Last Updated : 24 Aug, 2018 08:30 PM

 

Published : 24 Aug 2018 08:30 PM
Last Updated : 24 Aug 2018 08:30 PM

கேரளாவில் நாளை ‘கறுப்பு’ ஓணம்; மழை..வெள்ளம்..மலையாள மக்களின் மகிழ்ச்சியை காணோம்

மாகபலி சக்கரவர்த்தியை வரவேற்க வீடுதோறும் அழகாக போடப்பட்டிருக்கும் பூக்கள் நிறைந்த கோலம் இந்த ஆண்டு இருக்காது; சைவ விருந்தில் ராஜாவான ஓணம் சத்யா விருந்தைச் சாப்பிட முடியாது; படகுபோட்டியை காண முடியாது; கதகளி ஆட்டத்தை ரசிக்க முடியாது.

அனைத்தையும் கடந்த 10 நாட்களாகப் பெய்த மழையும், பெருக்கெடுத்த வெள்ளமும் அடித்துச் சென்றுவிட்டது.

இந்த ஆண்டு கேரள மக்களுக்குக் கறுப்பு ஓணமாக அமைந்துவிட்டது.

கடந்த 10 நாட்களாகப் பெய்த பெருமழைக்கும், பெருக்கெடுத்த வெள்ளத்துக்கும், 400-க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகி இருக்கிறார்கள். 10-லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் குடியிருந்த வீடுகளையும், பிழைப்பு நடத்திய கடைகளையும், வர்த்தகக் கட்டிடங்களையும் இழந்து நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த மழையால், ரூ.20 ஆயிரம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறிய கேரள அரசு, மக்களின் சோகத்தையும், மாநிலத்துக்கு ஏற்பட்ட துயரத்தையும் கருத்தில் கொண்டு இந்த ஆண்டு ஓணம் கொண்டாட்டத்தை ரத்து செய்விட்டது.

மலையாளக் காலண்டரில் சிங்கம் மாதத்தின் பிறப்பாக ஓணம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் மறைந்த மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்கப் பெண்கள் தங்களின் வீடுகளின் முன் பூக்களால் ஆன அத்தப்பூ கோலத்தை வரைவார்கள். இந்த காட்சியைக் காணவே ரம்மியாக இருக்கும். ஏறக்குறைய 2 வாரங்கள் வரை கொண்டாடப்படும் இந்தப் பண்டிகையைக்காண கேரள மக்கள் மட்டுமின்றி, பல்வேறு நாடுகளிலும் இருந்தும் மாநிலங்களில் இருந்து சுற்றுலாப்பயணிகள் வருவார்கள்.

அதுமட்டுமல்லாமல், ஓணம் பண்டிகை என்பது, இந்துக்கள் மட்டும் கொண்டாடும் பண்டிகை என்று அல்லாமல், மலையாள மக்கள் அனைவரும் மதம், சாதி வேறுபாடின்றி கொண்டாடும் விழாவாகப் பார்க்கப்படுகிறது.

ஆனால், கடந்த 10 நாட்களாகப் பெய்த மழையாலும், ஏற்பட்ட வெள்ளத்தாலும் மாநிலமே துயரத்தில் இருக்கிறது, இன்னும் பல்வேறு இடங்களில் வெள்ள நீர் வடியாமல் இருப்பதால், மக்கள் தங்கள் வீடுகளுக்குக் கூட செல்ல முடியாமல் நிவாரண முகாம்களில் இருக்கிறார்கள்.

எர்ணாகுளம் மாவட்டம், பிரவோம் அருகே முள்ளகுளம் கிராமத்தைச் சேர்ந்த கதகளி கலைஞர் பி.மோகன்தாஸ் கூறுகையில், இந்த ஆண்டு எங்களுக்குப் பூக்கள் அலங்காரமும் இல்லை, அலங்கார விளக்குகளும் இல்லை. எங்குப் பார்த்தாலும் சோகமாக இருக்கிறது. இந்த ஆண்டு மக்கள் படும் துயரத்தை மகாபலி பார்க்கட்டும். மலையாளிகளின் வழக்கமான மகிழ்ச்சிக்குப் பதிலாக இந்த முறை சோகமே இருக்கும் எனத் தெரிவித்தார்.

இந்தப் பெருமழையால், சுற்றுலா, வர்த்தகம், கலை, கலாச்சார நிகழ்ச்சிகள் அனைத்தும் முடங்கி இருக்கின்றன.

இது குறித்து கேரள வர்த்தக மேம்பாட்டு அமைப்பின் செயலாளர் சீனிவாசன் கூறுகையில், ஆலுவாவில் பெரும்பாலான பகுதிகளில் இன்னும்வெள்ளம் வடியாததால், வீடுகளுக்குக் கூட யாரும் செல்லவில்லை. வர்த்தகர்களுக்கு பெரும் இழப்பு மழையால் ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு யாருக்கும் ஓணம் வியாபாரம் கிடையாது. சில வியாபாரிகள் ஓணத்துக்காக வாங்கி வைத்திருந்த ஒட்டுமொத்த சரக்கு இருப்பையும் மழை அடித்துச் சென்றுவிட்டது என வேதனையுடன் தெரிவித்தார்

திருவனந்தபுரத்தில் பூக்கடை நடத்திவரும் பூ வியாபாரி முருகன் கூறுகையில், “ யாருமே எதிர்பார்க்காத மழை, வெள்ளத்தால் இந்த ஆண்டு ஓணம் பண்டிகைக்கான மகிழ்ச்சியும் போய்விட்டது. வண்ணமயமான ஓணத்தைக் காண முடியாது. ஒவ்வொரு ஆண்டும் ஓணத்தின் போது நன்றாகப் பூ வியாபாரம் நடக்கும், இந்த ஆண்டு கிடைக்கும் லாபத்தை வைத்து பல்வேறு திட்டங்கள் வைத்திருந்தேன். ஆனால், எல்லாமே மாறிவிட்டது. பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் என அனைத்திலும் ஓணம் பண்டிகை ரத்து செய்யப்பட்டுவிட்டது எனத் தெரிவித்தார்.

சமையல்கலைஞர் பாலச்சந்திரன் கூறுகையில், ஏராளமான அலுவலகங்களுக்கு ஓணம் சத்யா விருந்து சமைக்க இந்த ஆண்டு ஆர்டர் வந்திருந்தது. ஆனால், அனைத்தும் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டுவிட்டது. இந்த மழையால், திருமணங்களும், ரத்து செய்யப்பட்டுவிட்டன. ஐடி நிறுவனங்கள் ஏராளமானவே எங்களிடம் ஓணம் சத்யா விருந்துக்கு ஆர்டர் கொடுத்திருந்தன. அனைத்தும் ரத்து செய்து சோகத்தில் ஆழ்த்திவிட்டன எனத் தெரிவித்தார்.

இந்தப் பெருமழையால் திருவனந்தபுரம் நகரம் பெருமளவு பாதிக்கப்படவில்லை என்ற போதிலும் என்றாலும் கூட மாநிலத்தில் ஏற்பட்ட சோகம் அங்கேயும் பாதி்த்துவிட்டது. ஓணம் பண்டிகையின் போது மலையாள மக்களின் முகத்தில் இருக்கும் மலர்ச்சியும், மனதில் நிறைந்திருக்கும் மகிழ்ச்சியும் இந்த ஆண்டு இருக்கப்போவதில்லை. மழை அனைத்தையும் வாரிச்சுருட்டிச் சென்றுவிட்டது.

வண்ணங்களால் நிறைந்த ஓணம், கறுப்பு ஓணமாக மாறிவிட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x