Last Updated : 16 Aug, 2018 06:47 PM

 

Published : 16 Aug 2018 06:47 PM
Last Updated : 16 Aug 2018 06:47 PM

இந்தியாவில் முதல் முறை: மும்பை உயிரியல் பூங்காவில் பென்குயின் பறவை குஞ்சு பொரித்தது

 நாட்டிலேயே முதன்முறையாக பனிப்பிரதேசங்களில் வாழக்கூடிய பென்குயின் பறவை முட்டையிட்டு குஞ்சு பொரித்துள்ளது.

அண்டார்டிகா போன்ற மிகுந்த குளிர் பிரதேசங்களில் வாழக்கூடிய பென்குயின் குஞ்சுகள் இந்தியாவின் காலநிலையில் வாழ்ந்து முட்டையிட்டுக் குஞ்சு பொரித்துள்ளது இதுதான் முதல்முறையாகும்.

கடந்த 2016-ம் ஆண்டு தென் கொரியாவில் இருந்து ஹம்போல்ட் வகை 6 பென்குயின் பறவைகள் வாங்கப்பட்டன. இந்தப் பறவைகள், மும்பையில் உள்ள பைகுல்லா உயிரியல் பூங்காவில் வளர்க்கப்பட்டு வந்தன.

இந்தப் பென்குயின்களில் பெண் பறவை, கடந்த ஜூலை மாதம் முட்டையிட்ட நிலையில், ஏறக்குறைய 40 நாட்கள் இன்குபேட்டரில் பாதுகாக்கப்பட்ட நிலையில், சுதந்திரன தினமான நேற்று இரவு 8 மணிக்கு முட்டையில் இருந்து பென்குயின் குஞ்சு வெளியே வந்தது.

இதுவரை இந்தியாவில் எந்தவிதமான பென்குயின் குஞ்சும் பிறக்காத நிலையில், முதல் முறையாகப் பிறந்தது பூங்காவில் உள்ளவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இது குறித்து பைகுல்லா உயிரியல் பூங்காவின் இயக்குநர் சஞ்சய் திரிபாதி கூறுகையில், ''தாய் பென்குயின் பறவைக்கு பிளப்பர் என பெயரிட்டோம். கடந்த ஜூலை மாதம் 5-ம் தேதி பிளப்பர் முட்டையிட்டது. இந்த முட்டையை ஏறக்குறைய 40 நாட்கள் இன்குபேட்டரில் பாதுகாத்த நிலையில், ஆகஸ்ட் 15-ம் தேதி இரவு 8 மணிக்கு முட்டையில் இருந்து குஞ்சு வெளியே வந்தது. தாய் பறவையைப் போலவே குஞ்சும் சுறுசுறுப்பாக இருக்கிறது.

கடந்த 2016-ம் ஆண்டு தென் கொரியாவில் இருந்து ஹம்போல்ட் வகை 8 பென்குயின்கள் வாங்கப்பட்டன. இதில் ஒரு பென்குயின் காலநிலை ஒவ்வாமை காரணமாக இறந்துவிட்டது. மீதம் இருந்த 7 பென்குயின் பறவைகளில் இப்போது ஒரு பறவை முட்டை இட்டு குஞ்சு பொரித்தது.

பென்குயின் பறவைக்கு ஏற்ற காலநிலையை உயிரியல் பூங்காவில் உருவாக்கி இருக்கிறோம். 12 டிகிரி முதல் 15 டிகிரி குளிர் இருக்குமாறு குளிர்சாதன வசதி செய்திருக்கிறோம். இப்போது புதிய வரவாகக் குஞ்சு பிறந்துள்ளதால் உணவுகள், காலநிலையைக் கூடுதல் அக்கறையுடன் பராமரிப்போம்''.

இவ்வாறு திரிபாதி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x