Published : 20 Aug 2018 06:02 PM
Last Updated : 20 Aug 2018 06:02 PM

வெள்ளம் பாதித்துள்ள கேரளாவுக்கு துணிகளை விடவும் எலெக்ட்ரீஷியன்களே தேவை: அல்போன்ஸ்

மழை மற்றும் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கேரளாவில் மீட்பு பணிகள் ஏறக்குறைய முடிவடையும் சூழல் உள்ளதால், உணவு, ஆடைகள் போன்ற உதவி தேவையில்லை, அதேசமயம் மின் இணைப்பு மற்றும் குடிநீர் இணைப்பு பணிகளை மேற்கொள்ளும் ஊழியர்கள் தான் இப்போதைய தேவை என மத்திய அமைச்சர் அல்போன்ஸ் கண்ணன்தானம் கூறியுள்ளார்.

கேரளாவில் வரலாறு காணாத கனமழை பெய்தது. இதன் காரணமாக மாநிலத்தின் 80 அணைகளும் திறக்கப்பட்டன. தொடர் மழையால் மாநிலம் வெள்ளத்தில் மூழ்கியது. கேரளாவின் மொத்த மக்கள் தொகை 3.48 கோடியில், 40 சதவீதம் பேர் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ராணுவம், கடற்படை, விமானப்படை, தேசிய பேரிடர் மீட்புப் படை, கடலோர காவல் படை, துணை ராணுவப் படை வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மீட்பு பணிகள் குறித்து மத்திய அமைச்சர் அல்போன்ஸ் கண்ணன்தானம் கூறியதாவது:

கேரளாவில் சுற்றுப்பயணம் செய்த பிரதமர் மோடி தேவையான உதவிகளை வழங்குவதாக உறுதியளித்துள்ளார். உடனடியாக 500 கோடி ரூபாய் வழங்குவதாக கூறியுள்ளார். அதற்கு முன்பே 100 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

10 லட்சம் பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் 10 லட்சம் பேர் குடியிருந்த இடங்களை விட்டு வெளியேறியுள்ளனர். மீட்பு பணிகள் ஏறக்குறைய முடிவடையும் தருவாயில் உள்ளது. மத்திய படையினருடன் இணைந்து மீனவர்களும் மிக அளப்பரிய பணிகளை செய்துள்ளனர்.

மக்களுக்கு தேவையான உணவு மற்றும் துணிகள் வழங்கப்பட்டுள்ளன. எனவே இனிமேல் அவற்றிற்கான தேவையில்லை. எனவே அடுத்தகட்ட பணிகள் இப்போதைய தேவையாக உள்ளது. பெரும்பாலான இடங்களில் மின் இணைப்பு இல்லை. மொபைல் போன்களை கூட சார்ஜ் செய்ய முடியாத நிலையில் மக்கள் உள்ளனர்.

மின் இணைப்புகள் வழங்குவதற்கான பணியாளர்கள் அதிகஅளவில் தேவைப்படுகின்றனர். அதுபோலவே வெள்ளம் வடிய தொடங்கியுள்ளது, மக்களுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்கப்பட வேண்டும். குடிநீர் இணைப்பு வழங்கம் ஊழியர்களும் அதிகஅளவில் தேவைப்படுகின்றனர் பல மாநில அரசுகளும் நிதியுதவி தந்துள்ளன. அவர்கள் போன்ற ஊழியர்களையும் தந்து உதவினால் பேருதவியாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x