Last Updated : 24 Aug, 2018 02:52 PM

 

Published : 24 Aug 2018 02:52 PM
Last Updated : 24 Aug 2018 02:52 PM

அசாமில் 14 லட்சம் குழந்தைகள் அங்கன்வாடியில் பயனடைவதாக பொய்த்தகவல்: மத்திய அரசு கண்டுபிடிப்பு

அசாமில் அங்கன்வாடி மையங்களில் 14 லட்சம் குழந்தைகள் தேசிய ஊட்டச்சத்து திட்டத்தில் பயனடைந்து வருவதாக பொய்யான தகவல் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய மகளிர் மற்றும் குழந்தை மேம்பாட்டு  அமைச்சகம் தெரிவித்துள்ளது.

டெல்லியில் ஒருங்கிணைந்த தேசிய ஊட்டச்சத்து நிகழ்ச்சி நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. இதில் பங்கேற்ற மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை செயலாளர் ராகேஷ் ஸ்ரீவத்ஸ்தவா கூறுகையில்  "அசாம் அரசு போஷான் அபியான் தேசிய ஊட்டச்சத்துத் திட்டத்தில் பயனடையும் 6 வயது வரையிலான குழந்தைகளின் புள்ளி விவரங்களை வழங்கியுள்ளன. இதில் 14 லட்சம் குழந்தைகள் பற்றிய தகவல்கள் பொய்யானவை என தெரிய வந்துள்ளது.

அங்கன்வாடி மையங்களில் பதிவு செய்யப்பட்ட போலி குழந்தைகளை குறைப்பதற்காக அனைத்து மாநிலங்களுக்கும் நாங்கள் அறிவுறுத்தல்களை அனுப்பியுள்ளோம் இந்தியா முழுவதும் 10 கோடிக்கும் அதிகமான குழந்தைகள் அங்கன்வாடியில் பதிவு செய்யப்பட்டுள்ளனர்'' என்ற தகவலைத் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் மேனகா காந்தி பேசியதாவது:

''தேசிய ஊட்டச்சத்து திட்டம் குழந்தைகளுக்கானது. ஆனால் இதில் குழந்தைகளின் போலி பெயர்களில் நடக்கும் பொய்யான பதிவுகளை மாநில அரசுகள்தான் கண்டுபிடிக்க வேண்டும். நமது நாட்டில் மருத்துவப் பிரிவில் நிலவும் குறைபாடுகளை வேரோடு பிடுங்க வேண்டும். இதற்காக, இத்திட்டத்தில் உண்மையிலேயே பயனடைபவர்கள் எண்ணிக்கையை கவனித்து துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை சரிசெய்ய வலியுறுத்த வேண்டும்.

போஷன் அபியானைத் தொடர்ந்து மிகப்பெரிய திட்டமான பெட்டி பச்சாவோ, பெட்டி பத்தாவோ (BBBP) என்ற திட்டத்தை மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் தொடங்க உள்ளது. அதற்குமுன் ஊட்டச்சத்து திட்டத்தில் உள்ள முட்டுக்கட்டைகளை களைந்து முன்னேற வேண்டிய பணி நமக்கு உள்ளது.

அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் ஊட்டச்சத்துத் துறையில் உணவு தயாரித்தல் பெறுதல் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளையும் சீராக்க வேண்டும். மாவட்ட ஆட்சியர்கள் கையில் எடுத்தால் இதில் உள்ள பிரச்சினைகளை எளிதாகக் களைய முடியும்.

இவ்வாறு மேனகா காந்தி பேசினார்.

போஷன் அபியான், பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்ட திட்டம் ஆகும். குழந்தைகளின் இரும்புச்சத்து, ஊட்டச்சத்து, வளர்ச்சிக் குறைபாடு, பிறக்கும்போதே எடை குறைவாக பிறத்தல் போன்ற குறைபாடுகளை குறைத்தல், மற்றும் பதின்பருவப் பெண்கள், கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் ஆகியவர்களுக்காக இத்திட்டம் செயல்பட்டு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x