Published : 20 Aug 2018 04:41 PM
Last Updated : 20 Aug 2018 04:41 PM

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டோருக்காக கடும் உழைப்பு: 24 மணி நேரமும் சப்பாத்திகள் தயாரித்த கேரள சிறைக்கைதிகள்

திருவனந்தபுரம் மத்தியச் சிறையில் கைதிகள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உணவுத் தயாரிப்பில் கடுமையாக உழைத்து வருகின்றனர். நிவாரண முகாம்களில் இருப்பவர்களுக்காக சப்பாத்தி, வேகவைத்த வெஜிடபிள் காய்களையும் சிக்கன் கறியையும் தயாரிப்பதில் ஓயாமல் ஈடுபட்டு வருகின்றனர்.

கேரளாவில் வரலாறு காணாத மழை மற்றும் வெள்ளத்துக்கு 300க்கும் மேற்பட்டோர் பலியாக லட்சக்கணக்கானோர் நிவாரண முகாம்களில் அடைக்கலம் புகுந்துள்ளனர். உதவிகள் பலதரப்பட்ட பகுதிகளிலிருந்தும் இன்னும் வந்து கொண்டேதான் இருக்கின்றன.

பூஜாபுராவில் உள்ள மத்திய சிறையில் ஃப்ரீடம் என்ற வணிக முத்திரையில் சப்பாத்திகள், வெஜ்கறி, சிக்கன் கறி தயாரிக்கப்பட்டு விலைக்கே சில ஆண்டுகளாக விற்கப்பட்டு வருகின்றன. குறைந்த விலை உணவான இவற்றுக்கு கேரள மக்களிடம் வரவேற்பு அதிகம் இருந்து வருகிறது.

இந்நிலையில் சிறை அதிகாரிகள் கூறும்போது, “வெள்ளத்தில் பாதிக்கப்பட்டோருக்காக கடந்த வாரத்தில் மட்டும் 40,000-50,000 சப்பாத்திகள் செய்து அனுப்பப்பட்டன” என்றார்.

சிறைக்கைதிகளில் குறிப்பாக 50 கைதிகளுக்குப் பணிச்சுமை அதிகம். இவர்கள் 24 மணிநேரமும் ஷிஃப்ட் முறையில் அயராது உணவு தாயாரித்து வருகின்றனர்.

நிவாரண முகாம்களுக்கு அனுப்புவதற்காக மிகவும் நீட்டாக பேக் செய்யப்பட்ட சப்பாத்திகள் சிறையிலிருந்து செல்கின்றன.

இவை வெள்ளத்தில் அகப்பட்டு வீட்டு மாடியில் இருப்போருக்காக வானிலிருந்து போடுவதற்கான பொட்டலங்களாகும் என்று சிறை அதிகாரி தெரிவித்தார்.

சப்பாத்திகளோடு, கறி, ஜாம், பேக் செய்யப்பட்ட குடிநீர் ஆகியவையும் அளிக்கப்பட்டு வருகிறது, தற்போது மீட்புப் பணிகள் ஏறத்தாழ முடிவுறும் தறுவாயில் இருப்ப்தால் சப்பாத்தி பாக்கெட்டுகளுக்கான தேவையும் குறைந்துள்ளது.

2015-ல் சென்னை வெள்ளத்தில் மிதந்தபோது திருவனந்தபுரம் மத்தியச் சிறையிலிருந்து 50,000 சப்பாத்திகள் தயாரித்து இங்கு அனுப்பப்பட்டதும் நினைவுகூரத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x