Last Updated : 19 Aug, 2018 05:30 PM

 

Published : 19 Aug 2018 05:30 PM
Last Updated : 19 Aug 2018 05:30 PM

‘என்னை மன்னித்துவிடு’: ‘தீயா வேலை செய்யணும் குமாரு’ திரைப்படம் போல், காதலிக்காக நகரம் முழுவதும் பேனர்கள் வைத்து போலீஸை திணறடித்த இளைஞர்

காதலியிடம் சண்டையிட்டு பேசமுடியாமல் தவித்த இளைஞர் அவரிடம் மன்னிப்பு கேட்டு நகரம்முழுவதும் பதாகைகளை வைத்து போலீஸை திணறடித்துவிட்டார்.

இந்த சம்பவம் மகாராஷ்டிரா மாநிலம், புனே நகரில் நடந்துள்ளது. அதன்பின் போலீஸார் சம்பந்தப்பட்ட இளைஞரை அழைத்து விசாரணை நடத்தி நடந்த விவரங்களைக் கேட்டறிந்தனர்.

புனே நகரில் உள்ள பிம்ரி சின்ச்வாத் பகுதி மக்கள் வெள்ளிக்கிழமை காலையில் எழுந்து நகரில் வைக்கப்பட்டிருந்த பேனரைப் பார்த்தபோது ஒன்றுமே புரியவில்லை. அனைத்து இடங்களிலும் என்னை மன்னித்துவிடு ஷிவ்டே என்ற வாசகம் எழுதப்பட்ட பேனரைப் பார்த்ததும் மக்களுக்கு ஒன்றுமே புரியவில்லை.

ஏதேனும் தொலைக்காட்சி விளம்பரமா, அல்லது பொருட்களுக்கான விளம்பரமா என ஒவ்வொருவரும் பேசத் தொடங்கினார்கள். இந்த பேனரைப் பார்த்த போலீஸாரும் நள்ளிரவுக்குள் எப்படி இத்தனை பேனர்கள் வைக்கப்பட்டன,யாரிடம் அனுமதி பெறப்பட்டது எனத் தெரியாமல் குழப்பத்தில் ஆழ்ந்தனர்.

ஒருவேளைத் தொலைக்காட்சி விளம்பரமாக இருக்குமா என்று போலீஸாரும் யோசித்தனர். அதன்பின், பிம்ரி சின்ச்வாத் நகராட்சியைத் தொடர்பு கொண்டு விளம்பரம் குறித்து கேட்டபோது அவர்களும் தங்களுக்கு இந்த பேனர் குறித்து ஏதும் தெரியாது எனத் தெரிவித்துவிட்டனர். தாங்கள் யாருக்கும் பேனர் வைக்க அனுமதி கொடுக்கவில்லை, ஒப்பந்தமும் செய்யவில்லை என்று போலீஸிடம் தெரிவித்துவிட்டனர்.

இதையடுத்து, போலீஸார் அந்தப் பேனர் அடிக்கப்பட்ட முகவரியைத் தொடர்புகொண்டு விசாரணை நடத்தினார்கள். அந்த விசாரணையில், விலாஷ் ஷின்டே என்பவர் இந்த பேனரை அடித்தார். ஏறக்குறைய 350-க்கும் மேற்பட்ட பேனர்களை அச்சடித்தார் என்று ஷின்டேவின் முகவரியை போலீஸிடம் அளித்தனர்.

அதன்பின் போலீஸார் தீவிர தேடுதலுக்குப் பின் விலாஷ் ஷிண்டேவை செல்போனில் தொடர்பு கொண்டு அவரை விசாரணைக்கு அழைத்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவலைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தனர்.

விலாஸ் ஷிண்டே கூறுகையில், தன்னுடைய நண்பர் நிலேஷ் கேத்கர்(வயது25) புனேயில் வர்த்தகம் செய்து வருகிறார். அவர் ஒரு பெண்ணை காதலித்தார். சமீபத்தில் அந்த பெண்ணுக்கும், அவருக்கும் இடையே திடீரென சண்டை ஏற்பட்டு, ஒருவொருக்கொருவர் பேசிக்கொள்ளவில்லை. இதனால், எது நண்பர் மனமுடைந்து காணப்பட்டார்.

அவரிடம் நான் விசாரித்தபோது, நடந்த அனைத்துச் சம்பவங்களையும் கூறினார். தன்னுடைய காதலியிடம் மன்னிப்பு கேட்கலாம் என்று செல்போனில் அழைத்தாலும் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார். தன்னிடம் கோபப்பட்டு மும்பையில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டார் வெள்ளிக்கிழமை காலை புனேவுக்கு வருகிறார் எனத் தெரிவித்தார்.

இதையடுத்து, காதலியிடம் மன்னிப்பு கேட்கும் விதமாகத் தான் நகரம் முழுவதும் என்னை மன்னித்துவிடு ஷிவ்டே என்று அவரின் காதலியின் பெயரைப் பேனரில் அச்சடித்து அவர் செல்லும் பாதையில் வைத்து விடலாம் என்று கூறினேன். அதன்படி 350-க்கும் மேற்பட்ட பேனர்களில் காதலின் சின்னத்தையும், என்னை மன்னித்துவிடு என்ற வாசகத்துடன் அச்சடித்து என் நண்பரின் காதலி செல்லுமிடங்களில் எல்லாம் வைத்தோம் எனத் தெரிவித்தார்.

இதைக் கேட்டு போலீஸாருக்கு என்ன செய்வெதென்று தெரியவில்லை. முன் அனுமதி பெறாமல் பொது இடங்களில் பேனர் வைத்த குற்றத்துக்காக ஷிண்டே மீதும், நிலேஷ் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த பேனரைப் பார்த்தபின் அந்தப் பெண்ணும் தனது மனதை மாற்றிக்கொண்டு நிலேஷிடம் பேசத் தொடங்கியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x