Last Updated : 24 Aug, 2018 05:23 PM

 

Published : 24 Aug 2018 05:23 PM
Last Updated : 24 Aug 2018 05:23 PM

பெருவெள்ளத்தால் கேரளா பாதிக்கப்பட்டுள்ளது; நிவாரணம் வழங்க வித்தியாசமான அளவுகோலில் பாருங்கள்: பினராயி விஜயன் மத்திய அரசுக்கு வேண்டுகோள்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்துக்கு நிவாரண உதவிகளை வழங்க வித்தியாசமான அளவுகோலில் பார்க்க வேண்டும், எந்த மாநிலத்திலும், எந்தக் காலத்திலும் ஏற்படாத சேதம் ஏற்பட்டுள்ளது என்று முதல்வர் பினராயி விஜயன் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கேரள மாநிலத்தில் பெய்த பெருமழை மற்றும் வெள்ளம், அந்த மாநிலத்தையே புரட்டிப்போட்டுள்ளது. ஏராளமான மக்கள் பலியாகியுள்ளனர், 10-லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து, வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தங்க இருக்கிறார்கள். மாநிலத்தின் ஒட்டுமொத்த சேத மதிப்பு முதல்கட்டமாக ரூ.20 ஆயிரம் கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

வெள்ளம் பல்வேறு இடங்களில் படிப்படியாக வடிந்துவரும் நிலையில், மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறார்கள். ஆனால், நிவாரண முகாம்களில் இருப்பவர்கள் இன்னும் தொடர்ந்து அங்கேயே தங்கி இருக்கிறார்கள்.

முதல்கட்ட நிவாரண உதவியாக மத்திய அரசிடம் இருந்து ரூ.2 ஆயிரம் கோடியை கேரள அரசு கேட்ட நிலையில், ரூ.600 கோடி மட்டுமே மத்தியஅரசு வழங்கியுள்ளது. அதேசமயம், வெளிநாடுகளான ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், தாய்லாந்து, ரஷ்யா, மாலதீவுகள் உள்ளிட்ட நாடுகள் உதவிகளையும் மத்திய அரசு ஏற்க மறுத்துவிட்டது. இதனால் கேரள அரசும், மக்களும் அதிருப்தியில் இருக்கிறார்கள்.

இந்நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயன் திருவனந்தபுரத்தில் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

கேரள மாநிலத்தில் பெய்த மழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட சேதத்தின் முதல் கட்டமதிப்பீடு ரூ.20 ஆயிரம் கோடி இருக்கும். இது மாநிலத்தின் 2018-19-ம் ஆண்டு பட்ஜெட் தொகையாகும்.

கடந்த 8-ம் தேதியில் இருந்து பெய்த மழையால் இதுவரை 231 பேர் பலியாகி இருக்கிறார்கள். 10.40 லட்சம் பேர் நிவாரண முகாம்களில் இருக்கிறார்கள். கேரள மாநிலத்தின் நிலை என்பது முற்றிலும் மாறுபட்டது. இந்த மாநிலம் மக்கள் அடர்த்தி மிகுந்தது. மாநிலம் முழுவதும் நல்ல அடிப்படை கட்டமைப்பு வசதிகளான சாலைகள், தகவல் தொடர்பு வசதிகள், மருத்துவமனைகள் இருந்தன.

ஆனால், இந்த மழை, வெள்ளத்தால் ஏற்பட்ட இழப்பு என்பது மிகப்பெரியது. இந்த இழப்பை நாட்டின் எந்த பகுதியிலும், எந்தக் காலத்திலும் நடந்த பேரிடரோடு, பொருத்திப்பார்க்க முடியாது. கேரள மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தை வித்தியாசமான அளவுகோலில்தான் அணுகி, நடத்தி, நிவாரண உதவிகளை வழங்க வேண்டும்.

வெளிநாட்டில் இருந்து கிடைக்கும் நிவாரண உதவிகளைப் பெறக்கூடாது என்று தெரிவித்துவிட்ட நிலையில், வெள்ள நிவாரண உதவிகள் உரித்தான நேரத்தில் கிடைத்தால்தான் மக்களுக்கு அளிக்க முடியும்.

வெளிநாடுகளில் இருந்து உதவிகளைப் பெறுவதற்கு எந்தவிதமான தடையும் முழுமையாக இல்லை. சட்டத்திலும் அவ்வாறு தடையும் இல்லை. அதேசமயம் தாமாக முன்வந்து நாடுகள் உதவிகள் அளிக்கும் பட்சத்தில் அதை ஏற்பதில் தவறில்லை.

கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மாநிலத்தில் மிகப்பெரிய சேதம் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ளது. இதன் முதல்கட்ட மதிப்பு ரூ.20 ஆயிரம் கோடியாகும்.

பெரும்பாலான இடங்களில் வெள்ள நீர் இன்னும்வடியவில்லை. வெள்ள நீர் வடியும் போதுதான், உண்மையான, இறுதியான சேதத்தின் மதிப்பு அறியவரும்.

26 ஆயிரம் வீடுகள் சேதமடைந்துள்ளன, 40 ஆயிரம் ஹெக்டேர் விவசாய நிலங்கள் அழிந்துள்ளன. 2 லட்சம் கோழிகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன, 46 ஆயிரம் மாடுகளைக் காணவில்லை.

ஏராளமான கட்டிடங்கள், கடைகள், வர்த்தக அமைப்புகள், பாலங்கள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன, தொலைத்தொடர்பு இணைப்புகள், மின் இணைப்புகள் சேதமடைந்துள்ளன.

கேரள மின்துறைக்கு மட்டும் ரூ.750 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. குடிநீர் வழங்கும் வடிகால் துறைக்கு ரூ.900 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

பாரதப்புழா, பெரியாறு, சாலக்குடி, பம்பா ஆகிய ஆறுகளின் பாதை பல்வேறு இடங்களில் மாறி இருக்கிறது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சாலைகள் துண்டிக்கப்பட்டு, மக்கள் தீவுகளில் வசிப்பதுபோல் உணர்கிறார்கள். குடிநீர், சாலைவசதி இல்லாமல் தவிக்கிறார்கள்.

இந்த அரசுக்கு ஆதரவாக மக்கள் ஒற்றுமையாக இணைந்து பணியாற்றி வெள்ளத்தில் பணியாற்றி, மக்களை மீட்டுள்ளனர், நிவாரண முகாம்களில் தங்கவைத்துள்ளனர்.

கேரளாவில் நடந்த மீட்புப்பணிபோல் வேறு எந்த மாநிலத்திலும் இதற்கு முன் நடந்தது இல்லை. அந்த அளவுக்கு மாநிலத்தில் மிகப்பெரிய அளவில் பேரிடர் ஏற்பட்டுள்ளது.

வெள்ளம் வடிந்த நிலையில், மக்களுக்கு எந்தவிதமான தொற்று நோய்களும் ஏற்படக்கூடாத வகையில், அதிகாரிகளும், மருத்துவர்களும் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.

இவ்வாறு முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x