Last Updated : 20 Aug, 2018 06:51 PM

 

Published : 20 Aug 2018 06:51 PM
Last Updated : 20 Aug 2018 06:51 PM

‘பணத்தைக் கொடுத்து வேதனைப்படுத்தாதீர்கள்’: கேரள முதல்வரை நெகிழச் செய்த மீனவர்கள்

கேரள மாநிலத்தில் வெள்ள மீட்புப்பணியில் ஈடுபட்டிருக்கும் மீனவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.3 ஆயிரம் ஊதியம் தரப்படும் என்று முதல்வர் பினராயி விஜயன் அறிவித்திருந்த நிலையில், அதை மீனவர்கள் நிராகரித்துள்ளனர்.

எங்களுக்கு பணத்தை கொடுத்து வேதனைப்படுத்தாதீர்கள், என்னுடைய சகோதர, சகோதரியைக் காப்பாற்றுவது எனது கடமையாகும் என்று மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்து கேரள மாநிலத்தில் கடந்த 10 நாட்களாக மழை கொட்டித்தீர்த்தது. 14 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கின. மழை வெள்ளத்திலும், நிலச்சரிவிலும் சிக்கி 350-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

வெள்ள நீரில் சிக்கி இருக்கும் மக்களை மீட்கும் பணியில் முப்படை வீரர்களும், தேசிய பேரிடர் மீட்புப்படையினரும், தீயணைப்பு படையினரும், போலீஸாரும் ஈடுபட்டனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபட்ட நிலையில், அவர்களுடன் சேர்ந்து பத்தினம்திட்டா, ஆலப்புழா, எர்ணாகுளம், திருச்சூர் மாவட்ட கடலோரப்பகுதி மீனவர்களும் மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.

எந்தவிதமான சுயநலமும் பாராமல் தங்களிடம் இருக்கும் படகுகளைக் கொண்டு வந்து வெள்ள நீரில் சிக்கி இருக்கும் மக்களை மீட்டு வருகின்றனர்.

மீனவர்களின் சேவை குறித்து நேற்று ஊடகங்கள் மத்தியில் முதல்வர் பினராயி விஜயன் பேசினார். அப்போது அவர் கூறுகையில், மீட்புப்பணியில் ஈடுபட்டுவரும் மீனவர்கள் ஒவ்வொருவரின் பணியும் மகக்தானது. ராணுவத்துக்கு இணையாகப் பணியை மேற்கொள்கிறார்கள். நம்மாநிலத்தின் ராணுவத்தினர்களாக இருக்கிறார்கள்.

இவர்களுக்கு நாள்தோறும் ரூ.3 ஆயிரம் ஊதியம் தரப்படும். படகுகளுக்கு எந்தவிதமான சேதம் ஏற்பட்டாலும் அதை அரசே சரிசெய்து தரும். தேவையான எரிபொருட்களை அரசே வழங்கும். படகுகளை மீண்டும் அவர்கள் இடத்தில் கொண்டுவந்து சேர்க்கும் பொறுப்பு அரசுடையது. மீட்புப்பணியில் ஈடுபடும் மீனவர்களுக்கு அதிகாரிகள் ஒத்துழைப்பு அளித்து அவர்களை வரவேற்க வேண்டும் என்று பேசி இருந்தார்.

இந்நிலையில், முதல்வர் பினராயி விஜயனின் பேச்சைக் கேட்டு நெகிழ்ந்த மீனவர்கள் அதை வரவேற்றுள்ளனர். ஆனால், கேரள அரசு அளிக்கும் பணத்தை ஏற்க மறுத்துவிட்டனர்.

கொச்சி போர்ட் பகுதியில் இருந்து கியாஸ் முகம்மது என்ற மீனவர் முதல்வர் பினராயி விஜயனுக்கு வேண்டுகோள் அளித்துப் பேசிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அவர் பேசியதாவது:

கேரள முதல்வர் எங்களின் பணியையும், சேவையையும் பாராட்டிப் பேசியது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. பல்வேறு இடங்களில் தேங்கி இருக்கும் நீரில் மக்களை மீட்பது சவாலானதுதான் அதைச் செய்து வருகிறோம்.

நாங்கள் அனைவரும் செய்யும் மீட்புப்பணியை மிகவும் மகிழ்ச்சியுடன் செய்து வருகிறோம். எங்களை உங்களின் ராணுவம் என்று நீங்கள் புகழ்ந்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

ஆனால், அதன்பின், எங்கள் சேவைக்கு ரூ.3 ஆயிரம் ஊதியம் தருவதாக நீங்கள் கூறியதுதான் வேதனையளிக்கிறது. எங்களுக்கு பணத்தைக் கொடுத்து வேதனைப்படுத்தாதீர்கள். எங்களின் சகோதர, சகோதரிகளைக் காப்பாற்றுவதும், சக மனிதர்களை காப்பதும் எங்களின் கடமை.

இலவசமாக எங்களின் படகுகளை அரசு சரிசெய்து கொடுப்பதாகக் கூறியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மக்களின் உயிரைக் காக்கும் பணிக்கு எங்களுக்கு பணம் வேண்டாம்.

இவ்வாறு பேசி முதல்வர் பினராயி விஜயனை நெகிழச் செய்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x