Last Updated : 20 Aug, 2018 05:24 PM

 

Published : 20 Aug 2018 05:24 PM
Last Updated : 20 Aug 2018 05:24 PM

ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு: தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் தமிழக அரசு நிரந்தரமாக மூடியதற்கு எதிராக வேதாந்தா குழுமம் தொடர்ந்த வழக்கில் ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற தலைமையில் குழு அமைத்து ஆலையை ஆய்வு செய்ய தேசிய பசுமைத் தீர்ப்பாயம் இன்று உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த வேதாந்தா குழுமத்துக்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல், உடல்நல பாதிப்பு ஏற்படுவதாகக் கூறி அப்பகுதி மக்கள் தொடர்ந்து பல் வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். கடந்த மே மாதம் 22-ம் தேதி ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியானார்கள்.

இதன் தொடர்ச்சியாக ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடத் தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம், டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கில் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் நிபந்தனைகளுக்கு உட்பட்டு தனது நிர்வாகப் பணியை மேற்கொள்ளலாம். சுற்றுச்சூழலுக்கு எந்தவிதமான கேடுவிளைவிக்காமல் பணியை மேற்கொள்ளலாம் என பசுமைத் தீர்ப்பாயம் கடந்த 9-ம் தேதி அனுமதி அளித்தது.

இதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தது. ஆனால், இந்த மனுவை விசாரணை செய்த உச்ச நீதிமன்றம் தேசிய பசுமைத் தீர்ப்பாயமே முடிவு எடுக்க உத்தரவிட்டிருந்தது.

ஸ்டெர்லைட் ஆலையை எந்தவிதமான முன்னெச்சரிக்கை நோட்டீஸும், காரணமும் இன்றி தமிழக அரசு மூடியது தவறானது. அந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி வேதாந்தா குழுமத்தின் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், தேசிய பசுமைத் தீரப்பாயத்தின் தலைவர் ஏ.கே. கோயல் முன்னிலையில் இந்த மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்தன. அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் ஸ்டெர்லைட் ஆலையால், ஏற்பட்ட மாசு குறித்து கடந்த 16-17-ம் தேதி நடத்திய ஆய்வு குறித்த அறிக்கையைத் தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்தனர்.

ஆனால், ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்பட்ட மாசு குறித்து அறிவியல் பூர்வமான அறிக்கையை தாக்கல் செய்யக் கால அவகாசம் கேட்டனர். ஆனால், இதற்கு நீதிபதி அவகாசம் அளிக்க மறுத்துவிட்டார்.

அதேசமயம், ஸ்டெர்லைட் ஆலைக் குறித்து அனைத்து அம்சங்களையும் ஆய்வு செய்வதற்கு தமிழகத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியை நியமிக்கலாம் என்று நீதிபதி கோயல் தெரிவித்தார். ஆனால், இதற்கு வேதாந்தா குழுமத்தின் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் சுந்தரம் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார்.ஆலையை ஆய்வு செய்ய வேறு மாநில நீதிபதியை நியமிக்க வேண்டும், தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி யாரையும் நியமிக்கக்கூடாது என்று தெரிவித்தார்.

இந்நிலையில், இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கோயல் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:

ஸ்டெர்லைட் ஆலை குறித்த அனைத்து அம்சங்களையும் ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்படும். இந்தக் குழுவில் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரித்தின் உறுப்பினர் ஒருவரும், மத்திய சுற்றசூழல் அமைச்சகத்தின் சார்பில் ஒருவரும் இடம் பெறுவார்கள். இந்தக் குழு சுயஅதிகாரம் பெற்ற குழுவாக இயங்கும்.

இந்த ஓய்வு பெற்ற நீதிபதி யார் என்பது குறித்து ஆலோசனை நடத்தி அறிவிப்போம். இந்த குழு 2 வாரங்களில் தங்களின் பணியைத் தொடங்கி 6 வாரங்களுக்குள் அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும்.

அதேசமயம், வேதாந்தா குழுமம் ஸ்டெர்லைட் ஆலையில் தங்களின் நிர்வாக ரீதியான பணிகளை மேற்கொள்ளலாம். ஆனால், உற்பத்தி ரீதியான பணிகளை தொடங்கக்கூடாது. இதை மாவட்ட ஆட்சியர் உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x