Last Updated : 18 Aug, 2018 09:04 AM

 

Published : 18 Aug 2018 09:04 AM
Last Updated : 18 Aug 2018 09:04 AM

நவீன இந்தியாவின் அரசியல் மேதை: வாஜ்பாய்க்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் புகழாரம்

நவீன இந்தியாவின் அரசியல் மேதையாக அடல் பிஹாரி வாஜ்பாய் திகழ்ந்தார் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்தார்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அவரது வளர்ப்பு மகள் நமிதா கவுல் பட்டாச்சார்யாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவு எனக்குத் தனிப்பட்ட முறையில் பேரிழப்பு. அவருடன் நான் பணியாற்றிய நாட்கள் மறக்க முடியாத அனுபவமாகும். அவரது கொள்கைகள் எனக்கு மிகவும் பிடிக்கும். அவரது கவுரவமான நடத்தை, கண்ணியம், கொள்கைகள் போன்றவற்றால் நான் கவரப்பட்டு நான் பார்த்து வந்த வழக்கறிஞர் வேலையை விட்டு விட்டு அவருடன் சேர்ந்துவிட்டேன்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு நான் குடியரசுத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்ட பின்னர் அவரது வீட்டுக்குச் சென்று அவரைப் பார்த்தேன். உடல்நலக்குறைவு ஏற்பட்டு படுத்தபடுக்கையாக இருந்த அவர் அப்போது என்னைப் பார்த்து தனது கண்களை மட்டும் அசைத்தார். அப்போது அவரால் நான் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்ந்தேன்.

அவரது மறைவால் நாட்டில் உள்ள கோடிக்கணக்கான மக்கள் வருத்தத்தில் உள்ளனர். நவீன இந்தியாவின் அரசியல் மேதையாக அவர் திகழ்ந்தார். அனைத்து மக்களின் அன்பால் நிறைந்தவர் வாஜ்பாய்.

சுதந்திரப் போராட்ட வீரர், புத்திசாலி, எழுத்தாளர், கவிஞர், அரசியல்வாதி, சிறந்த நிர்வாகி என பன் முகம் கொண்ட அவர் கடைசியாக பிரதமர் என்ற நிலையை அடைந்தவர். எண்ணற்ற வழிகளை ஏற்படுத்தி எண்ணற்ற மனிதர்களின் மனதைத் தொட்டவர் அவர். இந்திய அரசியலின் உண்மையான மறுமலர்ச்சி மனிதர் அவர். இந்த நாடு மட்டுமல்லாமல், உலகே அவரது மறைவை நினைத்து வாடுகிறது.

பல்வேறு சவாலான சூழ்நிலை களிலும் அசராமல் திறம்பட செயல்பட்டவர் வாஜ்பாய். 1998-ல் பொக்ரான் அணுகுண்டு சோதனை, 1999-ல் கார்கில் போர் வெற்றி என அவரது ஆட்சிக்காலத்தில் எண்ணற்ற சாதனைகள் நடந்தன.

2015-ல் அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது மிகவும் பொருத்தமான ஒன்று. அவர் மீது வைத்திருந்த பாசத்தின் வெளிப்பாடு அது. அவரது மறைவுக்காக எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் எண்ணி லடங்கா நண்பர்கள் மற்றும் அவரது தொண்டர்களும் அவரது மறைவுக்காக கண்ணீரஞ்சலி செலுத்துகின்றனர்.

உங்களுக்கும், உங்களது குடும்பத்துக்கும் ஏற்பட்ட இழப்பைத் தாங்கும் வல்லமையை எல்லாம் வல்ல இறைவன் வழங்கவேண்டும்.

இவ்வாறு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கூறியுள் ளார். 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x