Published : 18 Aug 2018 01:56 PM
Last Updated : 18 Aug 2018 01:56 PM

உதவிக்காக கதறிய கேரள எம்எல்ஏக்கள்; விரைவில் வராவிட்டால் 10 ஆயிரம் உடல்கள் மிதக்கும்: டிவியில் உருக்கம்

 

கேரளாவில் பருவமழை மாநிலத்தையே புரட்டிப் போட்டுள்ள நிலையில், செங்கனூர், அங்கமாலி தொகுதி எம்எல்ஏவும் தங்கள் பகுதி மக்களைக் காக்க கண்ணீர் விட்டுக் கதறிய சம்பவம் அனைவரின் மனதையும் உருக்குவதாக அமைந்துள்ளது.

கேரளாவில் தென்மேற்குப் பருவமழை கடந்த 10 நாட்களுக்கு மேலாக கொட்டித் தீர்த்து வருகிறது. 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை அங்கு பெய்து வருகிறது. இதனால், மாநிலத்தில் 13 மாவட்டங்கள் வெள்ளத்திலும், நிலச்சரிவிலும் சிக்கி, மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.

மழை வெள்ளத்தாலும், நிலச்சரிவாலும் இதுவரை 324 பேர் பலியாகியுள்ளனர், ஏராளமானோரைக் காணவில்லை. 2.50 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வீடு, உடைமைகளை இழந்து நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதில் பத்தினம்திட்டா, கொச்சின், கோட்டயம், இடுக்கி மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மீட்புப் பணியில் ராணுவ வீரர்கள், தேசியப் பேரிடர் மீட்புக் குழுவினர், கடற்படை வீரர்கள், விமானப்படையினர், போலீஸார், தீயணைப்பு வீரர்கள் என பல்வேறு தரப்பினரும் ஈடுபட்டு, வெள்ளத்தில் சிக்கி இருக்கும் மக்களை மீட்டு வருகின்றனர்.

இந்நிலையில் செங்கனூர் சட்டசபைத் தொகுதி மழையாலும், வெள்ளத்தாலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு ஏராளமான மக்கள் வெள்ள நீரில் சிக்கி உயிருக்காகப் போராடி வருகின்றனர்.

இது குறித்து அறிந்த அந்த தொகுதி எம்எல்ஏ சாஜி செரியன் தொலைக்காட்சியில் கண்ணீர் விட்டுக் கதறி உதவிக்காகக் கூக்குரலிட்டது உள்ளத்தை உருக்குவதாக இருந்தது.

பல்வேறு ஊடகங்களையும் தொடர்பு கொண்டு செரியன் உதவிக்காகப் பேசி வந்த நிலையில், மனோரமா தொலைக்காட்சியில் தன் உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியாமல் உடைந்து அழத்தொடங்கினார்.

சாஜி செரியன் மனோரமா செய்தி சேனலில் பேசியதாவது:

''என்னுடைய தொகுதியில் பாயும் அச்சன்கோயில், பம்பா, மணிமலையாறு ஆகியவற்றில் வெள்ள நீர் அபாயகட்டத்தைத் தாண்டிப் பாய்கிறது. இங்கு, மக்களின் நிலை மிகவும் ஆபத்தான கட்டத்தில் இருக்கிறது. ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் வீட்டின் 2-வது மாடிவரை வெள்ளம் பாய்கிறது. இதனால், வீட்டில் குழந்தைகளையும், முதியவர்களையும் வைத்திருக்கும் மக்கள் என்ன செய்வதென்று தெரியாமல் கண்ணீர் விடுகிறார்கள்.

ஆயிரக்கணக்கான மக்கள் நாள் கணக்காக, உணவுக்காகவும், மருந்துக்காகவும், குடிநீருக்கவும் தவிக்கிறார்கள். குறைந்தபட்சம் அவர்களின் உயிரையாவது காப்பாற்றுங்கள். நான் பலரிடம் கேட்டுவிட்டேன். இதுவரை எந்தவிதமான மீட்புப் பணியும் நடக்கவில்லை. 100 மீனவர்களையும் படகுகளையும் மட்டும் அனுப்பி இருக்கிறார்கள். விமானத்தையும், ஹெலிகாப்டரையும் அனுப்பி வெள்ளத்தில் சிக்கி இருக்கும் மக்களை மீட்டுத் தாருங்கள். புறநகர் பகுதிகளில் இருக்கும் மக்களின் நிலைமை மிக மோசமாக இருக்கிறது.

எங்களை ஞாயிற்றுக்கிழமை காலைக்குள் மீட்புப் படையினர் மீட்காவிட்டால், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பிணமாக ஆற்றில் மிதப்பார்கள். ஏற்கெனவே ஆயிரக்கணக்கான மக்களைப் பிணமாக ஆற்றில் இருந்து மீட்டுவிட்டோம். தயவு செய்து உதவி செய்யுங்கள். குறைந்தபட்சம் மக்களுக்காக 50 ஆயிரம் உணவுப் பொட்டலங்களை அனுப்பி வையுங்கள்''.

இவ்வாறு சாஜி செரியன் கண்ணீர் விட்டுக் கதறி அழுதார்.

அங்கமாலி எம்எல்ஏ ரோகி ஜான் ஃபேஸ்புக்கில் தன்னுடைய தொகுதி மக்களின் நிலையை வீடியோவாக வெளியிட்டு உதவி கோரியிருந்தார். அந்த வீடியோவில் ரோகி ஜான் பேசுகையில், ''என்னுடைய தொகுதியில் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. மீட்புப்படையினர் வரமுடியாத அளவுக்கு நிலைமை மோசமாக இருக்கிறது.

கைப்பட்டூர், இஞ்சகாவலா, மாணிக்கியமங்கலம், புவதுசேரி, மரக்கடவு உள்ளிட்ட பகுதிகள் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டால், முதல்வர் அலுவலகத்திடம் பேசக் கூறுகிறார்கள். மக்கள் உதவிக்காக அல்லாடுகிறார்கள். செல்போன்களும், தொலைபேசியும் வேலை செய்யவில்லை. வெள்ளத்தில் சிக்கி இருக்கும் மக்களை எப்படியாவது மீட்க உதவி செய்யுங்கள். ஆயிரக்கணக்கான மக்கள் வீட்டின் மாடியின் மீதும், கூரையின் மீது ஏறி நாட்கணக்கில் அமர்ந்திருக்கிறார்கள். தயவு செய்து உணவுகளை வழங்கி அவர்களை மீட்டுச் செல்லுங்கள்'' என்று உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x