Last Updated : 17 Aug, 2018 05:58 PM

 

Published : 17 Aug 2018 05:58 PM
Last Updated : 17 Aug 2018 05:58 PM

21 குண்டுகள் முழுங்க, முழு ராணுவ மரியாதையுடன் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் தகனம்: கண்கலங்கிய பிரதமர் மோடி

பாஜகவின் முதுபெரும் தலைவரும், முன்னாள் பிரதமருமான அடல் பிஹாரி வாஜ்பாயின்(வயது93) உடல் 21 குண்டுகள் முழங்க, முழு ராணுவ மரியாதையுடன் இன்று டெல்லியில் உள்ள ஸ்மிருதி ஸ்தலத்தில் தகனம் செய்யப்பட்டது.

இறுதிச்சடங்கின் போது, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

மேலும், பூடான் நாட்டு மன்னர் ஜிக்மீ கேசர் நம்கியால் வாங்கச், வங்கதேச வெளியுறவு அமைச்சர் அபுல் ஹசன் முகமது அலி, நேபாள வெளியுறவுத்துறை அமைச்சர் பிரதீப் குமார் கியாவலி, முன்னாள் ஆப்கன் அதிபர் ஹமீது ஹர்சாய், இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் லட்சுமணன் கெய்ரில்லா ஆகியோர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.

3-முறை பிரதமராக இருந்த அடல் பிஹாரி வாஜ்பாய் வயது மூப்பு, உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஜூன் மாதம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்குக் கடந்த 2 மாதங்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனளிக்காமலும், உடல் உறுப்புகள் சிகிச்சைக்கு ஒத்துழைக்காததாலும் நேற்று மாலை 5.05 மணிக்கு காலமானார்.

இதையடுத்து, பிரதமர் மோடி, குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த், பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, பாஜக தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், மாநில முதல்வர்கள் பலர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்கள்.

அதன்பின் வாஜ்பாயின் உடல் பொதுமக்கள், தொண்டர்களின் பார்வைக்காக டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. வழியெங்கும் வாஜ்பாயின் உடலுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

பாஜக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்த வாஜ்பாயின் உடலுக்கு பாஜக தலைவர்கள், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.

இங்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி முடிந்ததும், பூங்களால் அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் வாஜ்பாயின் உடல் வைக்கப்பட்டு, அங்கிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ள உடல் தகனம் செய்யும் ஸ்மிருதி ஸ்தலம் இடத்துக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.

பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா, அமைச்சர்கள் உள்ளிட்ட ஏராளமானோர், பாஜக அலுவலக்தில் இருந்து 4 கி.மீ நடந்து சென்று உடல் தகனம் செய்யும் ஸ்மிருதி ஸ்தலத்தை அடைந்தனர். வழியெங்கும் வாஜ்பாயின் புகழ்பாடி தொண்டர்கள் முழக்கமிட்டுக் கொண்டே வந்தனர்.

தகனம் செய்யும் ஸ்மிருதி ஸ்தலத்துக்கு ராணுவ வாகனத்தில் வாஜ்பாயின் உடல் கொண்டுவரப்பட்டு, அதை ராணுவ வீரர்கள் இறக்கினார்கள். அப்போது துக்கம் தாங்காமல் பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு பாஜக தலைவர்களும் கண் கலங்கினர்.

உடல்தகனம் செய்யும் இடத்தில் வாஜ்பாயின் உடல் வைக்கப்பட்டதும், ராணுவ இசை வாசிக்கப்பட்டு, வேத மந்திரங்கள் ஓதப்பட்டன. அதன்பின் முப்படைத் தளபதிகள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன், பிரதமர் மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.

சார்க் நாடுகள் கூட்டமைப்பின் தலைவர்களான பூடான் நாட்டு மன்னர் ஜிக்மீ கேசர் நம்கியால் வாங்கச், வங்கதேச வெளியுறவு அமைச்சர் அபுல் ஹசன் முகமது அலி, நேபாள வெளியுறவுத்துறை அமைச்சர் பிரதீப் குமார் கியாவலி, முன்னாள் ஆப்கன் அதிபர் ஹமீது ஹர்சாய், இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் லட்சுமணன் கெய்ரில்லா ஆகியோரும் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

அதன்பின் வந்தே மாதரம் பாடல் இசைக்கப்பட்டபோது, குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் தலைமையில் அனைவரும் எழுந்து நின்ற அஞ்சலி செலுத்தினார்கள். வாஜ்பாயின் உடலில் போர்த்தப்பட்டு இருந்த தேசியக் கொடி அகற்றப்பட்டு அவரின் பேத்தி நிகாரிகாவிடம் வழங்கப்பட்டது.

இந்து மதத்தின்படி வேத, மந்திரங்கள் ஓதப்பட்டு, இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டன. வாஜ்பாயின் உடலில் சந்தனக்கட்டைகள், பசுஞ்சாணத்தால் செய்யப்பட்ட வறட்டிகள் அடுக்கப்பட்டு அவரின் உடலுக்கு எரியூட்டப்பட்டது. அப்போது, ராணுவத்தினர் 21 குண்டுகளை வானத்தை நோக்கிச் சுட்டு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.

வாஜ்பாயின் உடல் எரியூட்டப்பட்டதும் அவரின் உறவினர்களும், குடும்பத்தினரும் கண்ணீர் விட்டு அழுதனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x