Published : 15 Aug 2018 02:20 PM
Last Updated : 15 Aug 2018 02:20 PM

சுதந்திரதின உரையில், பாரதியார் கவிதையை மேற்கோள் காட்டி பேசிய பிரதமர் மோடி

 

நாட்டின் 72-வது சுதந்திரதினத்தனமான இன்று பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றும்போது, மகாகவி பாரதியாரின் கவிதையை மேற்கோள்காட்டிப் பேசினார்.

நாட்டின் 72-வது சுதந்திரதினம் இன்று நாடுமுழுவதும் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். முப்படைகளின் அணிவகுப்பையும் ஏற்று, நாட்டு மக்களுக்குச் சுதந்திர வாழ்த்துக்களைப் பிரதமர் மோடி தெரிவித்தார். அதன்பின் நாட்டு மக்களுக்குப் பிரதமர் மோடி உரையாற்றினார்.

இந்த உரையில் மத்திய அரசின் திட்டங்கள், சாதனைகள், நாட்டின் வளர்ச்சி, பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசினார். அப்போது, தமிழகத்தின் மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் கவிதையை மேற்கோள்காட்டி, தமிழலில் கவிதையைக் கூறி பிரதமர் மோடி பேசினார்.

பாரதியாரின் பாரத சமுதாயம் வாழ்கவே என்ற பாடலில் உள்ள வரிகளைச் சுட்டிக்காட்டி மோடி பேசினார். ”எல்லோரும் அமரநிலையை எய்தும் நன்முறையை இந்தியா உலகிற்கு அளிக்கும்” என்ற வாக்கியத்தைக் கூறி மோடி பேசினார்.

இந்தியா உலகிலேயே மிகச்சிறந்த நாடாக மட்டும் திகழாமல், மற்ற நாடுகளுக்கும் முன்னுதாரணமாக இருக்கும். அனைத்துத் தடைகளையும் கடந்து, அனைத்து நாடுகளுக்கும் வழிகாட்டியாகத் திகழும் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டு பேசினார்.

இதற்கு முன்பு கடந்த 2015-ம் ஆண்டு இலங்கை நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி சிலப்பதிகாரத்தில் கண்ணகி குறித்தும், மகாகவி பாரதியார் குறித்தும் மேற்கோள்காட்டிப் பேசி இருந்தார். குறிப்பாகச் சிந்து நதியின் மிசை என்ற பாடலை மேற்கோள்காட்டி மோடி பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x