Last Updated : 17 Aug, 2018 05:01 PM

 

Published : 17 Aug 2018 05:01 PM
Last Updated : 17 Aug 2018 05:01 PM

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான தமிழக அரசின் மனு தள்ளுபடி: பசுமைத் தீர்ப்பாயம் முடிவெடுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

தூத்துக்குடியில் செயல்படும் வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையில், நிர்வாகரீதியான பணிகள் மட்டும் மேற்கொள்ளத் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்த விவகாரத்தில் தேசியப்பசுமைத் தீர்ப்பாயமே இறுதி முடிவு எடுக்கும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த வேதாந்தா குழுமத்துக்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல், உடல்நல பாதிப்பு ஏற்படுவதாகக் கூறி அப்பகுதி மக்கள் தொடர்ந்து பல் வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். கடந்த மே மாதம் 22-ம் தேதி ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியானார்கள்.

இதன் தொடர்ச்சியாக ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடத் தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம், டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கில் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் நிபந்தனைகளுக்கு உட்பட்டு தனது நிர்வாகப் பணியை மேற்கொள்ளலாம். சுற்றுச்சூழலுக்கு எந்தவிதமான கேடுவிளைவிக்காமல் பணியை மேற்கொள்ளலாம் என பசுமைத் தீர்ப்பாயம் கடந்த 9-ம் தேதி அனுமதி அளித்தது.

இதையடுத்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன் கடந்த 14-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அந்த மனு 17-ம்தேதி விசாரிக்கப்படும் என்று உத்தரவிட்டிருந்தனர்.

அதன்படி, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆர் பாலி நாரிமான், இந்து மல்ஹோத்ரா ஆகியோர் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஸ்டெர்லைட் ஆலை தரப்பில் சி.ஏ. சுந்தரம் ஆஜராகினார். அவர் வாதிடுகையில், ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக பல்வேறு உண்மைகளைத் தமிழக அரசு மறைத்துவிட்டது. எந்தவிதமான காரணத்தையும் கேட்காமல், தன்னிச்சையாக உத்தரவுகளைப் பிறப்பித்து, ஆலைக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தத் தொழிற்சாலை வளாகத்துக்குள் 67 நிறுவனங்கள் இருக்கின்றன.

அதில் 14 நிறுவனங்கள் மிகவும் ஆபத்தான பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்கள். ஆனால், எங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை அரசியல் பழிவாங்கலோடு எடுக்கப்பட்டுள்ளது. தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் இந்த வழக்கு 20-ம் தேதி விசாரிக்கப்பட உள்ளது எனத் தெரிவித்தார்.

தமிழக அரசு தரப்பில் வாதாடிய வழக்கறிஞர்கள், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவை ரத்துசெய்ய வலியுறுத்தினார்கள். இரு தரப்புவாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தமிழக அரசின் மனுவை விசாரணை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக தேசியபசுமைத் தீர்ப்பாயமே விசாரணை நடத்தும், அதன் சாதக, பாதகங்களை ஆய்வு செய்து, இறுதி முடிவு எடுக்கும். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தை அணுகலாம் என உத்தரவிட்டனர்.

இதற்கிடையே கடந்த 2013-ம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து நச்சுவாயு வெளியானதில் ஒருவர் உயிரிழந்தார், ஏராளமானோர் காயமடைந்தனர். இதையடுத்து, அப்போது முதல்வராக இருந்த மறைந்த ஜெயலலிதா ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு உத்தரவிட்டார்.

தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் ஆலை மேல்முறையீடு செய்து ஆலையை நடத்தியது. ஆனால், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் செய்த மேல்முறையீடு மனு இன்னும் விசாரணையில் இருக்கிறது. சுற்றுச்சூழலை மாசுபடுத்தியதற்காக ரூ.100 கோடி இழப்பீடாக வழங்க வேண்டும் என்று ஸ்டெர்லைட் ஆலைக்கு உத்தரவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x