Published : 18 Aug 2018 04:23 PM
Last Updated : 18 Aug 2018 04:23 PM

காரணம்தான் என்ன? கேரளாவில் வரலாறு காணாத பேய்மழை, வெள்ளம் குறித்து நிபுணர்கள் கூறுவது என்ன?

கேரளாவில் நூறு ஆண்டுகளில் இல்லாத பேய் மழை பெய்து வருகிறது, மழை இன்னமும் கூட ஒய்ந்தபாடில்லை எனும் நிலையில் ஞாயிறு முதல் மழைக் குறையலாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை, வெள்ளத்துக்கு இதுவரை 324 பேர் பலியாகியுள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி வெள்ளப்பகுதிகளைப் பார்வையிட்டு முதற்கட்டமாக ரூ.500 கோடி நிவாரணம் அளிப்பதாகக் கூறியுள்ளார்.

இந்நிலையில் இது பருவ மழை, தீவிரமாக பெய்துள்ளது அவ்வளவே என்று ஒட்டுமொத்தமாக மாறிவரும் வானிலை பற்றியும் அதன் விளைவான தீவிர எதிரெதிர் வானிலையுடன் இனி மக்கள் வாழப்பழக வேண்டும் என்ற உண்மையையும் பலரும் குறைத்தும், குறுக்கியும் இது ஏதோ தற்காலிகமானது, இந்த ஆண்டு மட்டும் நடந்த எதேச்சை என்றும் கூறுகின்றனர். இந்தியாவின் பருவமழைக்கு கேரளாதான் நுழைவாயில் என்று கருதப்படுவதுண்டு.

இந்நிலையில் நிபுணர்கள் இது குறித்து மலையாள ஊடகம் ஒன்றிற்கு விளக்கம் அளித்தனர்.

டாக்டர் எம்.ஜி.மனோஜ் (ராடார் ரிசர்ச் செண்டர்) என்பவர் கூறும்போது, கேரளாவில் புவியியல் இருப்பிடம் என்பது கடலுக்கும் மலைத்தொடருக்கும் இடைப்பட்ட ஒரு ஒடுக்கமான நிலப்பிரதேசமாகும். பருவக்காற்றின் வழியே கேரளம்தான் இதனால் மிகு மழை மாநிலமாக விளங்குகிறது. ஆனால் இம்முறை 20-ம் நூற்றாண்டின் மகாவெள்ளம் என்று வர்ணிக்கப்பட்ட 1924ம் ஆண்டு மழை வெள்ளத்துடன் ஒப்புநோக்கும் விதமாக வானிலை, இயற்கைக் கூறுகளும் மனிதன் உண்டாக்கிய சில விஷயங்களினாலும் மகாவெள்ளம் ஏற்பட்டுள்ளது.

 

மாநிலத்தின் மேற்கில் உள்ள அரபிக் கடல் வெகுவேகமாக உஷ்ணமாகி வருகிறது. இதனால் கடல்நீர் அதிகமாக ஆவியாகி மழை மேகங்களை அதிகமாக்கி வருகிறது. கிழக்கில் சாயாத்ரி மலைகள் உள்ளன. இதன் உயரம் இந்தியப் பெருங்கடலிலிருந்து பருவமழை ஈரக்காற்றை தன்பொறிக்குள் கொண்டு வந்து அதிக உயரத்தில் அதனை செறிவுறுத்துகிறது. இதனையடுத்து கனமழை பெய்கிறது. ஆனால் இவையெல்லாம் ஒன்றும் புதிதல்ல.

இந்த ஆண்டு மே மாதமே பருவமழைக் காலத்துக்கு முன்னமேயே கேரளாவை மழை நனைக்கத் தொடங்கியது. ஜூன்1-ம் தேதிதான் பொதுவாக மழை தொடங்கும். மேலும் வெப்பவளிமண்டலத்தில் பருவநிலைக்குள்ளேயே ஏற்பட்ட மாறுதல் (Madden-Julian oscillation)ஆகியவற்றினால் ஒழுங்கு நிலை குலைந்த பேய் மழை பெய்துள்ளது. மேலும் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையும் இந்த நிலையுடன் சேர்ந்து கன, அதிகனமழைக்கு காரணமாகியுள்ளது.

பொதுவாகப் புவிவெப்பமடைதலால் கடல் வெப்பம் அதிகரித்துள்ளமை காற்றழுத்தத் தாழ்வு நிலைகளை உருவாக்குகிறது. உஷ்ணத்தை ஒழுங்குபடுத்த இயற்கையின் வழிதான் காற்றழுத்தத் தாழ்வுநிலை, ஏனெனில் காற்றழுத்த தாழ்வு நிலை காற்றைக் குளிராக்கி மழை பெய்ய வைக்கிறது. இந்த வாரத் தொடக்கத்தில் ஒடிசாவில் வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவானது இதனால் நிலப்பகுதிக்கு மேல் உள்ள காற்று ஈரப்பதம் முழுதையும் உறிஞ்சி தன்னகப்படுத்தியது. இதனையடுத்து பருவக்காற்று கடுமையாக கிழக்கு நோக்கி நகர்ந்து கேரளாவுக்குள் நகர இதனை மேற்குமலைத் தொடர்ச்சி தடுத்தது இதனையடுத்து மலைத்தொடர்ச்சியின் கேரளப் பகுதியில் மிகப்பெரிய அளவில் மழை மேகங்கள் உருவானது. இதுதான் கேரளாவில் வரலாறு காணாத மழைக்குக் காரணம்.

புவிவெப்பமடைதல் விளைவினால் கடல் நீர் உஷ்ணமடைகிறது. இதனால் காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்படுகிறது. பொதுவாக இவை 2 வாரக் காலத்தில் உருவாகும். இந்தப் பருவநிலையில் இவை அடுத்தடுத்து உருவாகின இதனால் கனமழை பெய்தது. ஆனால் கடல்நீர் உஷ்ணமடைவது குறித்து மேலும் ஆய்வுகள் தேவை, என்கிறார் இவர்.

டாக்டர் ஏ.ராஜகோபால் காமத்- வானியல் நிபுணர், அண்டவெளி ஆய்வாளர்:

சோலார் மினிமம் என்று அழைக்கப்படும் 11 ஆண்டுகளுக்கு ஒருமுறையிலான சூரிய சுழற்சியில் ஏற்படும் குறைமாற்றம். இதுவும் காற்றழுத்தத் தாழ்வும் சேர்ந்து கொண்டது, இந்தக் காலக்கட்டம் சூரிய கதிரியக்கம் பலவீனமடையும் காலக்கட்டமாகும். சோலார் மினிமம் விளைவினால்தான் கடும் இடி, மின்னலுடன் கூடிய கனமழை மே மாதத்தில் பொழிந்தது. மேலும் பருவமழையை பலவீனமாக்கும் எல் நினோ இம்முறை காற்றை இந்தியத் துணைக்கண்டத்திலிருந்து வெளியே நகர்த்தியது. காரணம் பசிபிக் பெருங்கடலின் கிழக்கு வெப்பமண்டலப் பகுதி வழக்கத்துக்கு மாறாக உஷ்ணமடைந்ததே. இதனையடுத்து இந்தோனேசியாவைச் சுற்றியுள்ள கடல்நீரின் உஷ்ணஅலை இந்தியக்கடலுக்குள் திரும்பியது. இதுவும் மழையை வலுப்படுத்தியது.

20ம் நூற்றாண்டின் மகாவெள்ளம் என்று அறியப்படும் 1924ம் ஆண்டு கேரள வெள்ளமும் சோலார் மினிமம் ஆண்டில் நிகழ்ந்தது என்பது ஒரு அரிய எதேச்சையாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x