Last Updated : 17 Aug, 2018 08:40 AM

 

Published : 17 Aug 2018 08:40 AM
Last Updated : 17 Aug 2018 08:40 AM

மக்களவைக்கு 4 மாநிலங்களில் போட்டி, 3 முறை பிரதமர்- வாஜ்பாயின் தேர்தல் வெற்றி சாதனைகள்

இந்தியப் பிரதமராக 3 முறை பதவி வகித்த வாஜ்பாய் 4 மாநிலங்களில் போட்டியிட்டு வென்ற ஒரே தலைவராகக் கருதப்படுகிறார். இவர் தம் சமூகப்பணியை மாணவர் பருவத்தில் ராஷ்டிரிய ஸ்வயம் சேவக்கில்(ஆர்எஸ்எஸ்) இருந்து துவங்கினார்.

ம.பி.யின் குவாலியர் நகரில் டிசம்பர் 25, 1924-ல் பிறந்த அட்டல் பிஹாரி வாஜ்பாய்க்கு வயது 93. ஆர்எஸ்எஸ் வாழ்வில் அதன் அதிகாரபூர்வ பத்திரிகையை நடத்த வேண்டி 1950-ல் தன் சட்டக்கல்வியை உ.பி.யின் கான்பூரில் பாதியில் நிறுத்தினார். பின்னர், பாஜகவின் தாய் கட்சியான பாரதிய ஜன சங்கத்தில் இணைந்தார். வலதுசாரி அரசியல் கட்சியான அதற்கு அப்போது தலைவராக ஷியாமா பிரசாத் முகர்ஜி இருந்தார். இவர் வாஜ்பாயின் அரசியல் செயல்பாடுகளை பாராட்டி தேசிய செயலாளராக அமர்த்தியதுடன் பாரதிய ஜன சங்கத்தின் வட இந்தியப் பொறுப்பையும் அளித்தார். 1968-ம் ஆண்டு வாஜ்பாய் பாரதிய ஜன சங்கத்தின் தேசிய தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இப்பதவிக்காக அவரை அப்போது பரிந்துரைத்தவர்களில் நானாஜி தேஷ்முக் மற்றும் பல்ராஜி மதோக் ஆகியோருடன் எல்.கே.அத்வானியும் இருந்தார். வாஜ்பாய் தலைமையில் பாரதிய ஜன சங்கம் நல்ல வளர்ச்சியை பெற்றது.

1957-ல் நடைபெற்ற மக்களவை தேர்தலில் வாஜ்பாய், பாரதிய ஜன சங்கம் கட்சி சார்பில் உ.பி.யின் பல்ராம்பூர், மதுரா மற்றும் லக்னோ ஆகிய மூன்று தொகுதிகளில் போட்டியிட்டார். இதில் பல்ராம்பூரில் வென்றவர் லக்னோவில் இரண்டாவது இடம் வகித்தார். அப்போது முதல் தாம் போட்டியிட்ட இடங்களில் செய்த சாதனைகளை இதுவரை எவரும் முறியடிக்கவில்லை எனக் கருதப்படுகிறது. அதில் ஒன்றாக வாஜ்பாய் நான்கு மாநிலங்களில் போட்டியிட்டு ஆறு முறை மக்களவை எம்பி.யாக இருந்தார். மொத்தம் 10 முறை மக்களவை எம்பி.யாக இருந்தவர் கடைசியாக 2004 தேர்தலில் லக்னோவில் போட்டியிட்டிருந்தார். உ.பி.யின் தலைநகரான லக்னோவில் மட்டும் வாஜ்பாய் மக்களவைக்கு தொடர்ந்து போட்டியிட்டு ஆறுமுறை எம்பி.யாக இருந்தார். இவர் லக்னோவில் தோற்கடித்த முக்கியமானவர்களில் பிரபல வழக்கறிஞரான ராம்ஜெத்மலானி யும் ஒருவர்.

ஒரே சமயத்தில் இருமாநிலங் களில் இருதொகுதிகளில் இரண்டு முறை வாஜ்பாய் போட்டியிட்டு வென்றார். 1991-ல் உ.பி.யின் லக்னோ மற்றும் ம.பி.யின் விதீஷாவில் போட்டியிட்டு வென்றார். அதேபோல், 1998-ல் போட்டியிட்டவர் குஜராத்தின் காந்திநகர் மற்றும் உ.பி.யின் லக்னோ ஆகிய இருதொகுதிகளிலும் வெற்றி பெற்றார். மக்களவை தேர்தல் போட்டியில் பல சாதனைகள் புரிந்த வாஜ்பாய்க்கு ஒரே ஒருமுறை தோல்வியும் ஏற்பட்டுள்ளது. பிரதமராக இருந்த இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு நடந்த மக்களவை தேர்தலில் நாடு முழுவதும் காங்கிரசுக்கு அனுதாப அலை வீசியது. 1984-ல் மக்களவை தேர்தலில் ம.பி.யில் குவாலியர் தொகுதியில் காங்கிரஸ் தலைவர் மாதவராவ் சிந்தியாவிடம் வாஜ்பாய் தோல்வி அடைந்தார். நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும் 1986 மற்றும் 1992 என இருமுறை வாஜ்பாய் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1996-ல் முதல்முறை பிரதமராகப் பதவி ஏற்றபோது வெறும் 13 நாட்களில் வாஜ்பாய் ஆட்சி நம்பிக்கை வாக்கெடுப் புக்கு முன் ராஜினாமா செய்தது. பிறகு 1998-ல் மீண்டும் பிரதமரானபோது கூட்டணி ஆட்சிக்கு தம் ஆதரவை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வாபஸ் பெற்றார்.

இதனால், இரண்டாவது முறையாக பிரதமர் பதவியை இழந்தார் வாஜ்பாய். அதன் பிறகு 1999- மக்களவைத் தேர்தலில் மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் பிரதமரானவர் முழு பதவிக் காலமும் ஆட்சி செய்தார். முதல் முறையாக முழு பதவிக் காலமும் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அல்லாத பிரதமர் என்ற பெருமையையும் வாஜ்பாய் பெற்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x