Published : 24 Aug 2018 09:57 AM
Last Updated : 24 Aug 2018 09:57 AM

உ.பி.யில் விஷ்ணு பெயரால் நகரம் பிரம்மாண்ட கோயிலும் கட்டப்படும்: பாஜகவுக்கு போட்டியாக அகிலேஷ் யாதவ் அறிவிப்பு

உத்தரபிரதேசத்தில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கடவுள் விஷ்ணு பெயரில் நகரம் அமைப்பதுடன் பிரம்மாண்டமான விஷ்ணு கோயில் கட்டுவோம் என்று சமாஜ்வாடி கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவோம் என்று பாஜக கூறிவருகிறது. பாஜக மூத்த தலைவரும் உத்தரபிரதேச துணை முதல்வருமான கேசவ பிரசாத் மவுரியா, ‘ராமர்  கோயில் கட்டுவதற்கு நாடாளுமன்றத்தில் தனி சட்டம் கொண்டுவர வேண்டும்’ என்று கடந்த வாரம் கூறியிருந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், லக்னோவில் நேற்று பேட்டியளித்த சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியதாவது:

உத்தரபிரதேசத்தில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கடவுள் விஷ்ணு பெயரில் நகரம் அமைப்போம். இடாவாவில் 2,000 ஏக்கரில் பிரம்மாண்டமான நகரம் அமைக்கப்படும். அதோடு, அந்நகரில் கம்போடியாவில் அங்கோர்வாட்டில் உள்ள விஷ்ணு கோயிலைப்போல மிகப்பெரிய விஷ்ணு கோயில் கட்டுவோம். அங்கோர்

வாட் கோயிலைப் போன்ற கோயில் கட்டுவதற்கும் நகரம் திட்டமிடலுக்கும் நிபுணர் குழுவை கம்போடியாவுக்கு அனுப்புவோம். நம்முடைய பண்டைய காலத்தின் கலாசாரம், பண்பாட்டு அறிவு பற்றிய மையமாகவும் அந்நகரம் விளங்கும்.

மக்களின் ஓட்டுக்களைப் பெற அவர்களை பாஜக முட்டாளாக்குகிறது. நாங்கள் வளர்ச்சித் திட்டங்கள் மூலம் மக்களின் ஓட்டுக்களைப் பெறுவோம். பாஜக மீது மக்கள் விரக்தி அடைந்துள்ளனர். 2019 தேர்தலில் பாஜக தோல்வி அடையும்.  கன்னோஜில் இருந்து அடுத்த மாதம் எங்கள் கட்சியின் சார்பில் சைக்கிள் யாத்திரை நடைபெறும்.

இவ்வாறு அகிலேஷ் யாதவ் கூறினார். பாஜகவின் ராமர் கோயில் பிரசாரத்துக்கு போட்டியாக ‘விஷ்ணு கோயில்’ அறிவிப்பை அகிலேஷ் யாதவ் வெளியிட்டுள்ளதாக கருதப்படுகிறது.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x