Last Updated : 18 Aug, 2018 12:25 PM

 

Published : 18 Aug 2018 12:25 PM
Last Updated : 18 Aug 2018 12:25 PM

கேரளாவில் வெள்ள சேத இடங்களைப் பார்வையிட்டார் மோடி: ரூ.500 கோடி நிவாரணம்; ரூ.19,500 கோடி சேதம்

கேரளாவைச் சின்னாபின்னமாக்கிய பெருமழையால் ஏற்பட்ட சேதங்களையும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களையும் பிரதமர் மோடி பார்வையிட்டார்.

இன்று காலை தனி ஹெலிகாப்டர் மூலம் வெள்ளச் சேதங்களைப் பார்வையிட பிரதமர் மோடி புறப்பட்டார். ஆனால், புறப்பட்ட சில நிமிடங்களில் வானிலை மிகவும் மோசமாக இருந்ததையடுத்து, ஹெலிகாப்டர் தரையிறக்கப்பட்டது. இந்நிலையில், வானிலை சீரடைந்ததைத் தொடர்ந்து வெள்ளச் சேதங்களைப் பார்வையிட்டார்.

கேரளாவில் தென்மேற்குப் பருவமழை கடந்த மே 29-ம் தேதி தொடங்கியது. ஆனால், கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தீவிரமடைந்து மாநிலத்தில் பெருமழை கொட்டித் தீர்த்து வருகிறது. ஏறக்குறைய 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பெய்து வருகிறது.

மழையின் கோரத் தாண்டவதத்துக்கும், வெள்ளத்துக்கும், நிலச்சரிவுக்கும் இதுவரை 320-க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளனர், ஏராளமானோரைக் காணவில்லை.

2.50 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளையும், உடைமைகளையும் இழந்து தவித்து வருகின்றனர். இவர்கள் அரசு ஏற்பாடு செய்துள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பல்வேறு மாநிலங்களும், தனியார் அமைப்புகளும் கேரள மக்களுக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன.

இந்நிலையில், கேரளாவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளைப் பார்வையிடுவதற்காக பிரதமர் மோடி, நேற்று இரவு கொச்சின் நகரத்துக்கு தனிவிமானம் மூலம் வந்து சேர்ந்தார். முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் நேற்று பங்கேற்று முடித்தபின் இரவே தனி விமானம் மூலம் கொச்சி விமானப்படைத் தளத்துக்கு பிரதமர் மோடி வந்தார்.

அவரை முதல்வர் பினராயி விஜயன், நிதி அமைச்சர் தாமஸ் ஐசக், ஆளுநர் பி. சதாசிவம் உள்ளிட்டோர் வரவேற்றனர். இன்று காலை பிரதமர் மோடி, முதல்வர் பினராயி விஜயன், அமைச்சர்கள் உள்ளிட்டோர் ஹெலிகாப்டர் மூலம் வெள்ளச் சேதங்களைப் பார்வையிடுவதாக திட்டமிடப்பட்டு இருந்தது.

அதன்பின் படி காலை கொச்சி விமானப்படைத் தளத்தில் இருந்து, ஹெலிகாப்டர் மூலம் வெள்ளச்சேதத்தை பார்வையிட பிரதமர் மோடி உள்ளிட்டோர் புறப்பட்டனர். ஆனால், புறப்பட்ட சில நிமிடங்களில் வானிலை மோசமாக இருந்ததால், தொடர்ந்து ஹெலிகாப்டர் பயணிக்க முடியாத சூழல் நிலவியது. இதையடுத்து, உடனடியாக ஹெலிகாப்டர் தரையிறக்கப்பட்டது.

அதன்பின், பிரதமர் மோடி, முதல்வர் பினராயி விஜயன், தலைமைச் செயலாளர், அமைச்சர்கள் உள்ளிட்டோருடன் உயர்மட்ட அளவில் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்கு பின் கேரள மாநிலத்துக்கு ரூ.500 கோடியை இடைக்கால வெள்ள நிவாரணமாக மத்திய அரசு சார்பில் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்தார்.

ஏற்கெனவே மத்திய அரசு ரூ.100 கோடி அறிவித்திருந்தது, அதன்பின் ராஜ்நாத் சிங் பார்வையிட்டு முடித்தபின், கூடுதலாக ரூ.80 கோடியை மத்திய அரசு அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆனால், கேரள மாநிலத்தில் வெள்ளத்தால், ரூ.19ஆயிரத்து 512 கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக இடைக்கால நிவாரணமாக ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று முதல்வர் பினராயி விஜயன் பிரதமர் மோடியிடம் வேண்டுகோள் விடுத்தார்.

இதற்கிடையே மழை வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சம் நிதியுதவியும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x