Published : 24 Aug 2018 02:16 PM
Last Updated : 24 Aug 2018 02:16 PM

முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டத்தை ஆகஸ்ட் 31-ம் தேதி வரை 139 அடியாக பராமரிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை ஆகஸ்ட் 31-ம் தேதி வரை 139 அடியாக பராமரிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

கேரளாவில் வரலாறு காணாத கனமழை பெய்தது. இதன் காரணமாக மாநிலத்தின் 80 அணைகளும் திறக்கப்பட்டன. தொடர் மழையால் மாநிலம் வெள்ளத்தில் மூழ்கியது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் உதவிகள் குவிந்து வருகிறது.

இதனிடையே, கேரளாவில் கனமழை பெய்து மக்களிடையே அச்சம் நிலவுவதால், முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை தற்காலிகமாக 136 அடியாக குறைக்க வேண்டும் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன், தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இதற்கு பதில் கடிதம் எழுதிய தமிழக முதல்வர் அணை பாதுகாப்பாக இருப்பதால் நீர்மட்டத்தை குறைக்க தேவையில்லை என கூறியிருந்தார்.

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியாக குறைக்க கோரி இடுக்கியை சேர்ந்த ரசூல் ஜாய் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் சார்பில் நேற்று பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

அதில், ‘‘முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தமிழகம் திடீரென தண்ணீரை திறந்து விட்டது தான் கேரளாவில் மிக மோசமான வெள்ள பாதிப்பு ஏற்பட காரணமாயிற்று. அணையின் கீழ் பகுதியில் இருக்கும் மக்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கபோதுமான அவகாசம் தேவை என்ற கேரளாவின் கோரிக்கையை தமிழகம் ஏற்கவில்லை. எந்த முன்னறிவிப்பும் இன்றி முல்லைப் பெரியாறு அணையில் இருந்து அதிகமான தண்ணீரை தமிழகம் திறந்துவிட்டது’’ என தெரிவிக்கப்பட்டது.

தமிழகம் காரணம் அல்ல

தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் நீதிபதிகள் கன்வில்கர், சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழகம் சார்பில் இன்று பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘‘ஆகஸ்ட் 14-ம் தேதி முதல் முதல் 19-ம் தேதி வரை இடுக்கி, எடமலையார் அணைகளில் இருந்து 36.28 தண்ணீர் டிஎம்சி திறக்கப்பட்டதே கேரளாவில் வெள்ளம் ஏற்பட காரணம்.

ஆகஸ்ட் 15-ம் தேதி முல்லைப் பெரியாறு அணை 140 அடியை எட்டியபோது, இடுக்கி அணைக்கு 1.24 டிஎம்சி தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால் அன்று கேரள அரசு இடுக்கி அணையில் இருந்து 13.79 டிஎம்சி திறந்துவிட்டது. கேரளாவில் வெள்ளம் ஏற்பட்டதற்கு தமிழகம் காரணம் அல்ல’’ என தெரிவிக்கப்பட்டது.

பேரிடர் துணைக்குழு ஆகஸ்ட் 23-ம் தேதி கூடி முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 139 அடியாக பாராமரிக்க பரிந்துரைத்தாக மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கேரளாவும், தமிழகமும் மத்திய துணை கமிட்டியின் உத்தரவை பின்பற்ற வேண்டும் என நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

மேலும், முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை ஆகஸ்ட் 31-ம் தேதி வரை 139 அடியாக பாராமரிக்குமாறு உத்தரவிட்டனர். கேரளாவின் தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு இந்த உத்தரவை பின்பற்ற வேண்டும் என அவர்கள் கூறினர். மேலும் வழக்கு விசாரணையை செப்டம்பர் 6-ம் தேதிக்கு ஒத்தி வைத்த நீதிபதிகள் அப்போது கேரளா, தமிழகம் மாநிலங்கள் பதில் மனுத்தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x