Published : 17 Aug 2018 03:14 PM
Last Updated : 17 Aug 2018 03:14 PM

கேரள மழை: எங்கு பார்த்தாலும் தண்ணீர்... குடிக்க நீரில்லை; கேரளாவில் குடிநீர் விநியோகம் கடும் பாதிப்பு

கேரளா மாநிலம் மழை வெள்ளத்தினால் தத்தளித்து வரும் நிலையில் 6 மாவட்டங்களில் குடிநீர் விநியோகம் முற்றிலும் பாதிப்படைய 7 மாவட்டங்களில் பகுதியளவில் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

ஆங்கில மகாகவி கோல்ரிட்ஜ் water water everywhere nor any drop to drink என்று தன்னுடைய The Rime of the Ancient Mariner என்ற கவிக்காவியம் ஒன்றில் கூறியதற்கு இணங்க சுற்றிலும் எங்கு பார்த்தாலும் நீர் ஆனால் குடிக்கத் தண்ணீர் இல்லை, இதுதான் கேரள எதார்த்தமாக விளங்குகிறது.

காசர்கோட் மாவட்டம் மட்டுமே குடிநீர் விநியோகத்தில் இடையூறு இன்றி விளங்குகிறது.

கேரள மாநிலம் முழுதும் குடிநீர் விநியோகம் செய்யும் ஆணையத்தைப் பராமரிக்கும் வட்டாரங்கள் தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்குக் கூறும்போது, பிற மாநிலங்களிலிருந்து குடிநீர் கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் ராணுவ உதவியுடன் குடிநீர் விநியோகம் செய்யவும் நடவடிக்கை அவசியம் என்று தெரிவித்தனர்.

பத்தனம்திட்டா, இடுக்கி, கோட்டயம், வயநாடு, எர்ணாக்குளம், திருச்சூர் ஆகிய மாவட்டங்களில் குடிநீர் விநியோகம் முற்றிலும் பாதிக்கப்பட, திருவனந்தபுரம், கொல்லம், பாலக்காடு, ஆலப்புழா, கோழிக்கோடு, கண்ணூர் ஆகிய மாவட்டங்களில் பகுதியளவு பாதிக்கப்பட்டுள்ளது.

குடிநீர் விநியோகத்தில் சகஜ நிலை திரும்ப காலம் எடுக்கும் என்று தெரிகிறது. நீர்சுத்திகரிப்பு நிலையங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன, ஆகவே கேரள அரசு பிற மாநிலங்களிலிருந்து குடிநீரைக் கொண்டு வர சீரியசாக முயற்சி செய்ய வேண்டும். டேங்கர் லாரிகளில் குடிநீர் கொண்டு வருவதும் இப்போது சாத்தியமில்லை என்று குடிநீர் ஆணைய வட்டாரங்கள் கவலை தெரிவித்துள்ளன.

கேரள குடிநீர் ஆணையம் சூழ்நிலைகளைக் கண்காணிக்க சிறப்புப் படை அமைத்துள்ளனர். குடிநீர் விநியோகத்திற்கான அனைத்துத் தெரிவுகளையும் இவர்கள் முயன்று வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x