Published : 18 Aug 2018 09:07 AM
Last Updated : 18 Aug 2018 09:07 AM

1984-ம் ஆண்டு சந்தித்த நினைவுகளுடன் 500 கி.மீ. பயணம் செய்து வாஜ்பாய்க்கு அஞ்சலி: உத்தராகண்ட் குழுவினர் உருக்கம்

கடந்த 1984-ம் ஆண்டு வாஜ்பாயை சந்தித்த நினைவுகளுடன், அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த உத்தராகண்ட் மாநிலத்தில் இருந்து 500 கி.மீ. தூரம் பயணம் செய்து சிலர் டெல்லி வந்துள்ளனர்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நேற்றுமுன்தினம் மாலை கால மானார். அவரது உடல் டெல்லி 6-ஏ கிருஷ்ண மேனன் மார்க் பகுதியில் உள்ள அவரது இல்லத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கு குடியரசுத் தலைவர், பிரதமர் உட்பட முக்கிய தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில், நேற்று காலை 7.30 மணி முதல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டனர்.

மறைந்த தலைவருக்கு அஞ்சலி செலுத்த அதிகாலை முதலே நூற்றுக்கணக்கான மக்கள் வரிசையில் நின்றிருந்தனர். அவர்களில் ஒருவர் யோகேஷ் குமார் (52). இவர் உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசியில் இருந்து இரவோடு இரவாக 500 கி.மீ. தூரம் பயணம் செய்து வாஜ்பாய் உடலுக்கு அஞ்சலி செலுத்த நேற்று காலை டெல்லி வந்துள்ளார். அவருடன் உத்தராண்ட்டை சேர்ந்த வேறு சிலரும் வந்துள்ளனர்.

இதுகுறித்து யோகேஷ் குமார் கூறும்போது, ‘‘கடந்த 1984-ம் ஆண்டு கங்கோத்ரிக்கு செல்லும் வழியில் உத்தரகாசிக்கு வாஜ்பாய் வந்திருந்தார். அதன்பிறகு கடந்த 86-ம் ஆண்டும் ஒரு முறை வந்து சென்றார். அப்போது அவரை சந்தித்து புகைப்படம் எடுத்தேன். மறைந்த தலைவருக்கு கங்கோத்ரியில் இருந்து கங்கை நீர் கொண்டு வந்திருக்கிறேன். அவரை கடைசியாக ஒரு முறை பார்க்க வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன்’’ என்றார். வாஜ்பாயுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் யோகேஷ் குமார் கொண்டு வந்திருந்தார்.

வரிசையில் நின்றிருந்த 20 வயது இளைஞர் ஒருவர் கூறும்போது, ‘‘வாஜ்பாய்க்கு இறுதி அஞ்சலி செலுத்த பிஹாரில் இருந்து வந்திருக்கிறேன். மிகச் சிறந்த தலைவர் ஒருவரை நாம் இழந்துவிட்டோம்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x