Last Updated : 24 Aug, 2018 02:49 PM

 

Published : 24 Aug 2018 02:49 PM
Last Updated : 24 Aug 2018 02:49 PM

நிதியுதவியில் அரசியல்: ரூ.700 கோடி நிதியுதவி தருவதாக ஐக்கிய அரபு அமீரகம் அறிவிக்கவில்லை: கேரள பாஜக சொல்கிறது

மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்துக்கு ரூ.700 கோடி நிதியுதவி தருவதாக ஐக்கிய அரபு அமீரகம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்று கேரள மாநில பாஜக தெரிவித்துள்ளது.

பெருமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு ரூ. 700 கோடி நிதியுதவி வழங்குவதாக ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்தகாக கூறப்பட்டதில் இருந்து இந்த விவகாரம் அரசியலாக்கப்பட்டு வருகிறது. கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், மத்தியில் ஆளும் பாஜகவும் எதிர் எதிர் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றன.

மழையால் கேரள மாநிலத்துக்கு ஏற்பட்ட பாதிப்பை சரிசெய்ய ரூ.2,200 கோடி நிதியைக் கேரள முதல்வர் பினராயி விஜயன் மத்தியஅரசிடம் கோரினார். ஆனால், மத்திய அரசோ ரூ.600 கோடி மட்டுமே ஒதுக்கியது. இந்தச் சூழலில்தான் ஐக்கிய அரபு அமீரகம் ரூ.700 கோடி தருவதாக அறிவித்தது. பிரதமர் மோடியுடன் ஐக்கி அரபு அமீரகம் இளவரசர் முகம்மது பின் ஜயத் அல் நஹ்யன் தொலைப்பேசியில் பேசி நிதியுதவியைத் தெரிவித்தார் என முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.

மேலும், ஐக்கிய அரபு அமீரகம் நாட்டை வெளிநாடாக கருதத்தேவையில்லை. அமீரக நாட்டைக் கட்டமைக்க கேரள மாநிலத்து மக்களின் பங்களிப்பு அதிகம் என்பதால், அவர்கள் அளிக்கும் உதவியாகவே கருத வேண்டும் என்று தெரிவித்தார்.

ஆனால், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகமோ கடந்த 2004-ம் ஆண்டில் ஏற்பட்ட சுனாமி பேரழிவுக்குப் பின் வெளிநாட்டில் இருந்து இந்திய அரசு எந்தவிமான உதவியையும் பெறவில்லை. அப்போது பிரதமராக இருந்த மன்மோகன் தலைமையிலான காங்கிரஸ் அரசில் எடுக்கப்பட்ட முடிவு கடந்த 14 ஆண்டுகளாக மரபாக பின்பற்றப்பட்டுவருகிறது என விளக்கம் அளிக்கப்பட்டது.

இதனால், கேரள மாநிலத்தில் உள்ள அரசியல்வாதிகள் கடும் அதிருப்தியும் ஆவேசமும் அடைந்தனர். ஐக்கிய அரபு அமீரகத்தின் ரூ.700 கோடியைப் பெறாவிட்டால், மாநில கட்டமைப்புக்கு தேவைப்படும் ரூ.2,200 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

இதனால், ஐக்கிய அரபு அமீரகம் நிதியுதவி அறிவிப்பு தேசிய அரசியலில் இரு கட்சிகளுக்கு இடையே கவுரவப் பிரச்சினையாக மாறியது.

இந்தச் சூழலில் கேரள பாஜக மாநிலத் தலைவர் பி.எஸ். சிறீதரண் பிள்ளை இன்று கோழிக்கோட்டில் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், கேரளாவுக்கு நிவாரண உதவியாக ஐக்கிய அரபு அமீரகம் ரூ.700 கோடி தருவதாக யார் கூறியது?

இந்த செய்தி குறித்து முதல்வர் பினராயி விஜயன் விளக்கம் அளிக்க வேண்டும், இந்தத் தகவல் யாரிடம் இருந்து பெறப்பட்டது என்பதையும் கூற வேண்டும். ஐக்கிய அரபு அமீரகம் அரசு கேரள மாநிலத்துக்கு ரூ.700 கோடி தருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

வெளிநாட்டில் இருந்து உதவிகளைப் பெறுவதில் கொள்கை முடிவுகளை அரசு பின்பற்றிவருகிறது என்று கூறியதில் இருந்து மத்திய அரசுக்கும், பிரதமர் மோடிக்கும் எதிராக விஷமத்தனமான பிரச்சாரங்கள் பரப்பப்படுகின்றன.

இதற்கு முன் இருந்த எந்த மத்திய அரசும், பிரதமர் மோடியைப் போல் கேரள மாநிலத்துக்கு நிவாரண உதவியை அளித்திருக்க முடியாது.

வெள்ளம் வந்தவுடன் மாநிலத்தின் நிலைமையைப் பார்வையிட்ட பிரதமர் மோடி, மோசமான வானிலையிலும் ஹெலிகாப்டர் மூலம் நிலவரங்களை அறிந்தார். இதை மிகவும் உள்ளுர்வுடன் மேற்கொண்டு, தேவையான அனைத்து உதவிகளையும் பிரதமர் மோடி செய்துள்ளார் எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகம் கேரள மாநிலத்துக்கு ரூ.700 கோடி உதவித் தருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வில்லை. இது குறித்து ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதர் அஹமது அல்பானா கூறுகையில் ஒரு ஆங்கில நாளேட்டுக்கு அளித்த பேட்டியில், கேரள மாநிலத்துக்கு எந்தவிதமான குறிப்பிட்ட தொகையும் வெள்ளநிவாரண உதவியாக அளிப்பதாக ஐக்கிய அரபு அமீரக அரசு சார்பில் அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கவில்லை.

வெள்ள நிவாரணத்துக்காக எவ்வளவு தொகை அளிக்கலாம் என்ற கணக்கீடு நடந்து கொண்டிருக்கிறது. இப்போதுவரை எந்த இறுதி அறிவிப்பும் வெளியிடவில்லை எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x