Last Updated : 24 Aug, 2018 10:22 AM

 

Published : 24 Aug 2018 10:22 AM
Last Updated : 24 Aug 2018 10:22 AM

கர்நாடக முதல்வர் குமாரசாமியின் கணக்காளர் சுனில் வீட்டில் வருமான வரி சோதனை

கர்நாடக முதல்வர் குமாரசாமியின் கணக்காளர் வீடு மற்றும் அலுவலகத்தில் வருமான வரித் துறை அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தினர். இதனால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கர்நாடக முதல்வர் குமாரசாமியின் கணக்காளர் ஹெச்.பி.சுனில். பெங்களூருவைச் சேர்ந்த பட்டய கணக்காளரான இவர், குமாரசாமியின் மனைவி அனிதா, மகன் நிகில், சகோதரரும் அமைச்சருமான ரேவண்ணா உள்ளிட்டோருக்கும் கணக்காளராக உள்ளார். இந்நிலையில் வருமான வரித் துறை அதிகாரிகள் நேற்று சுனிலின் வீடு மற்றும் அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தினர்.

சுமார் 12 மணி நேரம் நடைபெற்ற சோதனையில் வருமான வரித் துறை அதிகாரிகள், குமாரசாமியின் குடும்பம் தொடர்பான பல்வேறு ஆவணங்களை கைப்பற்றியுள்ள

னர். குறிப்பாக கஸ்தூரி டிவி சேனல் மற்றும் கஸ்தூரி ரியல் எஸ்டேட், திரைப்பட தயாரிப்பு நிறுவனம் நடத்தி வரும் அனிதாவின் நிறுவனங்கள் தொடர்பான ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் மதச்சார்பற்ற ஜனதா தள நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த மே மாத இறுதியில் சுனில் வீட்டில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில், கடந்த 3 மாதங்களில் 2-வது முறையாக அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து மஜத செயலாளர் ரமேஷ் கூறும்போது, “கர்நாடகாவில் காங்கிரஸூடன் மஜத கூட்டணி அமைத்த பிறகே, மஜத.வினர் வீடுகளில் வருமான வரி சோதனை நடைபெறுகிறது.

அதற்கு முன்பு டி.கே.சிவகுமார் உள்ளிட்ட காங்கிரஸாரின் வீடுகளில் தான் சோதனை நடத்தப்பட்டது.

பாஜகவுடன் கூட்டணி வைக்காததால் மத்திய அரசு மஜதவை குறி வைக்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது. இதுகுறித்து கட்சி தலைவர் தேவகவுடாவிடம் பேசி, அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுப்போம்'' என்றார்.

நேற்று இந்த சோதனை நடந்த போது முதல்வர் குமாரசாமி, ராஜஸ்தானில் உள்ள அஜ்மீர் ஷெரிஃப் தர்காவில் வழிபாடு நடத்தினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x