Published : 16 Aug 2018 02:38 PM
Last Updated : 16 Aug 2018 02:38 PM

கேரள மக்களுக்கு உதவி: போர்வை விற்கும் வடமாநில இளைஞர் ஒட்டுமொத்த இருப்பையும் இலவசமாக அளித்து நெகிழ்ச்சி

கேரள மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, போர்வைகள் விற்பனை செய்து வந்த மத்தியப் பிரதேச இளைஞர் ஒருவர் தனது ஒட்டுமொத்த இருப்பையும் மக்களுக்கு வழங்கி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்து, கேரளாவில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக மழை கொட்டித் தீர்த்துவருகிறது. இதுவரை 70-க்கும் மேற்பட்ட மக்கள் மழையினாலும், நிலச்சரிவாலும் பலியாகியுள்ளனர். 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உதவிகளைக் கேரள அரசு செய்து வந்தாலும், உதவும் உள்ளங்களிடம் இருந்து உதவிகளைக் கேட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏறகெனவே மலையாள திரையுல நடிகர்கள், நடிகைகள், தொழிலதிபர்கள், நிறுவனங்கள் சார்பில் நிதியுதவி அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், வெளிமாநிலத்தில் இருந்து கேரளாவில் தங்கி வியாபாரம் செய்துவரும் மத்தியப்பிரதேச இளைஞர் ஒருவர் கேரள மக்கள் படும் துன்பத்தைப் பார்த்து தான் விற்பனைக்காக வைத்திருந்த ஆயிரக்கணக்கான போர்வைகள், துணிகளையும் நிவாரண உதவிக்காக அளித்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப்பிரதேசம், உஜ்ஜைனி மண்டலம் நிமுச் மாவட்டத்தைச் சேர்ந்தவர் விஷ்ணு கச்சாவா. இவர் தன்னுடைய 16 வயதில் இருந்து கண்ணூர் அருகே இரிட்டி பகுதியில் போர்வைகள், துணிகளை விற்பனை செய்து வருகிறார். இவருக்குத் திருமணமாகி மனைவி, 2 குழந்தைகளுடன் கண்ணூரில் வசித்து வருகிறார்.

நாள்தோறும் தனது தோளிலும், சிறிய வண்டியிலும் போர்வைகளையும், துணிகளையும் வைத்து கண்ணூர் சுற்றுப்பகுதிகளில் வியாபாரம் செய்து வருகிறார். அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், வீடுகள், கடைகளுக்குச் சென்று விற்பனை செய்து வருகிறார்.

இந்நிலையில், வழக்கம் போல் கடந்த சில நாட்களுக்குமுன் இரிட்டி தாலுகா அலுவலகத்துக்கு சென்று தனது போர்வைகள், துணிகளை விற்க விஷ்ணு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த துணை தாசில்தார் லட்சுமணன், மழை கடுமையாக பெய்துவரும் போது எங்கே சென்று போர்வைகளை விற்பனை செய்ய முடியும், பாதுகாப்பாக இருங்கள் என்று கூறி அனுப்பியுள்ளார்.

ஆனால், விஷ்ணு தான் போர்வைகள் விற்பனை செய்ய வரவில்லை, என்னிடம் இருக்கும் போர்வைகள், துணிகள் அனைத்தையும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவசமாக அளிக்க இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். இதைக் கேட்ட துணை தாசில்தார் லட்சுமணன் நெகிழ்ச்சி அடைந்து, மாங்காடு பகுதியில் உள்ள அடிச்சுக்கூச்சி அரசுப் பள்ளியில் தங்கவைக்கப்பட்டு இருக்கும் மக்களுக்கு இந்த போர்வைகளை விஷ்ணு நேரடியாக வழங்க ஏற்பாடு செய்தார்.

இது குறித்து விஷ்ணுனு ஊடகங்களிடம் கூறுகையில், ‘‘என்னுடைய 16 வயதில் இருந்தே நான் கேரளாவில்தான் வசிக்கிறேன். எனது பெற்றோர் மத்தியப்பிரதேசத்தில் இருக்கிறார்கள். என்னை கேரளாவோடு பிரித்துப் பார்ப்பது கடினம். கண்ணூர் எனக்கு இரண்டாவது தாய்வீடாகும். என்னை பொருளாதார ரீதியாக சிறப்பாக உருவாக்கியது கேரள மக்கள்தான்

தொடக்கத்தில் மொழிதெரியாமல் இருந்ததால், என்னை இங்குள்ள மக்கள் தனிமைப்படுத்தி பார்த்துப் பழகுவதில் தயக்கம் காட்டினார்கள். ஆனால், நான் மலையாள மொழியைக் கற்றபின் என் மீது மிகுந்த அக்கறையுடன் வியாபாரம் செய்கிறார்கள். எனக்கு வாழ்வு அளித்த கேரள மக்கள், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இருக்கும் போது, அதைப் பார்த்துக் கொண்டு  என்னால் இருக்க முடியாது.

என்னால் முடிந்த உதவி, என்னிடம் இருக்கும் போர்வைகள், துணிகளை உதவியாக அளிப்பதுதான். தாசில்தாரைப் பார்த்து செய்ய வேண்டிய உதவியை அளித்துவிட்டேன்.கேரள மக்கள் எனக்கு ஏராளமான உதவிகள் செய்திருக்கிறார்கள். அவர்களுக்கு நான் செய்யும் சிறிய உதவி’’ எனத் தெரிவித்தார்.

விஷ்ணுவின் இந்தப் பேட்டியும், புகைப்படமும் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x