Last Updated : 24 Aug, 2018 03:52 PM

 

Published : 24 Aug 2018 03:52 PM
Last Updated : 24 Aug 2018 03:52 PM

‘பாஜகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் வெறுப்பைப் பரப்பி, நாட்டைப் பிளவுபடுத்துகின்றன’: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

பாஜகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் சொந்த நாட்டு மக்களுக்கு இடையே வெறுப்பைப் பரப்பி நாட்டைப் பிளவுபடுத்துகின்றன என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடும் குற்றச்சாட்டைக் கூறியுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 2 நாட்கள் பயணமாக ஜெர்மன் சென்றுள்ளார். பெர்லின் நகரில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களும் சேர்ந்து நடத்திய கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

காங்கிரஸ் கட்சி அனைவருக்குமான கட்சி. ஒவ்வொருவருக்காகவும் பணியாற்றும். நாங்கள் எப்போதும் வேற்றுமையில் ஒற்றுமை என்ற கொள்கையில் நம்பிக்கை வைத்திருக்கிறோம்.

எங்களின் பணி என்பது வேற்றுமையில் ஒற்றுமை என்ற தத்துவத்தின் அடிப்படையில் நம்பிக்கைகொண்டதாகும். சீக்கிய குரு குருநானக் காலத்தில் இருந்த வேற்றுமையில் ஒற்றுமை என்பதை காங்கிரஸ் கட்சி பின்பற்றி வருகிறது.

ஆனால், இன்றைய இந்திய அரசு வித்தியாசமான முறையில் செயல்படுகிறது.

இந்தியாவில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசும், ஆர்எஸ்எஸ் அமைப்பும், சொந்த நாட்டு மக்கள் மத்தியில் வெறுப்புணர்வை விதைக்கிறார்கள். ஆனால், எங்களுடைய பணி என்பது மக்களை ஒற்றுமையாக்கி நாட்டை முன்னெடுத்துச் செல்வதாகும். நாங்கள் ஆட்சிக்கு வந்தபின் எந்த இந்தியரும் வெறுப்புப் பிரச்சாரத்தை எந்த இடத்திலும் சொல்வதை கேட்கமாட்டீர்கள். வெறுப்பை விதைக்காமல் இருப்பதுதான் நமது கலாச்சாரம், உங்களுடைய கலாச்சாரமும் ஆகும்.

சீனாவுடன் இந்திய அரசு பொருளாதாரத்தில் போட்டிபோடுகிறது. ஆனால், வேலைவாய்ப்பில் சீனாவைக் காட்டிலும் இந்தியா பின்னடைவுடன் இருக்கிறது. 24 மணிநேரத்தில் சீனாவில் 50 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெறலாம் என்றால், இந்தியாவில் 450 பேர் மட்டுமே வேலைவாய்ப்பு பெற முடியும்.

நாட்டில் விவசாயிகள் தற்கொலை என்பது தொடர்ந்து வருகிறது. இளைஞர்கள் தங்களின் எதிர்காலம் குறித்து தெரியாமல், வேலைகிடைக்காமல் அலைகிறார்கள்.

வேற்றுமையில் ஒற்றுமை என்ற சிந்தனை சீக்கியகுரு குருநானக்கிடம் இருந்து காங்கிரஸ் கட்சி பெற்றுள்ளது. இதற்காகச் சீக்கிய சமூகத்துக்கு நாங்கள் நன்றி தெரிவிக்கிறோம். ஜெர்மனியில் இருக்கும் ஏராளமான இந்தியர்களில் பெரும்பாலானோர் சீக்கியர்கள், அவர்களுக்கு இந்தியாவில் பஞ்சாப் மாநில அரசில் தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும்.

எப்போது உங்களுக்கு எங்களுடைய உதவித் தேவைப்படுகிறதோ அப்போது நாங்கள் உங்களுடன் இருப்போம், பஞ்சாப் அரசின் வாயிலாக உங்களுக்கு உதவுவோம். தக்கசமயத்தில் உதவுவதே நல்ல நண்பருக்கு அழகாகும். அதுதான் உண்மையான நண்பர்களும் கூட.

இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x