Published : 15 Aug 2018 08:26 PM
Last Updated : 15 Aug 2018 08:26 PM

கலங்கி நிற்கும் கடவுள் தேசம்: தொடர் மழையும், வெள்ள பாதிப்பும்-சில முக்கியத் தகவல்கள்

1. கேரள மாநிலத்தில் 5-நாட்களுக்கும் மேலாகத் தொடர்ந்து பெய்துவரும் பெருமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கால் பலியானவர்கள் எண்ணிக்கை 47-ஆக உயர்ந்துள்ளது.

2. கேரள வரலாற்றிலேயே 39 அணைகளில் 35 அணைகள் முதல் முறையாகத் திறக்கப்பட்டு நீர் வெளியேற்றப்பட்டு வருகின்றன.

3. 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மழை 4 நாட்களுக்கு நீடிக்கும் என்று இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது

4. தமிழக கேரள எல்லையில் அமைந்துள்ள முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியதால், அணையின் 13 மதகுகள் வழியாக கேரளாவின் பகுதிக்கு நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், இடுக்கி அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது

5. இடுக்கி அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது

6. கொச்சி சர்வதேச விமான நிலையத்தின் சேவை சனிக்கிழமை நண்பகல்வரை ரத்து செய்யப்பட்டுள்ளது

7. புனலூர்-செங்கோட்டை இடையிலான ரயில்பாதையில் பாறைகள் சரிந்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. இதனால், ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகின்றன.

8. கொல்லம்-சென்னை எழும்பூர் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் கொல்லத்தில் இருந்து புறப்படும். கொல்லம்-நாகர்கோவில் இடையே ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

9. திருவனந்தபுரம்-திருச்சி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவில் வழியாக இயக்கப்படுவது ரத்து செய்யப்பட்டுள்ளது

10. கன்னியாகுமரி-மும்பை எக்ஸ்பிரஸ் ரயில் கன்னியாகுமரியில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக நெல்லை, மதுரை, திண்டுக்கல், ஈரோடு வழியாகச் செல்லும்.

11. மலப்புரத்தில் அனைத்துக் கல்லூரி, பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் அமித் மீனா உத்தரவிட்டுள்ளார்

12. எர்ணாகுளம் மாவட்டம் முழுவதும் 16,17-ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது

13. திருவனந்தபுரம் மாவட்டம், திருச்சூர் மாவட்டம், வயநாடு மாவட்டம் முழுவதும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

14. நாளை மற்றும் நாளை மறுநாள் நடக்க இருந்த அனைத்துத் தேர்வுகளையும் கேரள உடல்நல அறிவியல் பல்கலைக்கழகம் ஒத்திவைத்துள்ளது. புதிய தேர்வுத்தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும். அதேபோல, கேரள பல்கலையின் சார்பில் 16,17-ம் தேதி நடக்க இருந்த அனைத்துத் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

15. ஆலப்புழா மாவட்டம், அர்துங்கல் பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் 14 கடல்மைல் தொலைவில் சென்றபோது மாயமானார்கள். கடந்த 4 நாட்களுக்கு முன் 7 மீனவர்கள் சென்ற நிலையில், 4 பேர் மட்டுமே ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டுள்ளனர்.

16. மலப்புரம் மாவட்டம், வளையூர் அருகே பெருங்காவு நகரில் இன்று ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் சிக்கி 8 பேர் பலியானார்கள். மேலும் புலிக்கல் அருகே கைதாகுண்டா பகுதியிலும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் நிலச்சரிவில் சிக்கி பலியானார்கள்.

17. சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று நிறைபுத்தரி பூஜை நடக்க இருந்தது. ஆனால், பம்பை நதியில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், கோயிலுக்குச் செல்லமுடியாமல், சபரிமலை ஐயப்பன் கோயில் தந்திரி கண்டரரு மகேஸ்வரரு மோகனரரு தவித்து வருகிறார்.

18. திருவாங்கூர் தேவஸ்தான நிர்வாக அதிகாரி டி சுதீஸ்குமார் உள்ளிட்ட சில அதிகாரிகள் வல்லக்கடவு, புல்மேடு வழியாக சபரிமலைக்குச் சென்றுள்ளனர். ஆனால் புல்மேட்மேட்டில் இவர்கள் சிக்கி இருக்கிறார்கள் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

19. அதிரப்பள்ளி, வளச்சல், தும்பூர்மூழிபூங்கா, பேச்சி அணை, ஸ்கதீரம் கடற்கரை பூங்கா, விலங்கன்குன்னு, பூமாமாலை அணை ஆகிய சுற்றுலாத்தளங்களுக்கு பயணிகள் வருகை தடைசெய்யப்பட்டுள்ளது

20. அங்கமாலி, கனக்கன் கடவு, புத்தன்வேலிக்கரா, அங்கமாலி-மலா, ஆலுவா-கனக்கன்கடவு-புத்தன்வேலிக்கரா, ஆலுவா-மலா இடையே பஸ் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x