Last Updated : 17 Aug, 2018 06:11 PM

 

Published : 17 Aug 2018 06:11 PM
Last Updated : 17 Aug 2018 06:11 PM

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 3 அடி குறைக்க பரிசீலியுங்கள்: துணை கண்காணிப்பு குழுவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

கேரளாவில் உள்ள மழைவெள்ளச் சூழலைக் கருத்தில் கொண்டு, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியில் இருந்து 139 அடியாகக் குறைப்பதற்கு தேசிய பேரிடர் மேலாண்மை குழுவும், அணையின் துணைப் பாதுகாப்புக் குழுவும் பரிசீலித்து முடிவு எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

கேரளாவில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவு பெருமழை கொட்டித் தீர்த்து வருகிறது. மழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை 164 ஆக உயர்ந்துள்ளது. 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வீடு, உடைமைகளை இழந்து அரசின் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தொடர்மழையால், மாநிலத்தில் உள்ள 39 அணைகளில் 35 அணைகள் நிரம்பித் திறக்கப்பட்டுள்ளன. அனைத்து ஆறுகளிலும் வெள்ள நீர் ஆபத்தான கட்டத்தைத் தாண்டி பாய்ந்து செல்கிறது.

முல்லைப்பெரியாறு அணையும் நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தமிழக பாசனத்துக்கு 2 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்படுகிறது. அதனைத் தவிர உபரி நீர் இடுக்கி அணைக்குத் திறக்கப்படுகிறது.

இதனிடையே கேரளாவில் கனமழை பெய்து மக்களிடையே அச்சம் நிலவுகிறது. இதில் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டமும் 142 அடியாக இருப்பதால், மக்களிடையே அணை உடைந்துவிடும் என்ற பதற்றம் நிலவுகிறது. ஆதலால், தற்காலிகமாக அணையின் நீர் தேக்கும் அளவை 139 அடியாகக் குறைக்க வேண்டும் எனக் கேரள முதல்வர் பினராயி விஜயன், தமிழக முதல்வருக்குக் கடிதம் எழுதியிருந்தார்.

இதற்குப் பதில் கடிதம் எழுதிய தமிழக முதல்வர் அணை பாதுகாப்பாக இருப்பதால் நீர்மட்டத்தைக் குறைக்க தேவையில்லை எனக் கூறியிருந்தார்.

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடி வரை உயர்த்திக் கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், பேபி அணையைப் பலப்படுத்திவிட்டு நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்திக் கொள்ளவும் அனுமதி வழங்கியுள்ளது.

இந்தநிலையில், முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 139 அடியாகக் குறைக்க கோரி இடுக்கியைச் சேர்ந்த ரசூல்ராய் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கேரளாவில் மழை, வெள்ளத்தால், ஏராளமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதால், தற்காலிகமாக அணையில் நீர்மட்டத்தைக் குறைக்க பரிசீலிக்க வேண்டும் என்று நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர்.

இந்நிலையில், இந்த மனு இன்று மீண்டும் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, டி.ஓய் சந்திரசூட் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தேசிய பேரிடர் மேலாண்மைக் குழு மற்றும் அணையின் துணைப் பாதுகாப்பு குழு ஆகியவை இணைந்து, வெள்ளப்பாதிப்புகளை தடுக்கும் வகையில் அணையின் நீர்மட்டத்தைத் தற்காலிகமாக குறைப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும்.

மக்களின் நலன் கருதி தேசிய பேரிடர் மேலாண்மை குழு எடுக்கும் முடிவுக்குக் கேரள அரசும், தமிழக அரசும் கட்டுப்பட வேண்டும். இந்த முடிவு மிகமோசமான இயற்கை சேதங்களை நடந்துவிடக்கூடாது என்பதற்காக எச்சரிக்கை நடவடிக்கையாகும்.

பெரியாறு அணைப்பகுதியில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பு குறித்து கேரள அரசு எடுத்த நடவடிக்கை குறித்து வரும் 24-ம்தேதிக்குள் கேரள அரசு அறிக்கைதாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x