Last Updated : 17 Aug, 2018 07:54 PM

 

Published : 17 Aug 2018 07:54 PM
Last Updated : 17 Aug 2018 07:54 PM

சோகத்திலும் மகிழ்ச்சி; ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்ட நிறைமாத கர்ப்பிணிக்கு ஆண் குழந்தை பிறந்தது: வைரலாகும் வீடியோ

கேரள மாநிலம் ஆலுவா அருகே வெள்ளத்துக்கு அஞ்சி வீட்டின் மொட்டை மாடியில் உயிருக்குப் போராடிய நிறைமாத கர்ப்பிணியை ஹெலிகாப்டர் மூலம் மீட்புப் படையினர் இன்று மீட்டனர். அந்தப் பெண்ணுக்கு அரை மணிநேரத்தில் ஆண் குழந்தை பிறந்தது.

தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து கேரளாவில் கடந்த 10 நாட்களாக கொட்டித் தீர்த்து வருகிறது. இதுவரை 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் உடைமைகளையும், வீடுகளையும் இழந்து நிவாரண முகாம்களில் தங்கி இருக்கிறார்கள். இன்னும் ஏராளமான மக்கள் வெள்ளத்தால் சூழப்பட்ட வீடுகளில் உதவிக்காகக் கூக்குரல் எழுப்பி வருகிறார்கள். அவர்களை மீட்கும் பணியை மாநில அரசு துரிதப்படுத்தி வருகிறது.

இதற்காக விமானப்படையினர், பேரிடர் மீட்புக் குழுவினர், ராணுவத்தினர், தீயணைப்புப் படையினர் உள்ளிட்ட பலரும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், ஆலுவா நகரம் அருகே, செங்கமநாடு பகுதியில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. அங்குள்ள ஒரு வீட்டின் மொட்டை மாடியில் நிறைமாத கர்ப்பிணிப் பெண் ஒருவர் உதவிக்காகக் குரல் எழுப்பிக் கொண்டிருந்தார்.

இதை ஹெலிகாப்டரில் மீட்புப் பணிக்காகச் சென்ற கடற்படையினர் இதைப் பார்த்தனர். உடனடியாக மீட்புப் படையினர் அந்தப் பெண்ணை மீட்கும் பணியில் இறங்கினார். ஆனால், அந்த வீட்டில் மாடியில் இறங்கிய பின்புதான் அந்தப் பெண் நிறைமாத கர்ப்பிணி எனத் தெரியவந்தது.

வழக்கமான மனிதர்களைக் காட்டிலும் மிகவும் பாதுகாப்பாக கர்ப்பிணிப் பெண்ணை மீட்க வேண்டும் என்பதற்காக அதற்குரிய உபகரணங்கள், கருவிகள் ஆகியவற்றை அந்தப் பெண்ணின் உடலில் பொருத்தி மெதுவாக மேலே தூக்கி அந்தப் பெண்ணை பாதுகாப்பாக மீட்டனர்.

அதன்பின் ஹெலிகாப்டர் மூலம் அந்தக் கர்ப்பிணிப்பெண், கொச்சியில் உள்ள கடற்படை மருத்துவமனையில் சிகிச்சைக்காக நண்பகல் ஒரு மணிக்கு அனுமதிக்கப்பட்டார். அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட அரை மணிநேரத்தில் அந்தப் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது.

தாயும், குழந்தையும் மிகவும் ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அந்தப் பெண் 25 வயதான சஜிதா ஜபில் என்று கடற்படை செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆலுவா மிகவும் மோசமான சேதத்துக்கு உள்ளாகி இருக்கிறது. அந்தச் சோகத்திலும் ஒரு மகிழ்ச்சியான செய்தியாக இந்தக் குழந்தை பிறந்துள்ளது.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x