Published : 20 Aug 2018 03:47 PM
Last Updated : 20 Aug 2018 03:47 PM

கேரள மழை ‘ஹீரோக்கள்’ - வெள்ளத்தில் தவிப்பவர்களை துணிவுடன் மீட்கும் மீனவர்கள்

கேரளாவில் வரலாறு காணாத கனமழை பெய்தது. இதன் காரணமாக மாநிலத்தின் 80 அணைகளும் திறக்கப்பட்டன. தொடர் மழையால் மாநிலம் வெள்ளத்தில் மூழ்கியது. கேரளாவின் மொத்த மக்கள் தொகை 3.48 கோடியில், 40 சதவீதம் பேர் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ராணுவம், கடற்படை, விமானப்படை, தேசிய பேரிடர் மீட்புப் படை, கடலோர காவல் படை, துணை ராணுவப் படை வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 67 ஹெலிகாப்டர்கள், 24 சரக்கு விமானங்கள், 548 மோட்டார் படகுகள் மீட்புப் பணியில் பயன்படுத்தப் படுகின்றன.

எனினும் ராணுவத்துடன் உள்ளூர் மக்களும் அதிகஅளவில மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக மீனவர்கள் தங்கள் படகுகளுடன் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளுக்கு சென்று நூற்றுக்கணக்கானோரை மீட்டு வருகின்றனர்.

மலப்புரம் மாவட்டத்தில் மீனவர்கள் 5 பேர் வீதம் கொண்ட குழுக்களாக இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சுவாகதன்மேடு, வெங்கரா உள்ளிட்ட இடங்களில் நூற்றுக்கணக்கானோரை மீனவர்கள் மீட்டுள்ளனர். ராணுவம் மற்றும் பேரிடர் மீட்பு குழு அந்த பகுதிக்கு வரும் முன்பாகவே மீனவர்கள் குழுக்களாக பிரிந்து பல பகுதிகளிலும் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

மீனவர்களின் அளப்பரிய பணியை பார்த்த தீயணைப்புத்துறையினர் மற்றும் காவல்துறையினர் அவர்களுடன் இணைந்து முழு வீச்சில் மீட்பு பணிகளை செய்தனர். எர்ணாகுளம் மாவட்டத்தின் அர்துன்கால் உள்ளிட்ட இடங்களில் பல வீடுகளை வெள்ளம் சூழ்ந்த நிலையில் மீனவர்கள் படகுகள் இல்லாமல் நீந்திச் சென்று பலரை காப்பாற்றினர்.

கேரள மீனவர்களுக்கு உதவியாக கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 130 மீனவர்களும் எர்ணாகுளம் மாவட்டத்தில் வெள்ளத்தில் சிக்கியர்வர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மீனவர்கள் படகுகளில் ஜிபிஎஸ் கருவியும் வைத்திருப்பதால் மீட்பு பணிகளை வேகமாகவும், அதேசமயம் துல்லியமாகவும் மேற்கொண்டு வருகின்றனர்.

மீனவர்களின் இந்த முயற்சிக்கு கேரள அரசும் முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறது. மீனவர்கள் குழுக்களாக பிரிந்து செயல்படுவதற்கு தேவையான நிதி மற்றும் பொருள் உதவிகளை செய்து வருகிறது.

வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பதற்கு மட்டுமின்றி பாதிக்கப்பட்டவர்களுக்கு வெள்ளத்தில் படகுகளை ஓட்டிச் சென்று நிவாரணப் பொருட்களை கொடுக்கும் பணியையும் கேரள மீனவர்கள் செய்து வருகின்றனர்.

செங்கனூர் பகுதி இந்த மழையில் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு பல வீடுகளும் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளன. வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட பலரும் உணவின்றி இரண்டு நாட்களாக தவித்தனர். அந்த பகுதி முழுவதும் மீனவர்கள் களம் இறங்கி முதல் கட்டமாக உணவுப்பொருட்களை கொண்டு சென்றனர். இரண்டாவது நாளில் சிக்கியவர்கள் அனைவரையும் மீட்டு வந்தனர்.

கடுமையான மழை மற்றும் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டு, நிவாரண உதவிகள் செய்து வரும் மீனவர்களுக்கு கேரள மக்கள் மத்தியில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. சமூகவலைதளங்களில் மீனவர்களின் அளப்பரிய பணியை பலரும் பாராட்டி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x