Last Updated : 16 Aug, 2018 08:45 PM

 

Published : 16 Aug 2018 08:45 PM
Last Updated : 16 Aug 2018 08:45 PM

65 ஆண்டுகால நெருங்கிய நண்பரை இழந்துவிட்டேன் -அத்வானி உருக்கம்

 

என்னுடைய 65 ஆண்டுகால நெருங்கிய நண்பரை நான் இழந்துவிட்டேன் என்று முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் மறைவுக்கு பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி இரங்கல் தெரிவித்துள்ளார்.

பாஜகவின் முதுபெரும் தலைவரும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாய் உடல்நலக்குறைவு காரணமாக, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று மாலை காலமானார். அவருக்கு வயது 93.

வாஜ்பாயின் மறைவு குறித்து பாஜக மூத்த தலைவரும், நெருங்கிய நண்பரான எல்.கே.அத்வானி வருத்தத்துடன் இரங்கல் செய்தியைப் பதிவு செய்துள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது:

வாஜ்பாயின் ஈடு இணையில்லாத தலைமைப்பண்புகள், அனைவரையும் சொக்கவைக்கும் பேச்சுத்திறமை, சீரிய தேசப்பற்று, பணிவு, அன்பு, திறமை ஆகியவை சிறந்த தலைவராக உயர்த்தியது. சிந்தனை ரீதியாகவும், சித்தாந்த ரீதியாகவும் வேறுபாடுகள் இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் செயல்படக்கூடியவர்.

ஆர்எஸ்எஸ் அமைப்பில் நான் செயல்பட்ட காலத்தில் இருந்தே இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்தோம். அந்த நினைவுகள் இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது. என்னை ஜனசங்கத்தில் இணைத்தது, நாட்டின் இருண்ட நெருக்கடி நேரத்தில், ஜனதா கட்சியை திறம்படக் கொண்டு செல்ல பல்வேறு தடைகளைச் சந்தித்தார்.

இறுதியாக கடந்த 1980-ம் ஆண்டு பாஜகவை தோற்றுவித்தார் வாஜ்பாய். வாஜ்பாயின் இழப்பு எப்படிப்பட்டது என்று விளக்குவதற்கும், சொல்வதற்கும் என்னிடம் வார்த்தைகள் இல்லை.

மத்தியில் காங்கிரஸ் இல்லாத ஒரு கட்சி 5 ஆண்டுகள் முழுமையாக ஆட்சி செய்த வரலாறு வாஜ்பாய் தலைமையில் படைக்கப்பட்டது. அவரின் தலைமையில் 6 ஆண்டுகள் பணியாற்றியதை மிகவும் பெருமையாகக் கொள்கிறேன். எனக்கு மூத்த சகோதரராகஇருந்து, எப்போதும் என்னை நல்வழிப்படுத்தி, நேர்மறையான பாதையில் செல்ல வழிகாட்டியாக வாஜ்பாய் இருந்தார். என்னுடைய 65 ஆண்டுகால நெருங்கிய நண்பரை இழந்துவிட்டேன்''.

இவ்வாறு அத்வானி வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x