Published : 19 Aug 2018 08:14 PM
Last Updated : 19 Aug 2018 08:14 PM

‘மாநிலத்தை மறுகட்டமைப்பதுதான் மிகப்பெரிய பணி’: கேரள முதல்வர் பினராயி விஜயன் பேட்டி

வெள்ளத்தில் சிக்கி இருக்கும் மக்களை மீட்கும் பணியில் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டோம். இப்போது எங்கள் முன் இருக்கும் மிகப்பெரிய பணி மாநிலத்தை மறுகட்டமைப்பு செய்வதுதான் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.

கேரள மாநிலத்தில் கடந்த 10 நாட்களாகப் பெய்து வந்த தொடர் மழை குறையத் தொடங்கியது. இந்த மழையிலும், வெள்ளத்திலும், நிலச்சரிவிலும் சிக்கி இதுவரை 350-க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளனர். ஏராளமானோரைக் காணவில்லை. 6லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளத்தில் சிக்கியிருக்கும் மக்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர், ராணுவம், கடற்படை, விமானப்படை, தீயணைப்பு படையினர் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு நாளும் நடக்கும் மீட்புப்பணியின் நிலவரம் குறித்து முதல்வர் பினராயி விஜயன் விளக்கம் அளித்து வருகிறார்.

மாநிலத்தின் நிவாரணப் பணிகளுக்காக பல்வேறு மாநிலங்களும் நிதியுதவி அளித்து வருகின்றன. நிவாரணப் பொருட்களையும் அனுப்பி வைத்து வருகின்றன.

இந்நிலையில், முதல்வர் பினராயி விஜயன் நிவாரணப் பணிகள் குறித்து ஊடகங்களுக்கு இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

நிவாரணப் பணிகள் மிக வேகமாக நடந்து வருகின்றன. அடுத்து எங்கள் முன் இருக்கும் மிகப்பெரிய பணி மாநிலத்தை மறுகட்டமைப்பு செய்வதும், புனரமைப்பு செய்வதும்தான்.

மீட்புப்பணிகளைப் பொறுத்தவரை ஏறக்குறைய நாங்கள் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டோம். 3,274 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் 8 லட்சத்து 46 ஆயிரத்து 680 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் வீடுகளை இழந்துள்ளனர். எங்களுடைய முக்கியக் கவலை என்பதே, உயிர்பலி ஏற்படாமல் தடுக்க வேண்டும் என்பதுதான். அந்த வகையில் அதில் வெற்றி பெற்றுவிட்டோம் என நினைக்கிறேன்.

அடுத்தாக மக்கள் வாழுமிடங்களில் சுத்தத்தையும், சுகாராதத்தையும், ஏற்படுத்தி தொற்றுநோய்கள் வராமல் தடுப்பது முக்கியமாகும். பல்வேறு இடங்களில் நீர் தேங்கி இருப்பதால், தொற்றுநோய்கள் ஏற்படாமல் தடுக்க வேண்டும்.

வீடுகளில் தேங்கி இருக்கும் தண்ணீர் வடிந்தபின்பும் கூட சேறு நிறைந்திருக்கும் அவற்றை அப்புறப்படுத்த வேண்டும். நோய்கள் பரவாமல் தடுக்க வேண்டும். கிராமங்களில் சூழ்ந்துள்ள நீர் வடிந்தபின், அவற்றைச் சுத்தம் செய்து சுகாதாரத்தை பராமரிக்க வேண்டும்.

சுகாதாரத்துறை ஆய்வாளர் அறிவுரைப்படி அனைத்து இடங்களிலும் குளோரின் பவுடரை தூவ வேண்டும். இதற்கு அனைவரும் ஒத்துழைத்து உதவி செய்ய வேண்டும். ஒவ்வொரு கிராமத்துக்கும் 6 சுகாதாரத்துறை ஆய்வாளர்கள் நியமிக்கப்படுவார்கள். கழிவுகளை வெளியேற்றுவதற்காக அரசு சார்பில் முறைப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு நோய்வாய்ப்பட்டுள்ளவர்களுக்கு தனியார் மருத்துவமனைகள் நல்ல சிகிச்சை அளிப்பார்கள் என நம்புகிறேன். இன்சுலின், டயாலிசிஸ் போன்ற சிறப்பு சிகிச்சை தேவைப்படுபவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பப்பட வேண்டும். இப்போது எங்கள் முன் மறுகட்டமைப்புதான் மிகப்பெரிய பணியாக இருக்கிறது.

மாநிலத்தில் போக்குவரத்தை சீரமைத்தில் ரயில்வேதுறையினர் மிகப்பெரிய பங்காற்றியுள்ளனர். விரைவில் மாநில போக்குவரத்துறையும் சீரமைக்கப்பட்டு இயல்புநிலைக்குக் கொண்டுவரப்படும். இந்த வெள்ளத்தில் 221 பாலங்கள் சேதமடைந்துள்ளன, 59 பாலங்கள் இன்னும் வெள்ளத்தில் சிக்கி இருக்கின்றன.

மாணவர்கள் புத்தகங்களை இழந்துள்ளனர், பலர் முக்கிய ஆணவங்களை இழந்துள்ளனர். அவர்களுக்கு உரியவை திரும்ப பெற ஏற்பாடு செய்யப்படும். புதிதாக 34 லட்சம் புத்தகங்கள் அச்சிட உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவசசீருடைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எங்கள் மாநிலத்தின் சீரமைப்புக்கும், கட்டமைப்புக்கும் உதவி செய்து வரும் அனைவருக்கும் ஆழ்மனதில் இருந்து நன்றியைத் தெரிவிக்கிறேன். ஏராளமான மக்கள் நேரடியாகவும், முதல்வர் நிவாரண நிதிக்கு நிதி அளித்தும் உதவி செய்து வருகின்றனர். மத்திய அ ரசு ப ல்வேறு வகைகளில் உதவி செய்துள்ளது. எங்கள் மாநிலத்தின் சூழலை நன்கு புரிந்துகொண்டு பிரதமர் மோடி அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். கேரள அரசு சார்பில் நன்றியைத் தெரிவிக்கிறேன்.

இவ்வாறு பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x