Last Updated : 20 Aug, 2018 03:26 PM

 

Published : 20 Aug 2018 03:26 PM
Last Updated : 20 Aug 2018 03:26 PM

100 ரூபாய் வருவாய் ஈட்ட 111ரூபாய் செலவிடும் ரயில்வே துறை: நிதியாண்டின் முதல் 4 மாதங்களில் திணறல்

இந்திய ரயில்வே துறையின் நடப்பு நிதியாண்டு ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான 4 மாதத்தில் 100 ரூபாய் ஈட்டுவதற்காக 111 ரூபாய் செலவு செய்து வருவது தெரியவந்துள்ளது.

ரயில்வே துறையின் இயக்கச் செலவு எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்தது, 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளைச் செயல்படுத்தியது, ஓய்வூதியச் செலவு போன்றவற்றால்,இந்த அளவுக்கு வரவுக்கு மீறிய செலவு உண்டாகக் காரணம் என்று கூறப்படுகிறது.

2018-19-ம் ஆண்டு ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான 4 மாதத்தில் ரயில்வேயின் இயக்கச் செலவு 111.51 விழுக்காடு அதிகரித்துள்ளது. அதாவது, ஒவ்வொரு 100 ரூபாயை ஈட்டுவதற்காகவும் 111 ரூபாயைச் செலவிடுகிறது.

ரயில்வே துறை தான் இயக்கும் ரயில்கள், விளம்பரங்கள் உள்ளிட்ட இதர வழிகள் மூலம் கிடைக்கம் வருவாயை எவ்வாறு திறன்மிக்க வகையில், முதலீட்டுச் செலவுக்கும், இயக்கச் செலவுக்கும் பிரித்துப் பயன்படுத்துகிறது என்பதைப் பொருத்து அதன் செயல்பாட்டை அறிய முடியும்.

இதன்படி, ரயில்வேதுறை திறன் குறைவாக தனது செலவினங்களை கையாள்வதால், அதிகமான இயக்கச் செலவு உருவாகி இருப்பதைக் காட்டுகிறது. இதனால், ரயில்வே துறை தன்னுடைய முதலீட்டு செலவுகள் மூலம் வருவாயை ஈட்டமுடியவில்லை . அதாவது செலவுகள் முதல் புதிய முலீடுகளைச் செய்தோ, அல்லது புதிய இருப்புப்பாதைகளை அமைத்தோ அல்லது அதிகமான ரயில்பெட்டிகளை தயாரித்தோ வருவாயைப் பெருக்க முடியவில்லை.

ரயில்வே துறைக்கு போட்டியாக சாலைப் போக்குவரத்து துறை திறன்மிக்க வகையில் செயல்பட்டுவருவது, நவீனமாகி வருவதும் ரயில்வேயின் இயக்கச் செலவை அதிகரித்துள்ளது. சரக்குப் போக்குவரத்துக்கும், பயணிகள் போக்குவரத்துக்கும் ரயில்வேக்கு போட்டியாக சாலைப் போக்குவரத்து துறையும் வளர்ந்து வருகிறது. இதனால் குறுகிய காலகட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளைக் கூட ரயில்வேதுறையால் எட்டமுடியவில்லை.

நடப்பு நிதியாண்டில் முதல் 4 மாதங்களுக்குப் பயணிகள் ரயில்போக்குவரத்தின் மூலம் ரூ.17 ஆயிரத்து 737 கோடி வருவாயை எட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. ஆனால், ரூ.17 ஆயிரத்து 274 கோடி மட்டுமே ஈட்டப்பட்டுள்ளது.

இதேபோல, சரக்குப் போக்குவரத்திலும் இலக்கைக் காட்டிலும் குறைவாகவே வருவாய் ஈட்டியுள்ளது ரயில்வே. ஏப்ரல் முதல் ஜூலை மாதங்களில் ரூ.39 ஆயிரத்து 253 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், ரூ.36 ஆயிரத்து 481 கோடி மட்டுமே வருவாய் கிடைத்துள்ளது. ஒட்டுமொத்தமாகக் கடந்த 4 மாதங்களில் ரயில்வே துறையின் வருவாய் இலக்கு ரூ.61 ஆயிரத்து 902 கோடி நிர்ணயிக்கப்பட்ட நிலையில், ரூ.56 ஆயிரத்து 717 கோடி மட்டுமே ஈட்டப்பட்டுள்ளது.

ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான இயக்கச் செலவின் இலக்கு ரூ.50 ஆயிரத்து 487 கோடியாக எல்லை நிர்ணயிக்கப்பட்ட நிலையில், ரூ.52 ஆயிரத்து 517 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. ஏறக்குறைய ரூ.2 ஆயிரத்து 517 கோடி கூடுதலாக செலவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து செய்திநிறுவனத்திடம் ரயில்வே துறையின் மூத்த அதிகாரி ஒருவர் அளித்த பேட்டியில் கூறுகையில், “ ரயில்வே துறையின் இயக்கச் செலவு தவிர்த்து இதர செலவுகளான 7-வது ஊதியக்குழுவை அமல்படுத்தியது, ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதியம் அளித்தல் உள்ளிட்டவற்றால் இலக்கைக் காட்டிலும் செலவு உயர்ந்துள்ளது. இதனால், 100 ரூபாய் ஈட்டுவதற்கு ரயில்வே துறை ரூ.111.51 காசுகளைச் செலவு செய்கிறது.

7-வது ஊதியக்குழுவை அமல்படுத்தியது, ஓய்வூதியத்துக்காக ரூ.47 ஆயிரம் கோடி செலவாகிறது. இது நிர்ணயிக்கப்பட்ட செலவைக் காட்டிலும் ரூ.12 ஆயிரம் கோடி அதிகமாகும்.

கடந்த 5 ஆண்டுகளாகவே ரயில்வே துறையின் இயக்கச் செலவு என்பது 90 சதவீதத்துக்கும் அதிகமாகவே சென்று வருகிறது. சரக்குப் போக்குவரத்து சூடுபிடித்து வேகமெடுத்தால், நிச்சயம் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைவோம் என்று நம்புகிறோம் என அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x