Last Updated : 20 Aug, 2018 08:48 PM

 

Published : 20 Aug 2018 08:48 PM
Last Updated : 20 Aug 2018 08:48 PM

தேசிய பேரிடராக அறிவிக்க தயக்கம்: கேரளாவின் வெள்ளத்தை ‘தீவிர இயற்கைப் பேரிடராக’அறிவித்தது மத்திய அரசு

கேரள மாநிலத்தில் பெருமழை வெள்ளத்தாலும், நிலச்சரிவாலும் ஏற்பட்ட சேதத்தை, தேசியப் பேரிடராக அறிவிக்க அரசியல் கட்சிகள் வலியுறுத்திய நிலையில், அதற்குப் பதிலாக “தீவிர இயற்கை பேரிடராக” மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது.

தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து கேரளாவில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக மழை கொட்டித் தீர்த்தது. இந்த மழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் 350-க்கும் மேற்பட்ட மக்கள் பலியானார்கள். 14 மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன.

8 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளையும், உடைமைகளையும் இழந்து நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த மழை, வெள்ளத்தால் மாநிலத்துக்கு ரூ.18 ஆயிரம் கோடி அளவுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

மாநிலத்தில் ஏற்பட்ட இயற்கை சேதத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று முதல்வர் பினராயி விஜயன் வலியுறுத்தினார். மேலும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்டோர் கேரளாவுக்கு ஏற்பட்ட சேதத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி இருந்தனர்.

இதற்கிடைய மழை குறித்த சேதங்கள் தெரியவந்ததும் முதல்கட்டமாக ரூ.80 கோடியை மத்திய அரசு அறிவித்தது. அதன்பின் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் மாநிலத்தின் சேதங்களை பார்வையிட்டபின் ரூ.100கோடியை மத்தியஅரசு கூடுதலாக அறிவித்தது.

இதையடுத்து, பிரதமர் மோடி கடந்த சனிக்கிழமை மாநிலத்தில் ஏற்பட்டுள்ள சேதங்களைப் பார்வையிட்டபின், இடைக்கால நிவாரணாக ரூ.500 கோடி மத்திய அரசின் தரப்பில் இருந்து வழங்கப்படும் என உறுதியளித்தார். ஆனால், உடனடியாக ரூ.2 ஆயிரம் கோடி வேண்டும் என முதல்வர் பினராயி விஜயன் கோரிக்கை வைத்தார். ஆனால், ரூ.500 கோடி மட்டுமே கிடைத்தது.

மேலும், உயிரிழந்தவர்களுக்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் பிரதமர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

தீவிர இயற்கை பேரிடர்

இந்நிலையில், கேரள மாநிலத்தில் மழை, வெள்ளத்தால் ஏற்பட்ட இயற்கை சேதங்களை, தேசியப் பேரிடராக அறிவிக்காமல், தீவிர இயற்கை பேரிடராக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இது குறித்து மாநில உள்துறை அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில், கேரளாவில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவின் தீவிரத்தைப் புரிந்தபின், அது குறித்து பார்வையிட்டபின், இதைத் தீவிர இயற்கை பேரிடராக அறிவித்துள்ளோம்.

மழை மற்றும் வெள்ளத்தால் குறிப்பாக கடந்த ஒரு வாரத்தில் ஏற்பட்ட சேதங்களை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

அரிதான இயற்கை பேரிடராக அல்லது தீவிர இயற்கை பேரிடராக அறிவிக்கப்படும் பட்சத்தில் அந்த மாநில அரசுக்குத் தேசிய அளவில் இருந்து உதவிகள் வழங்கப்படும். தேசிய பேரிடர் தடுப்பு நிதித் தொகுப்பில் இருந்து கேரள மாநிலத்துக்கு நிதி அளிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலிக்கும்.

பேரிடர் நிவாரண நிதி என்பது மத்திய அரசு 3 பங்கும், மாநில அரசுகள் ஒரு பங்கும் அளித்து உருவாக்கப்படும் நிதித்தொகுப்பாகும். பேரிடர் நிவாரண நிதி போதுமானதாக இல்லை என்றால், கூடுதலாகத் தேசிய பேரிடர் நிதியில் இருந்து நிதி பெறப்படும்.

இதன் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கடன் அளித்தல், ஏற்கனவே கடன் பெற்றிருந்தால் அவற்றைத் தள்ளுபடி செய்தல், தள்ளுபடியில் கடன் வழங்குதல் போன்றவை செய்யப்படும்.

அறிவிக்கத் தேவையில்லை

இதற்கிடையே கேரளாவில் ஏற்பட்ட சேதங்களை தேசியப் பேரிடராக அறிவிக்கத் தேவையில்லை என்று கேரள உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கேரளாவில் ஏற்பட்ட மழை மற்றும் வெள்ளச் சேதங்கள் என்பது, இயற்கையின் தீவிர பேரிடராகும். தேசிய பேரிடர் மேலாண்மை வழிகாட்டுதலின்படி, இதை பேரிடரின் 3-வது வகையில்தான் சேர்க்க முடியும்.

ஆதலால், கேரள மாநிலத்தில் மழை, வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது. அதுபோன்ற சம்பவங்கள் என்பது மிகப்பெரியதாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x