Last Updated : 20 Aug, 2018 04:27 PM

 

Published : 20 Aug 2018 04:27 PM
Last Updated : 20 Aug 2018 04:27 PM

‘வெட்கக்கேட்டின் உச்சம்; சித்துவின் செயல் ராகுல் காந்தியின் மதிப்பைக் கெடுத்துவிட்டது’: பொரிந்து தள்ளிய சிவசேனா

பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பதவி ஏற்பு விழாவுக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து சென்று, அந்நாட்டு ராணுவத் தளபதியை கட்டித்தழுவியதை சிவசேனா கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சித்துவின் செயல்பாடு, வெட்கக்கேட்டின் உச்சக்கட்டம், போலி தேசப்பற்றாளர், ராகுல் காந்தியின் மதிப்பைக் கெடுத்துவிட்டார் என்று சிவசேனா கட்சி காட்டமாகத் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் பிரதமராக முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் நேற்று பதவி ஏற்றார். அந்த பதவி ஏற்பு விழாவுக்கு இந்தியாவின் கபில்தேவ், கவாஸ்கர், சித்து ஆகியோரை இம்ரான் கான் அழைத்திருந்தார்.

அதில் கபில்தேவ், கவாஸ்கர் செல்லவில்லை, ஆனால், சித்து மட்டும் பாகிஸ்தான் சென்றார். பதவி ஏற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற சித்துவை, அந்நாட்டு ராணுவத் தளபதி வரவேற்றுக் கட்டித்தழுவினார். சித்துவும் கட்டித்தழுவினார்.

சித்துவின் இந்த செயலைப் பார்த்த பாஜக கடுமையாக விமர்சித்து கருத்துக்களைத் தெரிவித்திருந்தது. இந்நிலையில், சிவசேனா கட்சி தனது அதிகாரப்பூர் நாளாடேன “சாம்னா”வில் சித்து செயல் குறித்து தலையங்கத்தில் கருத்து தெரிவித்துள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:

காஷ்மீரின் சுதந்திரத்துக்காக குரல் கொடுத்து, எல்லையில் ராணுவத்தினரையும், தீவிரவாத ஊடுருவல்களையும் நடத்தி வரும் பாகிஸ்தான் ராணுவத் தளபதியை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நவ்ஜோத் சிங் சித்து கட்டித்தழுவியது வெட்கக்கேட்டின் உச்சக்கட்டம்.

ஜம்மு காஷ்மீரில் பதற்றமான சூழல் நிலவிய போதிலும்கூட பாகிஸ்தான் சென்ற சித்துவை பாஜகவினர் துரோகி என்று அழைக்கவில்லை.

ஆனால், மோடியை கிண்டல் செய்தபோதும், பணமதிப்பு நீக்க நடவடிக்கையை எதிர்த்தார் என்பதற்காகவும் அவரை பாஜகவினர் தேசத் துரோகி என்று கூறினார்கள்.

பாகிஸ்தானுக்குச் சென்ற மோடி அந்நாட்டுப் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப்பை கட்டித்தழுவினார். அதை மோடியின் ராஜதந்திர நடவடிக்கை என்று பாஜகவினர் அழைத்தார்கள். அப்படி இருக்கும்போது, சித்துவின் நடவடிக்கையை மட்டும் அவர்கள் எப்படி விமர்சனம் செய்ய முடியும்.

நவ்ஜோத்சிங் சித்து இப்போது காங்கிரஸ் கட்சியில் இருந்தாலும் கூட , நீண்டகாலம் பாஜகவில் இருந்தார். ஆதலால், சித்துவை பாஜகவினர் விமர்சிக்கும் முன்னர் சுயபரிசோதனை செய்து, யார் சித்துவுக்கு இதுபோன்ற செயல்களை கற்றுக்கொடுத்திருக்க முடியும் என்பதை ஆய்வுசெய்ய வேண்டும்.

பிரதமர் மோடி வலிமையான நடவடிக்கைகளைத் துணிச்சலாக எடுக்கக்கூடிய திறமை பெற்றவர். ஆதலால் பாகிஸ்தானுக்கு யாரும் செல்லக்கூடாது என்று அவர் தடைவிதித்திருக்கலாம்.

பாகிஸ்தானுக்குச் சித்து சென்றது வெட்கக்கேடானது. இது காங்கிரஸ்கட்சிக்கு மட்டுமல்ல, நாட்டின் பாதுகாப்பு மற்றும் எல்லையில் உயிர்த்தியாகம் செய்த வீரர்களை அவமானப்படுத்தும் செயலாகும்.

இம்ரான் கான் அழைப்பை கபில்தேவ், கவாஸ்கர் ஆகியோர் நிராகரித்து பாகிஸ்தான் செல்ல மறுத்துவிட்ட நிலையில், சித்து மட்டும் தவளை மாதிரி தவ்விக்கொண்டு தனது போலி தேசப்பற்றை நிரூபித்து இருக்கிறார்.

பாகிஸ்தான் மீது சித்துவுக்கு அதிகமான பாசம் இருந்தால், அவர் பாகிஸ்தான் தேர்தலில் போட்டியிட்டு இருக்கலாமே. பாகிஸ்தான் தெஹரீக் இ இன்சாப் கட்சியில் சித்துவுக்கு ஏற்கனவே அழைப்பு வந்து, தேர்தலில்போட்டியிட வாய்ப்பு கிடைத்தது.

இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகளின் போது, இம்ரான் கான் எப்படியெல்லாம் பேசி இருக்கிறார், விஷம் கக்கும் வார்த்தைகளை வார்த்தைகளை உதிர்த்திருக்கிறார், இது புனிதப் போர் என்று பேசியதையெல்லாம் நினைக்க வேண்டும்.

பாகிஸ்தானின் தலைமைப் பதவிக்கு இம்ரான் கான் வந்துள்ளது இந்தியாவுக்குத் தலைவலியை மேலும் அதிகப்படுத்தும்.

இம்ரான் கான் பிரதமராக வந்ததால் யார் பயன்பெறப் போகிறார்கள். பாகிஸ்தான் ராணுவத்தின் முகமூடிதான் இம்ரான் கான். ஆட்சி செய்யப்போவதெல்லாம் ராணுவம்தான். ஆதலால், ராணுவத் தளபதியை சித்து கட்டித்தழுவியது குற்றமாகும்.

இம்ரான் கான் பதவி ஏற்பு விழாவுக்குச் சித்து செல்லாமல் இருந்தால்கூட என்ன கெட்டுவிடப் போகிறது. பதவி ஏற்பு நிகழ்ச்சி நடந்திருக்கும். சித்துவின் செயல்பாடு ராகுல் காந்தியின் சமீபத்திய செயல்பாட்டை பலவீனப்படுத்திவிட்டது, அவரின் மதிப்பைக் கெடுத்துவிட்டது. இவர் மீது ராகுல் காந்தி என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார்.

நவ்ஜோத்ச சிங் சித்து உண்மையான தேசப்பற்றாளராக இருந்தால், பாகிஸ்தானுக்கு சென்றிருக்கக் கூடாது, ராணுவத் தளபதியை கட்டியணைத்து இருக்கக்கூடாது.

இவ்வாறு சிவசேனா கட்சி தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x