Published : 20 Aug 2018 01:12 PM
Last Updated : 20 Aug 2018 01:12 PM

கேரளாவில் கொட்டித் தீர்த்த கனமழை குறைந்தது: ரயில், பேருந்து போக்குவரத்து தொடக்கம்

கேரளாவில் கடந்த சில நாட்களாக கொட்டித் தீர்த்த கனமழை சற்று ஓய்ந்துள்ளது. மீட்பு பணிகள் முழு அளவில் முடுக்கி விடப்பட்டுள்ளன. பெரும்பாலான இடங்களில் ரயில், பேருந்து போக்குவரத்து தொடங்கியுள்ளதால் மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது.

கேரளாவில் வரலாறு காணாத கனமழை பெய்தது. இதன் காரணமாக மாநிலத்தின் 80 அணைகளும் திறக்கப்பட்டன. தொடர் மழையால் மாநிலம் வெள்ளத்தில் மூழ்கியது. கேரளாவின் மொத்த மக்கள் தொகை 3.48 கோடியில், 40 சதவீதம் பேர் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ராணுவம், கடற்படை, விமானப்படை, தேசிய பேரிடர் மீட்புப் படை, கடலோர காவல் படை, துணை ராணுவப் படை வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 67 ஹெலிகாப்டர்கள், 24 சரக்கு விமானங்கள், 548 மோட்டார் படகு கள் மீட்புப் பணியில் பயன்படுத்தப் படுகின்றன. மத்திய அரசு ரூ.600 கோடி நிதியுதவியை அறிவித்துள்ளது. பல மாநிலங்களும் நிதியுதவி அளித்துள்ளன.

மாநிலத்தின் மொத்தமுள்ள 14 மாவட்டங்களில் 13 மாவட்டங்கள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன. 8 லட்சம் பேர் நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். மேலும் 8 லட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர். 8,000 வீடுகள் இடிந்துள்ளன. 26,000 வீடுகள் சேதமடைந்துள்ளன. 40,000 ஹெக்டேர் பயிர்கள் அழுகியுள்ளன. 134 பாலங்கள் இடிந்துள்ளன. 16,000 கி.மீ. சாலைகள் சேதமடைந்துள்ளன. ரூ.21,000 கோடிக்கும் அதிகமாக பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. பலி எண்ணிக்கை 368 ஆக உயர்ந்துள்ளது.

இந்தநிலையில் கடந்த சில  நாட்களாக கொட்டித் தீர்த்த கனமழை சற்று ஓய்ந்துள்ளது. இதனால் இயல்பு நிலை மெல்ல மெல்ல திரும்பி வருகிறது. மாநிலத்தின் பல பகுதிகளிலும் ரயில் மற்றும் பேருந்து போக்குவரத்து தொடங்கியுள்ளது. நிலைமை சீரடைந்து வரும் பகுதிகளில் மின்சார இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. மலப்புரம் மாவட்டங்களின் சில இடங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் இல்லாததால் மக்கள் அவதியடைந்துள்ளனர்.

பலத்த மழையால் கொச்சி விமான நிலையம் மூடப்பட்ட நிலையில், மாற்று ஏற்பாடாக அங்குள்ள கடற்படை விமான தளத்தில் பயணிகள் விமான போக்குவரத்தை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடற்படை தளத்தில் முதல் பயணிகள் விமானம் இன்று காலை தரையிறங்கியது.

இதனால் மழை, வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட கொச்சிக்கு நேரடியாக நிவாரணப் பொருட்களை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிவாரணப் பொருட்களை ஏற்றிக் கொண்டு வந்த விமானம் கொச்சி கடற்படை விமானதளத்தில் தரையிறங்கியது. பல மாநிலங்களில் இருந்தும் கொண்டு வரப்படும் நிவாரணப் பொருட்கள் கொச்சி பகுதியில் விநியோகம் செய்யும் பணியும் தொடங்கியுள்ளது.

எர்ணாகுளம் மாவட்டத்தில் மொத்தம் 50 ஆயிரம் பேர் வெள்ளப்பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். அதேசமயம் திருச்சூர் மாவட்டத்தில் சில இடங்களில் மக்கள் இன்னமும் வெள்ளப்பகுதிகளில் சிக்கி உள்ளனர். அவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.

கொச்சி நகர மேயர் சவுமினி ஜெயின் தனது மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை ரத்து செய்துள்ளார். இதற்காக செலவிடப்பட உள்ள தொகையை முதல்வர் நிவாரண நிதிக்கு அனுப்ப இருப்பதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x