Last Updated : 15 Aug, 2018 07:23 PM

 

Published : 15 Aug 2018 07:23 PM
Last Updated : 15 Aug 2018 07:23 PM

“பாரத மாதா சோகமாக இருப்பதை கொடி உணர்த்திவிட்டது”: அமித் ஷா குறித்து அரவிந்த் கேஜ்ரிவால் கிண்டல்

பாஜக தலைவர் அமித் ஷா தேசியக் கொடி ஏற்றுவதற்குப் பதிலாக இறக்கிய நிகழ்வு குறித்து கருத்துத் தெரிவித்துள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், பாரத மாதா சோகமாக இருப்பதைத்தான் தேசியக்கொடி உணர்த்தியது என்று கிண்டல் செய்துள்ளார்.

நாட்டின் 72-வது சுதந்திரதினம் இன்று நாடுமுழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. டெல்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில் தேசியத் தலைவர் அமித் ஷா தேசியக் கொடி ஏற்றினார். அப்போது, தேசியக் கொடியை ஏற்றுவதற்குப் பதிலாக, அவர் கீழே இறக்கினார், பின்னர் பதற்றமடைந்து, மீண்டும் கொடியை மேல்நோக்கி ஏற்றினார். இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது.

இந்த வீடியோவை வெளியிட்டு காங்கிரஸ் கட்சியும் கிண்டல் செய்திருந்தது. தேசபக்தியை பேசுபவர்கள், இதைவிடத் தேசியக்கொடிக்கு அவமரியாதை செய்ய முடியாது எனக் கிண்டல் செய்திருந்தது.

இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால் அமித்ஷா கொடி ஏற்றிய சம்பவம் குறித்து ட்விட்டரில் கிண்டல் செய்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

இயற்கை சில நேரங்களில் வித்தியாசமான வழிகளில் பணியாற்றுகிறது. ஒருவர் எவ்வளவுதான் வலிமையாக இருந்தாலும், இயற்கையின் முன் அடிபணிந்து, தலை குனிந்துதான் நிற்க வேண்டும். நாட்டின் தேசியக் கொடி அமித் ஷாவின் கைகளில் இருந்து பறக்க மறுத்துவிட்டது. பாரத மாதா தான் சோகமாக இருக்கிறேன் என்பதைத் தேசியக்கொடி மூலம் உணர்த்திவிட்டார் எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x