Last Updated : 15 Aug, 2018 03:10 PM

 

Published : 15 Aug 2018 03:10 PM
Last Updated : 15 Aug 2018 03:10 PM

மழையில் மிதக்கிறது கேரளா; 24 மணிநேரத்துக்கு மிகக் கனமழைக்கு எச்சரிக்கை; முல்லை பெரியாறில் இருந்து நீர்திறப்பு: 12 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’

தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கேரள மாநிலத்தில் கடந்த 4 நாட்களுக்கும் மேலாகப் பெருமழை கொட்டித் தீர்த்து வருகிறது.

முல்லைபெரியாறு அணை 142 அடியை எட்டிவிட்டதால், உபரிநீர் கேரளாவுக்குத் திறந்துவிடப்பட்டுள்ளதால், 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

மழைவெள்ளம், நிலச்சரிவில் சிக்கி இதுவரை 47-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். கொச்சி விமான நிலையம் சனிக்கிழமை வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, கேரள மாநிலத்தில் மழை கடந்த ஒரு வாரமாகத் தீவிரமடைந்துள்ளது. மாநிலத்தில் உள்ள 20-க்கும் மேற்பட்ட அணைகள் நிரம்பித் திறந்துவிடப்பட்டுள்ளன. 14 மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

கடந்த 5 நாட்களில் மட்டும் 47 பேர் வெள்ளத்தாலும், நிலச்சரிவாலும் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் வீடுகளையும், உடைமைகளையும் இழந்து, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதனால், மாநிலமே மழையின் காரணமாக சோகத்தில் மூழ்கியுள்ளது. இந்த ஆண்டு ஓணம் கொண்டாட்டத்தையும் கேரள அரசு ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.

இதற்கிடையே மழையின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இன்னும் 24 மணிநேரத்துக்கு கேரளாவில் மிக, மிக கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது, மணிக்கு 60 கி.மீ வேகத்தில் காற்றுவீசக்கூடும் என்று இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதனால், மழையின் தாக்கமும், வெள்ளத்தின் தாக்கமும் மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

முல்லை பெரியாறு அணை திறப்பு

ஏற்கனவே இடுக்கி அணை அதன் முழுக் கொள்ளவை எட்டிவிட்டதால், 5 மதகுகளும்திறந்துவிடப்பட்டுள்ளன, அணைக்கு வரும் ஒட்டுமொத்த நீரும்வெளியேற்றப்பட்டு வருகிறது. இதற்கிடையே முல்லை பெரியாற்றின் அணை மட்டம் 142 அடியை எட்டிவிட்டதால், அணைக்கு வரும் நீர் தேக்கடிப் பகுதியில் இருக்கும் மதகுகள் வழியாகத் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த நீர் அனைத்தும் இடுக்கி அணைக்குச் செல்வதால் இடுக்கு அணையில் இருந்து அதிக அளவு நீர் வெளியேற்றும் வாய்ப்பு உள்ளது.

முல்லைபெரியாறு அணையின் 13 மதகுகளும் திறக்கப்பட்டு வினாடிக்கு 2,200கன அடிநீர் வெளியேற்றப்பட்டுவருகிறது. இதனால், கரையோரப் பகுதிகளில் வசித்த 4 ஆயிரம் குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் 32 மாதங்களுக்குப் பின் அதன் முழுக்கொள்ளளவான 142 அடியை எட்டியுள்ளது. இதற்கு முன் கடந்த 2015 டிசம்பர், 2014 நவம்பரில் 142 அடியை எட்டியது. இதுதவிர சுரங்கப்பாதை வழியாகத் தமிழகத்தில் தேனிமாவட்டம், கம்பம் பள்ளத்தாக்கு விவசாயத்துக்காக வினாடிக்கு 2,187 கன அடிநீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த நீர் வைகை அணையில் தேக்கப்பட்டுவருவதால், வைகை அணையின் நீர் மட்டம் 62 அடியை எட்டியுள்ளது.

12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

மேலும், பாலக்காடு மாவட்டத்தில் உள்ள காஞ்சிரப்புழா அணையும் முழுக்கொள்ளவை எட்டிவிட்டதால், அணையில் இருந்து நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக கேரளத்தில் வெள்ளம் சூழப்பட்டுள்ள 14 மாவட்டங்களில், 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

விமானநிலையம் மூடல்

Kochi airportjpgகொச்சி விமானநிலையத்தின் தடுப்புச்சுவர்களை இடித்து தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர்.100 

கொச்சி நகரில் இடைவிடாது மழை பெய்துவருதால், விமானநிலையத்துக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது. இதனால், விமானத்தை இயக்கமுடியாமல், விமானங்கள் வேறு விமான நிலையத்துக்குத் திருப்பிவிடப்பட்டுள்ளன. வரும் சனிக்கிழமை வரை விமானநிலையம் மூடப்படுவதாக விமானசேவை ரத்து செய்யப்படுவதாக விமானநிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது.

ரயில்கள் தாமதம்

மேலும், குழித்துறை, இரனியல் ரயில் நிலையத்துக்கு இடைப்பட்ட பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால், குருவாயூர்-சென்னை எழும்பூர் விரைவு ரயில், கன்னியாகுமரி-மும்பை, திப்ருகார்க்-கன்னியாகுமரி விவேக் எக்ஸ்பிரஸ், காந்திதாம்-நெல்லை ஹம்சபர் எக்ஸ்பிரஸ் ரயில் ஆகியவை தாமதமாக சென்றுள்ளன.

மோசமான வானிலை, மழை காரணமாக, கொல்லம், புனலூர், செங்கோட்டை ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. திருவனந்தபுரம்-திருச்சூர் ரயில்பாதையில் தண்ணீர் தேங்கி இருப்பதால், ரயில்கள் மெதுவாக இயக்கப்பட்டு வருகின்றன, இதனால், பலரயில்கள் தாமதமாகப் புறப்பட்டு செல்கின்றன.

மிக கனமழைக்கு எச்சரிக்கை

இதற்கிடையே அடுத்த 24 மணிநேரத்துக்குத் திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, பத்தினம்திட்டா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், கோழிக்கோடு மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும், மணிக்கு 60,கி.மீ வேகத்தில் காற்றுவீசக்கூடும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.

காசர்கோடு முதல் திருவனந்தபுரத்தின் வடபகுதிவரை உள்ள அனைத்து ஆறுகளும் அபாய அளவைத் தாண்டி செல்கின்றன. 22 அணைகளும் திறந்துவிடப்பட்டுள்ளதால், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x