமாக இதுவரை மழைக்கு 417 பேர் பலியாகியுள்ளனர். 36 பேரைக் காணவில்லை.

, காணாமல் போனவர்கள் யாரேனும் இருந்தால், அவர்கள் குறித்த விவரங்களை அரசின் இணையதளத்தில் உறவினர்கள் பதிவிடலாம்.

இந்த மழை வெள்ளத்தால், 7 ஆயிரம் வீடுகள் அழிந்துள்ளன, 50 ஆயிரம் வீடுகள் மிகமோசமாக சேதமடைந்துள்ளன. வெள்ள நீர் பல்வேறு இடங்களில் வடிந்து வருவதால், நிவாரண முகாம்களில் இருந்து மக்கள் வீடுகளுக்குத் திரும்பி வருகிறார்கள்.

ஆலப்புழா, செங்கனூர், பரவூர், சங்கனாச்சேரி, சாலக்குடி, பத்தினம்திட்டா ஆகிய நகரங்களில் மட்டுமே நிவாரண முகாம்களில் மக்கள் அதிகமாகத் தங்கி இருக்கிறார்கள். கோட்டயத்தில் ஏராளமான முகாம்கள் மூடப்பட்டுவிட்டன.

ஒரேநேரத்தில் 3 ஆயிரத்துக்கும் அதிகமான நிவாரண முகாம்கள் இருந்த நிலையில், தற்போது, 2,787 முகாம்களாகக் குறைந்துவிட்டன. மக்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பத் தொடங்கி இருக்கிறார்கள்.

வீடு திரும்புவார்களுக்கு ரூ. 10 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும். ஏற்கனவே வீடு திரும்பி இருப்பவர்களுக்கு அவர்களின் வங்கிக்கணக்கில் இந்தத் தொகை அரசின் சார்பில் செலுத்தப்படும்

இவ்வாறு முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே நிதி அமைச்சர் தாமஸ் ஐசக் நிருபர்களிடம் கூறுகையில், "குட்டநாடு பகுதியில் வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதியில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள 5 ஆயிரம் தன்னார்வலர்கள் வந்துள்ளனர். ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள 13 பஞ்சாயத்துக்களில் ராணுவ மின்பொறியாளர்கள், குடிநீர் குழாய்களை சரிசெய்யும் பணியாளர்கள், பாம்பு பிடிப்பவர்கள் ஏன ஏராளமானோர் 28-ம் தேதிமுதல் அனுப்பப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைத்து வீடுகளையும் சுத்தம் செய்தபின், அடுத்த மாதத்தில் இருந்து மக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்புவார்கள். நிவாரண நிதி திரட்ட வேண்டும் என்பதற்காக, சிறப்பு லாட்டரி டிக்கெட்டுகளை கேரள அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. ஒவ்வொரு டிக்கெட்டின் விலை ரூ.250.இதன் மூலம் ரூ.100 கோடி திரட்ட முடியும் என நம்புகிறது "எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x