Published : 18 Aug 2018 01:28 PM
Last Updated : 18 Aug 2018 01:28 PM

பணத்தையும் தாண்டிய உதவிகள் உள்ளன: நிரூபித்த கேரள மீனவர்கள்

துன்பத்தில் இருப்பவர்களுக்கு எப்போதும் பணம் மட்டுமே சிறந்த உதவியாக இருந்துவிடாது. சில நேரங்களில் பணத்தைத் தாண்டிய உதவியும் இருக்கின்றன. அப்படிப்பட்ட உன்னதமான உதவியைத்தான் செய்திருக்கிறார்கள் கேரள மாநிலத்தின் கொல்லம் பகுதி மீனவர்கள்.

கேரளாவில் பெய்து வரும் கனமழைக்கு பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, இடுக்கி, பத்தனம்திட்டா, திருச்சூர், கண்ணூர், எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் இடுக்கியில் மட்டும் வழக்கத்தை விட 84 சதவிகிதம் கூடுதல் மழை பெய்துள்ளது. இங்கு தமிழர்கள் வாழும் பகுதிகளில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. தொடர் மழை மற்றும் வெள்ளத்தின் காரணமாக கொச்சி விமான நிலையம் வரும் 26-ம்தேதி வரை மூடப்பட்டுள்ளது.

நேற்று மாலை நிலவரம் வரை, கேரளத்தில் மழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 324-ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், மாவட்ட நிர்வாகம் உதவி கோரியபோது சிறிதும் தயங்காமல் தங்கள் வாழ்வாதாரத்துக்கான படகுகளை மீட்புப் பணிகளுக்குக் கொடுத்திருக்கின்றனர் கொல்லம் மீனவர்கள். படகை மட்டுமல்ல தங்களது உழைப்பையும் உடன் அளித்துள்ளனர். ஆம், மீனவர்கள் பலர் தங்களையும் மீட்புப் பணியில் ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர். வாடி, மூத்தக்காரா, நீண்டகாரா, ஆலப்பாட் மீனவ கிராம மீனவர்கள் தங்கள் படகுகளை மீட்புப் பணிகளுக்காக வழங்கியுள்ளனர்.

இது குறித்து கேரள மீன்வள மற்றும் கடல் ஆராய்ச்சிப் படிப்புகளுக்கான பல்கலைக்கழகத்தின் பசில் லால் ஹூபர்ட் கூறும்போது, "மீனவர்களிடம் 100 படகுகளைக் கொடுத்து உதவுமாறு கோரினோம். ஆனால் அவர்கள் அதற்கு மேலும் படகுகளைக் கொடுத்துள்ளனர். தங்களையும் மீட்புக்குழுவில் சேர்த்துக் கொள்ளுமாறு கூறினர். நாங்கள் எந்தவித வற்புறுத்தலும் செய்யவில்லை. அவர்களாகவே மாநிலத்துக்கு உதவும் கடமையில் இருக்கிறோம் எனக் கூறி உதவ முன் வந்துள்ளனர்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x